அரசு போக்குவரத்துக்கழகத்தை லாபத்தில் இயக்க நடவடிக்கை எடுங்கள்..! அன்புமணி ராமதாஸ் கோரிக்கை

அரசுப் போக்குவரத்துக்கழக நிர்வாகத்தை சீரமைத்து, அனைத்து போக்குவரத்துக் கழகங்களையும் லாபத்தில் இயக்க நடவடிக்கை எடுக்கவேண்டும் என்று அன்புமணி ராமதாஸ் தெரிவித்துள்ளார். 


அரசு போக்குவரத்துக்கழக விவகாரம் தொடர்பாக பா.ம.க. இளைஞரணித் தலைவர் அன்புமணி ராமதாஸ் வெளியிட்டுள்ள அறிக்கையில், 'தமிழ்நாடு அரசுப் போக்குவரத்துக் கழகங்களின் பொருளாதார நிலை குறித்து தகவல் பெறும் உரிமைச் சட்டத்தின் மூலம் பெறப்பட்ட தகவல்கள் மிகவும் அதிர்ச்சி அளிக்கின்றன. அரசுப் போக்குவரத்துக் கழகங்களின் 3 கோட்டங்களுக்கு சொந்தமான சொத்துகள் 2,494 கோடி ரூபாய்க்கு நிதி நிறுவனங்களிடம் அடகு வைக்கப்பட்டிருக்கின்றன.

மற்றக் கோட்டங்களின் நிதிநிலையும் மிகவும் மோசமாகவே உள்ளது. போக்குவரத்துக் கழகங்களின் கடன்சுமை குறைந்தபட்சம் 20 ஆயிரம் கோடி ரூபாயைத் தாண்டிவிட்ட நிலையில், அதற்கான வட்டி சுமையே ஆண்டுக்கு 2 ஆயிரம் கோடி ரூபாய்க்கும் அதிகமாக இருக்கும். இதேநிலை நீடித்தால் அடுத்த சில ஆண்டுகளில் போக்குவரத்துக்கழகங்களின் கடன்கள் அடைக்க முடியாத அளவுக்கு அதிகரித்து விடும். அத்தகைய சூழலில் அரசுப் போக்குவரத்துக்கழக சொத்துக்களை ஏலத்தில் விற்பனை செய்து, கழகங்களை மூடுவதைத் தவிர வேறு வழியில்லை என்ற நிலை உருவாகிவிடும். 

அப்படி ஒரு நிலை ஏற்பட்டால் பொதுப்போக்குவரத்து என்பதே ஏழைகளுக்கு எட்டாத ஒன்றாகிவிடும். தனியார் போக்குவரத்து நிறுவனங்கள் வைத்தது தான் சட்டம் என்றாகிவிடும். அதைத் தடுக்கும் வகையில் மின்வாரியக் கடன்சுமையை குறைக்க உதய் திட்டத்தை செயல்படுத்தியது போன்று, அரசுப் போக்குவரத்துக் கழகங்களின் கடன் சுமையையும் அரசே ஏற்கும் வகையில் புதிய திட்டத்தை தமிழக அரசு உருவாக்கி செயல்படுத்த வேண்டும். போக்குவரத்துக் கழகங்களுக்கு அரசு வழங்க வேண்டிய அனைத்து நிலுவைகளையும் வழங்க வேண்டும். அத்துடன் அரசு போக்குவரத்துக்கழக நிர்வாகத்தை சீரமைத்து, அனைத்து போக்குவரத்துக் கழகங்களையும் லாபத்தில் இயக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்' என்று குறிப்பிட்டுள்ளார். 
 

Do you like the story?

Please Appreciate the Author by clapping!