வெளியிடப்பட்ட நேரம்: 01:00 (13/11/2017)

கடைசி தொடர்பு:10:39 (13/11/2017)

இரவோடு இரவாக வைக்கப்பட்ட எம்.ஜி.ஆர் சிலையால் காரைக்குடியில் பரபரப்பு!

காரைக்குடியில், இரவோடு இரவாக வைக்கப்பட்ட எம்.ஜி.ஆர் சிலையால்  பரபரப்பு ஏற்பட்டுள்ளது. 
இதுகுறித்து காரைக்குடி நகர் பொதுமக்கள் கூறும்போது...
 
`அடுத்த வாரம் சிவகங்கையில் எம்.ஜி.ஆர் நூற்றாண்டு விழா நடைபெற உள்ளது. காரைக்குடி ஐந்து விளக்குப் பகுதியில், மார்பளவு  எம்.ஜி.ஆர் சிலையை 1984-ம் ஆண்டு  சைக்கிள் ரிக்‌ஷா ஓட்டும் தொழிலாளியான கிருஷ்ணன் என்பவர் குப்பைத்தொட்டி அருகே அமைத்தார். நீண்ட காலமாகிவிட்டதால், சிமென்ட் சிலையான அது சிதைந்துபோக  ஆரம்பித்தது. 
 
2015-ம் ஆண்டு,, குப்பைத் தொட்டியை அகற்றிவிட்டு, வேறு புதிய சிலையைக் கொண்டுவந்தார்கள் அ.தி.மு.க. நிர்வாகிகள். அனுமதியில்லாமல் சிலை வைக்கக்கூடாது என்று பிரச்னைகள் கிளம்பிதால், மீண்டும் பழைய மார்பளவு எம்.ஜி.ஆர் சிலையை அ.தி.மு.க நகரச் செயலாளர் மெய்யப்பன் கொண்டுவந்துவைத்தார். அதோடு கிடப்பில் கிடந்த எம்.ஜி.ஆர் சிலை, தற்போது எந்த அனுமதியும் பெறாமல் 11.11.2017 அன்று இரவோடு இரவாக மீண்டும் நிறுவப்பட்டுள்ளது. இதைக் கண்டு எதிர்க்கட்சியினர் அதிர்ச்சியானார்கள். அதிகாரிகளும்  இதைக் கண்டும் காணாததுபோல இருக்கிறார்கள்' என்கிறார்கள்.
 
சிவகங்கை நகர் மக்கள் பேசும்போது...
 
`கர்மவீரர் காமராஜர் சிலை அரண்மனை வாசல் முன்பு அமைந்துள்ளது. சிவகங்கையில் மார்பளவுச் சிலையை நடிகர் திலகம் சிவாஜி திறந்துவைத்தார். இதுவும் எம்.ஜி.ஆர் சிலையைப் போல சிதைந்துபோனதால், முழு உருவ காமராஜர் சிலை வைக்கப்பட்டு, தற்போது துணியால் கட்டப்பட்டுள்ளது. இன்றைக்கு புதிய சிலை வைப்பதற்கு அனுமதியில்லை. தற்போது, அ.தி.மு.க ஆளும்கட்சி என்பதால், எம்.ஜி.ஆர் சிலையை வைத்துவிட்டார்கள். எம்.ஜி.ஆருக்கு ஒரு நீதி காமராஜருக்கு ஒரு நீதியா?' என்கிறார்கள்.
 
இந்தச் சிலை விவகாரம் நீதிமன்றம் செல்ல இருப்பதாகத் தகவல் ஒரு பக்கம் உலா வருகிறது. இன்னொரு பக்கம், பழைய எம்.ஜி.ஆர் சிலையை போலீஸ் தேடிவருகிறது.

நீங்க எப்படி பீல் பண்றீங்க