”பிரதமர் நரேந்திர மோடி நாட்டு மக்களிடம் பகிரங்க மன்னிப்புக் கோர வேண்டும்” – சீமான் | Prime Minister narendra Modi should apologise to the nation, seeman

வெளியிடப்பட்ட நேரம்: 09:25 (13/11/2017)

கடைசி தொடர்பு:09:44 (13/11/2017)

”பிரதமர் நரேந்திர மோடி நாட்டு மக்களிடம் பகிரங்க மன்னிப்புக் கோர வேண்டும்” – சீமான்

"ண மதிப்பிழப்பு, ஜி.எஸ்.டி வரிவிதிப்பு எனும் மோசமான பொருளாதார முடிவுகளால் நாட்டு மக்களை நடுத்தெருவில் நிறுத்திய பிரதமர் நரேந்திர மோடி, பகிரங்க மன்னிப்புக் கோர வேண்டும் " என்று நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் தெரிவித்துள்ளார். 

சீமான்

 

மேலும், இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது,

" நாட்டில், மக்களின் வாழ்வோடு நேரடித்தொடர்புடைய ஒரு மிக முக்கியப் பொருளாதார முடிவை எடுக்கிறபோது, அதை எத்தனை முறை அலசி ஆராய்ந்து, எந்தவித முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொண்டு எடுக்கத் துணிய வேண்டும் என்கிற அடிப்படை புரிதல்கூட இல்லாது, எல்லா மரபுகளையும் தூரத் தள்ளிவிட்டு, தான்தோன்றித்தனமாக  ஒரு நள்ளிரவில் ரூபாய் நோட்டுகளை மதிப்பிழக்கச்செய்து, அதைக் கறுப்புப்பணத்துக்கு எதிரான போர் எனப் பிரகடனம்செய்த பிரதமர் நரேந்திர மோடி, அச்சம்பவம் முடிந்து ஓராண்டைக் கடந்திருக்கும் நிலையில், அப்போரினால் விளைந்த நன்மைகளை நாட்டு மக்களுக்குப் பட்டியலிட்டுச் சொல்ல வேண்டும்.

பண மதிப்பிழப்புக்குப் பிறகு, குறிப்பிட்ட விழுக்காடு பணம் வங்கிக்குத் திரும்பவே திரும்பாது; அதுவே கறுப்புப்பணம் என்றும், அதைக் கண்டறிந்து அவ்விழுக்காட்டைப் பெற்று, மக்களின் வாழ்க்கைத் தரத்தை உயர்த்துவோம் என்றும் அள்ளிஅளந்துவிட்ட நரேந்திரமோடி, தற்போது கறுப்புப்பணம் முற்றும் முழுதாக ஒழிந்துவிட்டதா என்ற பாமரனின் கேள்விக்குப் பதில் சொல்ல வேண்டும். செல்லாது என்று அறிவிக்கப்பட்டதில் 99 விழுக்காடு பணம், அதாவது, புழக்கத்திலிருந்த 15,44,000 கோடி ரூபாய் பணத்தில், 15,28,000 கோடி ரூபாய் பணம் வங்கிக்குத் திரும்பிவிட்டதாக ரிசர்வ் வங்கி தனது ஆண்டறிக்கையில் குறிப்பிட்டிருக்கிறது. இதன்மூலம் வங்கிக்குக் கிடைத்த லாபம் வெறும் 16,000 கோடி ரூபாய். ஆனால், புதிதாக ரூபாய் நோட்டுகளை அச்சடிக்க ஆன செலவோ 21,000 கோடி ரூபாய் எனும்போது, பண மதிப்பிழப்பில் 5,000 கோடி இழப்பு ஏற்பட்டிருப்பது தெளிவாகிறது. அப்படியிருக்கையில், எதை அடிப்படையாகவைத்து இதை வெற்றிகரமான நடவடிக்கை எனப் பா.ஜ.க-வினர் ஆனந்தக் கூத்தாடுகிறார்கள் என்பதைத் தெளிவுபடுத்த வேண்டும். பண மதிப்பிழப்பு நடவடிக்கை படுதோல்வி என்று நாடு முழுக்க அறியப்பட்டுவிட்ட பிறகும், எதற்குக் கபடவேடம் போட்டு மக்களை ஏமாற்ற முனைய வேண்டும்? கறுப்புப்பண ஒழிப்பு என்றும் கள்ளப்பண ஒழிப்பு என்றும், பணமில்லா பரிவர்த்தனை என்றும் இலக்கினை மாற்றிக்கொண்டே வந்த பா.ஜ.க அரசு, தற்போது வரிஏய்ப்புச் செய்தவர்கள் இதன்மூலம் கண்காணிப்புக்குள் வந்துவிட்டார்கள் என்று புதிய பல்லவியைப் பாடத் தொடங்கியிருக்கிறது. வரி ஏய்ப்புச் செய்தவர்களைக் கண்டறிவதுதான் பண மதிப்பிழப்பின் நோக்கமென்றால், அதற்கு அமலாக்கத்துறையும் வருமான வரித்துறையும் போதுமே! அதற்கு எதற்கு பண மதிப்பிழப்பு? வரி ஏய்ப்புச் செய்தவர்களெல்லாம் கண்காணிப்புக்குள் வந்துவிட்டார்கள் என்றால், தற்போது நடக்கிற வருமான வரிச்சோதனைகளெல்லாம் எதற்காக நடக்கிறது? எவ்வித அடிப்படை ஆதாரமுமில்லாது 3 லட்சம் கோடி கறுப்புப்பணம் வங்கிக்குத் திரும்பிவிட்டது என்று மனம்போன போக்கில் கூறிய பிரதமர் மோடி, அதுகுறித்து வெள்ளையறிக்கையை வெளியிடத் தயாரா? மேலும், மீட்கப்பட்டுவிட்டதாக அவர் கூறும் கறுப்புப்பணத்தைக் கொண்டு மக்களின் வாழ்வாதாரத்தை உயர்த்த என்ன திட்டங்களைத் தீட்டப் போகிறார் எனக் கூறுவாரா?

நேர்முக வரி

பண மதிப்பிழப்பால் ஏற்பட்ட சரிவிலிருந்து நாடு மீண்டு வருவதற்குள், சரக்கு மற்றும் சேவை வரி மசோதாவை அறிமுகம் செய்வித்துத் தற்போது அதுவும் தோல்வியில் முடிந்து, இந்தியப் பொருளாதாரம் அதள பாதாளத்துக்குச் சென்றிருக்கிறது. 

பண மதிப்பிழப்பு, ஜி.எஸ்.டி வரிவிதிப்பு முறையால் இந்தியா மிகப்பெரிய பொருளாதாரச் சரிவைச் சந்தித்திருக்கிறது என்கிறது, உலக வங்கியின் 'தெற்கு ஆசிய பொருளாதார நோக்கம்' என்ற தலைப்பில் வெளியான ஒரு அறிக்கை. இதை அடியொற்றியது போல, இந்தியாவின் பொருளாதாரக் கட்டமைப்பை ஒட்டுமொத்தமாய் மோடியும், ஜெட்லியும் குலைத்துவிட்டார்கள் என்கிறார் அவர்களது கட்சியின் மூத்த தலைவர் யஷ்வந்த் சின்கா. இந்தியாவின் உள்நாட்டு உற்பத்தி 2 விழுக்காடு வரை குறைந்து, 3 லட்சம் கோடிவரை இழப்பு ஏற்பட்டிருக்கிறது என்பதை அறுதியிட்டுச் சொல்கிறார்கள் பொருளாதார அறிஞர்கள். ஆகையினால், நாடு எதிர்கொண்டிருக்கிற பொருளாதார வீழ்ச்சியை, நாட்டை ஆளும் பா.ஜ.க அரசு வெளிப்படையாக ஒப்புக்கொள்ள வேண்டும்.  அதோடு, பண மதிப்பிழப்பு, ஜி.எஸ்.டி வரிவிதிப்பு எனும் மோசமான பொருளாதார முடிவுகளால், நாட்டு மக்களை நடுத்தெருவில் நிறுத்திய பிரதமர் நரேந்திர மோடி பகிரங்க மன்னிப்புக் கோர வேண்டும்."

இவ்வாறு அந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.

நீங்க எப்படி பீல் பண்றீங்க