வெளியிடப்பட்ட நேரம்: 17:30 (12/11/2017)

கடைசி தொடர்பு:08:45 (13/11/2017)

தனுஷ்கோடியில் கடல் அரிப்பைத் தடுக்க இயற்கை அரண்! 10 ஆயிரம் பனை மரங்கள் விதைப்பு

தனுஷ்கோடி கடல் பகுதியில் கடல் அரிப்பால் ஏற்படும் பாதிப்புகளில் இருந்து நிலப் பகுதிகளைப் பாதுகாக்கும் வகையில் 10 ஆயிரம் பனை மர விதைகள் நடப்பட்டுவருகின்றன.

நாட்டின் மிகச் சிறந்த துறைமுக நகரங்களில் ஒன்றாக விளங்கியது தனுஷ்கோடி. 1964-ம் ஆண்டு ஏற்பட்ட ஆழிப்பேரலையினால் கடலில் மூழ்கி, மனிதர்கள் வாழத் தகுதியற்றப் பகுதியாக மாறியது. ஆனாலும் மீனவர்கள் தங்களின் வாழ்வாதாரத்துக்காகவும், புயலில் மிஞ்சிய கட்டட இடிபாடுகளை காண்பதற்காக சுற்றுலாப் பயணிகளும் தனுஷ்கோடி பகுதிக்குச் சென்றுவருகின்றனர். 53 ஆண்டுகளுக்கு முன் துண்டிக்கப்பட்ட தனுஷ்கோடிக்கான சாலை வசதி கடந்த ஜூலை மாதம் மீண்டும் ஏற்படுத்தப்பட்டது.

நாட்டின் பாதுகாப்பு கருதி அது தொடர்பான நடவடிக்கைகளுக்காகவும், சுற்றுலாப் பயணிகள் மற்றும் யாத்திரைவாசிகள் தனுஷ்கோடி அரிச்சல் முனைப் பகுதி வரை வாகனங்களில் எளிதாக சென்று திரும்பும் வகையில் ரூ.59 கோடி செலவில் சாலை வசதி ஏற்படுத்தப்பட்டு பிரதமர் மோடி அதைத் திறந்துவைத்தார். இந்நிலையில், கடல் சீற்றத்தினால் இந்தச் சாலை பயன்பாட்டுக்கு வரும் முன்னரே சேதமடைந்தது. இதை சீரமைக்க 12 கோடி ரூபாய் செலவில் தடுப்புச் சுவர்கள் அமைக்கப்பட்டுள்ளது.

தனுஷ்கோடி சாலையில் பனை மர கொட்டைகள் விதைக்கும் பணி

ஆனாலும், தனுஷ்கோடி சாலை மற்றும் நிலப்பரப்புகளை கடல் அரிப்பில் இருந்து பாதுகாக்கும் வகையில்  இயற்கையான தடுப்புகளை ஏற்படுத்த மாவட்ட நிர்வாகம் நடவடிக்கைகள் மேற்கொண்டுவருகிறது. அதன்படி, தனுஷ்கோடி சாலையின் இருபுறங்களிலும் இயற்கை தடுப்பான பனை மரங்களை வளர்க்க மாவட்ட ஆட்சியர் நடராஜன் உத்தரவிட்டிருந்தார்.

இதையடுத்து, ராமேஸ்வரம் நகராட்சியின் சார்பில் ராமகிருஷ்ணபுரம் முதல் தனுஷ்கோடி அரிச்சல்முனைப் பகுதி வரை சாலையின் இரு புறங்களிலும் 10 ஆயிரம் பனை மர விதைகளை நடும் பணியை சுகாதார ஆய்வாளர் ஐயப்பன் தலைமையில் நகராட்சி ஊழியர்கள் இன்று துவக்கினர். தண்ணீரோ, பராமரிப்போ தேவையன்றி வளரும் பனைமரங்கள், இப்பகுதியில் வளர்வதன் மூலம் கடல் அரிப்புகளில் இருந்து தனுஷ்கோடி சாலைக்கு நிரந்தர பாதுகாப்பு கிடைக்கும் என்கிறார்கள்.