“சசிகலா குடும்பத்துடன் கட்சியைத் தாண்டிய தொடர்பு இல்லை!” - புகழேந்தி #VikatanExclusive | There is no party link with Mannargudi family, says pugazhendi

வெளியிடப்பட்ட நேரம்: 09:08 (13/11/2017)

கடைசி தொடர்பு:16:58 (13/11/2017)

“சசிகலா குடும்பத்துடன் கட்சியைத் தாண்டிய தொடர்பு இல்லை!” - புகழேந்தி #VikatanExclusive

றைந்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் தோழி சசிகலாவின் குடும்பம், அவரைச் சேர்ந்த உறவினர்கள் மற்றும் நண்பர்களின் வீடுகள், அலுவலகங்கள் என வருமான வரித்துறை சோதனை நடத்தியது. இதில் கர்நாடக அ.தி.மு.க கட்சி அலுவலகத்தில் நடத்தப்பட்ட சோதனையும் புகழேந்தியின் வீட்டில் நடைபெற்ற சோதனையும் அடக்கம். இதுகுறித்து புகழேந்தி பேசியதிலிருந்து...

pugazanthi

உங்கள் வீட்டில் வருமானவரித்துறையின் ரெய்டு நடந்துள்ளதே... உங்கள் சொத்துமதிப்பு விவரங்களைக் கூற முடியுமா?

1100 சதுர அடியில் கட்டப்பட்டிருக்கும் என் வீடு மட்டும்தான் என்னுடைய பெரிய சொத்து. வீட்டில் இரண்டு குடியிருப்புகளை வாடகைக்கு விட்டுள்ளேன். அதில் கொஞ்சம் வாடகை வருகிறது. வீட்டின் ஒரு பகுதியில் நான், என் மனைவி குணஜோதி, சட்டம் படிக்கும் மகன் சங்கீதன், 10-ம் வகுப்புப் படிக்கும் மகன் ஜெயசிம்மா (விடுதியில் தங்கிப் படிக்கின்றான்), நான்காம் வகுப்புப் படிக்கும் மகள் தர்ஷினிப்ரியா உள்பட ஐந்து பேர் வசித்துவருகிறோம். முன்பு கல்வி தொடர்பான வகுப்புகள் வீட்டில் நடத்திவந்தேன். தற்போது மாணவர்கள் சேர்க்கை இல்லை என்பதால் அதையும் நிறுத்திவிட்டேன். மற்றபடி என் வீட்டில் ரெய்டு நடத்துவதற்கு நான் என்ன அமைச்சரா அல்லது எம்.பியா? 

உங்கள் வீட்டில் ரெய்டு நடத்தும் அளவுக்கு அப்படி என்ன சசிகலா குடும்பத்துடன் உங்களுக்குத் தொடர்பு?

“எனக்கு அ.தி.மு.க என்னும் கட்சி அடிப்படையிலான உறவைத் தவிர மன்னார்குடி குடும்பத்துடன் தனிப்பட்ட அல்லது வியாபார ரீதியிலான தொடர்பு இல்லை. சசிகலா அல்லது தினகரனைக் கடந்து அந்தக் குடும்பத்தில் எவருடனும் எனக்குத் தொடர்பில்லை. தினகரனைத் தவிர அவர்கள் யார் வீட்டுக்கும் நான் சென்றதில்லை. மன்னார்குடியில் ஒரு கூட்டத்தில் எனக்கும் திவாகரனுக்கும் பிரச்னை ஏற்பட்டபோதுகூட என் தலைவர் தினகரன்தான் என்று கூறிவிட்டு வந்தேன்”

officer

விவேக்கின் ‘ஜாஸ் சினிமாஸ்’ தொடர்பாக வருமான வரித்துறை உங்களிடம் விசாரணை செய்ததாகக் கூறுகின்றார்களே?

“என்னுடைய வீட்டில் ரெய்டு நடந்தபோது ’ஜாஸ் சினிமாஸ்’ மற்றும் விவேக் பற்றிக் கேள்விகளைக் கேட்டால் நான் எப்படி பதில் சொல்ல முடியும்? அம்மாவின் மறைவுக்குப் பிறகு அ.தி.மு.க-வில் பிளவு ஏற்பட்டது. அதில் நான் தினகரனின் தலைமையை ஏற்று அரசியல் பணியைத் தொடர்கிறேன். எனக்கு ஜாஸ் சினிமாஸுடன் எந்தவிதத் தொடர்பும் இல்லை”.

உங்கள் வீட்டிலிருந்து வருமான வரித்துறை அதிகாரிகள் என்ன கொண்டு சென்றார்கள்?

“காலையில் 7 மணிக்கு வருமான வரித்துறை அதிகாரிகள் எங்கள் வீட்டுக்குள் நுழைந்தார்கள். அவர்களைப் பார்த்ததுமே என் மகள் பயந்து அழத் தொடங்கிவிட்டாள். வீட்டுக்குள் நுழைந்த வருமான வரித்துறையினருக்கு நாங்கள் குடும்பச் செலவுக்காக வைத்திருந்த 30 ஆயிரம் ரூபாய் தவிர வேற எதுவும் கிடைக்கவில்லை. இங்கே கர்நாடகத்தில் உள்ள கட்சி அலுவலகத்தில் தேடினார்கள். அங்கும் எதுவுமே கிடைக்காததால் வெறும் கையுடன் திரும்பிச் சென்றார்கள்”.

raide

 

உங்கள் வீட்டில் நடந்த ரெய்டின் பின்னணியில் யார் இருப்பதாக நீங்கள் நினைக்கிறீர்கள்? 

“யார் வேண்டுமானாலும் காரணமாக இருக்கலாம். ஆனால் அவர்கள், டி.டி.வி மற்றும் சசிகலா தரப்பை மட்டும் குறிவைத்து ரெய்டு நடத்தக் காரணம் என்ன? சசிகலா குடும்பத்துடன் நெருக்கமாக இருந்து வியாபார டீலிங் செய்தவர்கள் தற்போது ஆளும் கட்சியில் இருக்கின்றார்கள். திவாகரனை ‘பாஸ்’ என்றவர்கள் தற்போது அமைச்சர்கள். அவர்கள் வீட்டில் எல்லாம் ஏன் ரெய்டு நடத்தப்படவில்லை. அவர்கள் அத்தனைபேரும் உத்தமர்களா? ரெய்டில் ஏன் இத்தனை பாரபட்சம்?. பாரதிய ஜனதா கட்சியையும் அதன் தலைவர்களையும் மேடை மேடையாக விமர்சனம் செய்த ஒரே காரணத்துக்காக என் வீட்டில் ரெய்டு நடத்தப்பட்டது என்றால் அது ஜனநாயகக் குரல் வளையை நெரிப்பதற்குச் சமம். அதற்குக் காலம் பதில் சொல்லும் ”.


டிரெண்டிங் @ விகடன்