வெளியிடப்பட்ட நேரம்: 08:16 (13/11/2017)

கடைசி தொடர்பு:08:24 (13/11/2017)

கனமழை பாதிப்பா? 1070 என்ற எண்ணுக்கு அழைக்கலாம்!

”கனமழை பாதிப்புகள்குறித்து 1070 என்ற எண்ணுக்கு அழைத்து பொதுமக்கள் தெரிவிக்கலாம்” என அமைச்சர் ஆர்.பி.உதயகுமார் தெரிவித்துள்ளார்.

உதயகுமார்

தமிழகத்தில், வடகிழக்குப் பருவமழை கடந்த 27-ம் தேதி தொடங்கியது. பருவமழையின் தொடக்கத்தில் சென்னையில் சில நாள்கள்  தொடர்ச்சியாக கனமழை பெய்தது. இதனால், சென்னையில் பல பகுதிகள் வெள்ளக்காடாயின. தமிழகத்தில், கடந்த மாதம் 27-ம் தேதி தொடங்கிய வடகிழக்குப் பருவமழை, சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம் உள்ளிட்ட வட மாவட்டங்களிலும், நாகப்பட்டினம், திருவாரூர், தஞ்சை உள்ளிட்ட டெல்டா மாவட்டங்களிலும் தொடர் மழை பெய்தது. இதனால், நாகை, திருவாரூர் மாவட்டங்களில் பல லட்சம் ஏக்கரிலான விவசாயப் பயிர்கள் நீரில் மூழ்கின. தலைநகர் சென்னையும், புறநகர்ப் பகுதிகளும் வெள்ளத்தில் மிதக்கும் சூழல் ஏற்பட்டது. குடியிருப்புப் பகுதிகளையும் வெள்ளம் சூழ்ந்ததால், மக்கள் பெரும் சிரமத்துக்கு ஆளாகினர். கடந்தசில நாள்களாக மழை குறைந்திருந்த நிலையில், சென்னை உள்ளிட்ட வடமாவட்டங்களில் மீண்டும் மழைபெய்யத் தொடங்கியிருக்கிறது.

இந்நிலையில், கனமழை பெய்வதற்கான வாய்ப்பு அதிகரித்துள்ள நிலையில் அமைச்சர் ஆர்.பி.உதயகுமார், “கனமழை மற்றும் அதன் பாதிப்புகள் குறித்த தகவல்களைப் பொதுமக்கள் உடனடியாக 1070 என்ற கட்டுப்பாட்டு அறை  எண்ணுக்குத் தகவல் தெரிவிக்கலாம். பாதிப்புகள் ஏற்படுவதற்கான வாய்ப்புள்ள இடங்களில் சிறப்பு முகாம்கள் அமைக்கப்பட்டுள்ளன. அதிகாரிகள், தொடர் கண்காணிப்பில் உள்ளனர்” எனத் தெரிவித்தார்.