ஜி.எஸ்.டி வரியை மக்கள் வரவேற்கிறார்கள்: அமைச்சர் பொன்.ராதாகிருஷ்ணன் திட்டவட்டம் | People welcoming GST - Pon.Radhakrishnan

வெளியிடப்பட்ட நேரம்: 03:15 (13/11/2017)

கடைசி தொடர்பு:08:36 (13/11/2017)

ஜி.எஸ்.டி வரியை மக்கள் வரவேற்கிறார்கள்: அமைச்சர் பொன்.ராதாகிருஷ்ணன் திட்டவட்டம்

ஜி.எஸ்.டி வரியை மக்கள் வரவேற்கிறார்கள் என  அடித்துச் சொல்கிறார், மத்திய அமைச்சர் பொன்.ராதாகிருஷ்ணன் 

 

பொன்/.ராதாகிருஷ்ணன்பல்வேறு நிகழ்ச்சியில் கலந்துகொள்வதற்காக மத்திய அமைச்சர் பொன்.ராதாகிருஷ்ணன் திருச்சி வந்திருந்தார். முன்னதாக, பி.ஜே.பி மண்டல பொறுப்பாளர்கள் சிவசுப்பிரமணியன், கறுப்பு முருகானந்தம், திருச்சி மாவட்டத் தலைவர் தங்க.ராஜய்யன், பார்த்திபன், மாநில வக்கீல் அணி இணைச் செயலாளர் பன்னீர்செல்வம், லீமா சிவக்குமார், இளைஞரணியைச் சேர்ந்த கௌதம் ஆகியோர் சகிதமாக பத்திரிகையாளர்களைச் சந்தித்தார்.

அப்போது அவர்,

“இந்தியாவில், கடந்த ஓராண்டுக்கு முன்பு மத்திய அரசு கொண்டுவந்த பண மதிப்பிழப்பு நடவடிக்கையை மக்கள் முதலில் சிறிது கஷ்டம் என நினைத்தாலும், நாளடைவில் அதை வரவேற்றனர். அதேபோல ஜி.எஸ்.டி வரியை மத்திய அரசு கொண்டுவந்தபோதும், அதை மக்கள் கொஞ்சம் கொஞ்சமாக புரிந்துகொண்டனர். தற்போது வரி கட்டும் முறையில் உள்ள சங்கடங்கள் தீர்ந்துள்ளதால், அதை வரவேற்கிறார்கள்.

கடந்த 9, 10-ம் தேதி நடந்த ஜி.எஸ்.டி கவுன்சிலின் 23-வது கூட்டத்தில், சில திருத்த முடிவுகள் எடுக்கப்பட்டன. அதன்பிறகு, மத்திய நிதி அமைச்சர் அருண் ஜெட்லி, 178 பொருள்கள் ஜி.எஸ்.டி- யின் அதிகபட்ச வரி விகிதமான 28 சதவிகிதத்தில் இருந்து 18 சதவிகிதமாகக் குறைக்க முடிவெடுக்கப்பட்டுள்ளது. குறிப்பாக, உணவு விடுதிகள், மீன் வகைகள் ஆகியவற்றுக்கு 5 சதவிகிதமாக ஜி.எஸ்.டி. வரி குறைக்கப்பட்டுள்ளது. அதேபோல, பட்டாசு தயாரிப்பு ரப்பர் பொருள்கள் தயாரிப்பு, கோவையின் முக்கிய தொழிலான கிரைண்டர் தயாரிப்பு ஆகியவற்றுக்கும் வரி குறைக்கப்பட்டுள்ளது.

இதை, மக்கள் மிகப்பெரிய அளவில் வரவேற்றுள்ளனர். ஜி.எஸ்.டி வரி தேவையை சில மாதங்களில் அனைத்து வியாபாரிகளும் உணர்ந்து வரவேற்பார்கள்.

தமிழகத்தில் நடைபெற்றுவரும் வருமானவரிச் சோதனைக்கு பி.ஜே.பி காரணம் அல்ல. காலம் கடந்து இப்போது சோதனை நடைபெறுவதற்கு வேறு காரணங்கள் கிடையாது. வருமான வரித்துறை என்பது தனி அதிகாரம் படைத்தத்துறை. இந்தத் துறைக்கு வரும் சரியான தகவல்கள், அதன் அடிப்படையில் திரட்டப்படும் ஆதாரங்கள்மூலம் வருமான வரித்துறை சோதனை நடத்திவருகிறது.

சோதனையில் கைப்பற்றப்பட்ட ஆவணங்களின் விவரம்குறித்து மக்களே பார்க்கிறார்கள். இதில் சதி எப்படி வரும். இதன் பின்னணியில் சதி எதுவும் கிடையாது. பல ஆயிரம் கோடி வரி ஏய்ப்பைக் கண்டுபிடித்த வருமான வரிச் சோதனையை எதிர்ப்பது, தி.மு.க. உட்பட எதிர்க்கட்சிகள்தான். அடுத்த பட்டியலில் நாமும் இருக்கிறமோ? என்ற அச்சம் அவர்களுக்கு உள்ளதைக் காட்டுகிறது. அதேபோன்று பிரதமர் நரேந்திர மோடி- தி.மு.க. தலைவர் கருணாநிதி சந்திப்புக்கும் வருமான வரி சோதனைக்கும் எந்த காரணமும் கிடையாது. இது முழுக்க வருமானவரித்துறைக்கு வந்தத் தகவலின் அடிப்படையில் நடைபெறும் சோதனையே.

 

இதன்மூலம் பி.ஜே.பி அரசு அ.தி.மு.க-வை உடைக்கப்பார்க்கிறது, முடக்கப்பார்க்கிறது என காங்கிரஸ் தலைவர் திருநாவுக்கரசர் கூறியிருப்பது சரியல்ல. 25 வருடத்துக்கு முன்பு அ.தி. மு.க-விலிருந்து பிரிந்து, எம்.ஜி.ஆர். அ.தி.மு.க-வை தொடங்கினார். அதற்கும் பி.ஜே.பி-தான் காரணம் என்று திருநாவுக்கரசர் கூறுவாரா? என்று தெரியவில்லை.

தமிழக மக்கள், கடந்த 50 ஆண்டுகளாக ஏமாற்றப்பட்டுள்ளார்கள். 7.5 கோடி மக்களின் பணம் சுரண்டப்பட்டுள்ளது. எனவே, இதில் உள்நோக்கம் கற்பிக்கக்கூடாது. இந்தச் சோதனையால் தமிழகத்துக்கு கெட்டப் பெயர் என்று கூறுவதையும் ஏற்க முடியாது. மேலும், இதனை மாநிலம், மொழி, சாதி அடிப்படையில் யாரும் பார்க்கக்கூடாது. பி.ஜே.பி-யினர் நடத்தும் நிறுவனங்களில்கூட சோதனை நடத்தப்படுகிறது. சுய அதிகாரம் படைத்த வருமானவரித்துறை சோதனையை அரசியலாக்கக்கூடாது. மற்ற மாநிலங்களில்கூட வருமான வரிச் சோதனை நடந்திருக்கின்றன என்று கூறியுள்ளார்.

தமிழக அரசு இன்னும் வேகமாகச் செயல்பட வேண்டும். 'காங்கிரஸ் இளைஞர்கள் போர்க்குணத்துடன் செயல்பட வேண்டும்' என்று முன்னாள் அமைச்சர் ப.சிதம்பரம் கூறியிருப்பதை வரவேற்கிறேன். ஊழலுக்கு எதிராக, லஞ்சத்துக்கு எதிராக நாட்டை காட்டிக் கொடுப்பவர்களுக்கு எதிராக மகாத்மா காந்தி காலத்தில் காங்கிரஸில் இருந்த இளைஞர்களுக்கு போர்க்குணம் இருந்ததுபோல வரவேண்டும்” என்றார்.

நீங்க எப்படி பீல் பண்றீங்க


[X] Close

[X] Close