மலையில் ஓட்டம், ஊற்றுநீரில் ஆட்டம்! விடுமுறையை இப்படியும் கழித்த பள்ளி மாணவர்கள் !

 

aritapatti

 

மதுரை மேலூரை அடுத்த அரிட்டாபட்டி கிராமம், 7 மலைகளால் சூழ்ந்த பசுமையான கிராமம் . இங்கு, ஏராளமான அறிய வகைப் பறவைகள் தங்கி கூடுகட்டி முட்டையிட்டுக் குஞ்சு பொரிக்கின்றன . பறவைகளுக்குத் தேவையான வாழிட அமைப்பு அற்புதமாக அமைந்துள்ளதால், இங்கு ஏராளமான பறவைகள் வசித்துவருகின்றன. கோழிக்கொண்டைப்பூ, செவ்வந்திப்பூ என்று பல்வேறு வகையான பூக்களைக்கூட விளைவித்து இயற்கை விவசாயத்துக்கு மாறிவருகின்றனர் இங்குள்ள விவசாய மக்கள். அமைதியான சூழலை உள் வாங்கி, இந்த ஊர் பொதுமக்கள் இயற்கையை நேசித்துப் பராமரித்துவருகின்றனர் . இங்குள்ள குடைவரை சிவன்கோயிலையும், சமணச் சின்னங்களையும் பார்க்க, நாள்தோறும் நூற்றுக்கணக்கான சுற்றுலாப் பயணிகள் வந்துசெல்கின்றனர்.

இந்நிலையில், மேலூர் பகுதியில் சில நாள்களுக்கு முன் நல்ல மழைப்பொழிவு இருந்ததால், அரிட்டாபட்டியில் உள்ள தர்மக்குளம் உள்ளிட்ட நீர் நிலையில் தண்ணீர் பெருகியுள்ளது. மேலும், 7 மலைகளுக்கு அடியில் உள்ள நீர் ஊற்றுகளிலும் அதிக அளவு தண்ணீர் நிரம்பிவழிகிறது . இந்நிலையில், ஞாயிறை இனிமையாகக் கழிக்க புதூர் ஓரியண்டல் நர்சரிப் பள்ளி மாணவர்கள், பெற்றோரின் அனுமதியுடன் ஆசிரியர்களோடு ஒருநாள் சுற்றுலா வந்தனர்.  50-க்கும் மேற்பட்ட பள்ளி மாணவர்கள் 7 மலைகள், ஏரி, அங்கிருந்த ஊற்று நீர் என ஆட்டம்போட்டு மகிழ்ந்தனர் . இந்த ஒருநாள் சுற்றுலா, மாணவர்களுக்கு மிகவும் மகிழ்ச்சியை அளித்ததாகத் தெரிவித்தனர். மேலும், இங்குள்ள புராதன ஸ்தலங்களில் உள்ள தகவல்களை மாணவர்கள் அறிந்துகொண்டதாகப் பள்ளி முதல்வர் ஃபரிதா பேகம் தெரிவித்தார் .

 

அரிட்டாபட்டியின் ’7 மலை பாதுகாப்புச் சங்கத்தைச்’ சார்ந்த அரிட்டாபட்டி ரவி கூறுகையில், “எங்கள் கிராமத்தில் பல இடங்கள் சுற்றிப்பார்க்க ஏற்றதாக உள்ளன . 'அரவான்' படம் எங்கள் கிராமத்தில் எடுக்கப்பட்டது.  அரிட்டாபட்டி கிராமத்தை சுற்றுலாப் பயணிகள் அனைவரும் சுற்றிப்பார்க்க வேண்டும் என்று நினைக்கிறேன். அதன் வரலாறுகளையும் அதிசயங்களையும் சேகரித்துள்ளேன். நீங்கள் இங்கு இலவசமாக சுற்றிப்பார்க்கலாம். ஆனால், வரும்போது இயற்கைக்கு எதிரான பிளாஸ்டிக் பொருள்களை இங்கு கொண்டுவர வேண்டாம். முடிந்தால் மரக்கன்றுகளும் விதைப்பந்துகளும் எடுத்துவாருங்கள்” என வேண்டுகோள் விடுத்தார்.

Do you like the story?

Please Appreciate the Author by clapping!