வெளியிடப்பட்ட நேரம்: 23:00 (11/11/2017)

கடைசி தொடர்பு:23:00 (11/11/2017)

தூர்வாரியதா பொதுப்பணித்துறை? - ஸ்கேன் ரிப்போர்ட்!

வடிகால் வாய்க்கால் ஒன்றை தூர்வாரப்பட்டதாக கணக்குக்காட்டிய பொதுப்பணித்துறை, மக்கள் போராட்டம் வெடித்தவுடன், `பழசை கிளப்பாதீங்க" என்று கூறி அதே வாய்க்காலை தூர்வாரிக் கொண்டிருப்பது பெரும் பரபரப்பைக் கிளப்பியிருக்கிறது.  

நாகை மாவட்டம், தரங்கம்பாடி அருகே அரசூர், காருகுடி, விளங்கவாசல், கொத்தங்குடி ஆகிய விவசாய கிராமங்களுக்கு வெள்ள வாய்க்கால் ஒன்றுதான் வடிகால். இதனைக் கடந்தாண்டு தூர்வாரியதாக பொதுப்பணித்துறை கணக்குகாட்டி பணமாக்கியிருக்கிறது.  ஆனால், இந்த வாய்க்கால் தூர்வாரப்படாததால் தற்போது பெய்த கனமழையால் நான்கு கிராமத்தில் சுமார் ஆயிரம் ஏக்கர் சம்பா பயிர்கள் நீரில் மூழ்கின.  

இதுபற்றி விவசாயிகள், மயிலாடுதுறை தொகுதி முன்னாள் எம்.எல்.ஏ.,வான அருட்செல்வனிடம் முறையிட்டார்கள்.  தனக்கும் தெரியாமல் தனது சொந்த கிராமமான அரசூர் வடிகால் வாய்க்கால் எப்போது தூர்வாரப்பட்டது? என்று கொதித்தெழுந்த அருட்செல்வன், இதுபற்றி அதிகாரிகளிடம் விளக்கம் கேட்டார். முறையான பதில் இல்லாததால், நவம்பர் 10-ம் தேதி நான்கு கிராம விவசாயிகளை ஒன்றுதிரட்டி சாலைமறியல் நடைபெறும் என அறிவித்தார்.  உடனே ஓடோடிவந்த பொதுப்பணித்துறை அதிகாரிகள், வெள்ளவாய்க்காலை தூர்வாரும் பணியை மேற்கொண்டு வருகின்றனர்.  

இதுபற்றி தி.மு.க.வைச் சேர்ந்த முன்னாள் எம்.எல்.ஏ., அருட்செல்வனிடம் பேசியபோது, ``அரசூர் எனது சொந்த கிராமம்.  இந்த வடிகால் வாய்க்காலை தூர்வாரச் சொல்லி பலமுறை முறையிட்டும் செய்துதரவில்லை. இதனால் சுமார் ஆயிரம் ஏக்கர் பயிர்கள் மூழ்கியதால் விவசாயிகள் வேதனை தெரிவித்தனர். இதனை தூர்வாரச் சொல்லி வலியுறுத்தியபோது, பொதுப்பணித்துறையினர் மழுப்பினர். எனது தலைமையில் போராட்டம் நடைபெறும் என அறிவித்தபோது, உடனே வந்த அதிகாரிகள் `பழசைக் கிளப்பாதீங்க, உங்களுக்கு இப்போதே தூர்வாரித் தருகிறோம்' என்று கூறி, பொக்லைன் இயந்திரத்தை அனுப்பி வைத்தனர்.  அது செல்வதற்குச் சாலை வசதி சரியாக இல்லை. அதற்கு மண்மூட்டைகள் நாங்களே தயார் செய்துத் தந்தோம். தற்போது, பணிகள் நடந்துகொண்டிருக்கிறது. பொதுப்பணித்துறையின் தில்லு, முல்லுக்கு இதுவே ஒரு சாட்சி' என்றார்.  

 

 

நீங்க எப்படி பீல் பண்றீங்க