வெளியிடப்பட்ட நேரம்: 12:15 (13/11/2017)

கடைசி தொடர்பு:12:15 (13/11/2017)

அண்ணா, எம்.ஜி.ஆர், ஜெயலலிதா சமாதிகளை மாற்றக்கோரிய வழக்கில் தமிழக அரசுக்கு நோட்டீஸ்!

சென்னை மெரினாவில் உள்ள தலைவர்களின் சமாதிகளை மாற்றக்கோரிய வழக்கில், இரண்டு வாரத்தில் பதில் அளிக்க தமிழக அரசுக்கு சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

உலக அளவில் நீலமான கடற்கரைகளில் ஒன்றான சென்னை மெரினா கடற்கரையில், மறைந்த முன்னாள் முதல்வர்கள் அண்ணாதுரை, எம்.ஜி.ஆர், ஜெயலலிதா ஆகியோர் சமாதிகள் உள்ளன. மெரினாவுக்கு வரும் பொதுமக்கள், இவர்களின் சமாதிகளைப் பார்த்துவிட்டுச் செல்கின்றனர். விடுமுறைக் காலங்களில் மெரினாவில் கூட்டம் அலைமோதுவதால், காவலர்கள் பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.

இந்த நிலையில், மெரினாவில் உள்ள அண்ணாதுரை, எம்.ஜி.ஆர், ஜெயலலிதா ஆகியோரின் சமாதிகளை மாற்றக்கோரி, சமூக ஆர்வலர் டிராஃபிக் ராமசாமி சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்குத் தொடர்ந்துள்ளார். அதில், கடலோர பாதுகாப்பு மண்டலமான மெரினாவில்   அமைந்துள்ள சமாதிகளை கிண்டியில் உள்ள காந்தி மண்டபத்துக்கு மாற்ற உத்தரவிட வேண்டும் என்று குறிப்பிட்டுள்ளார்.

இந்த மனு, உயர் நீதிமன்றத்தில் இன்று விசாரணைக்கு வந்தது. அப்போது, இது தொடர்பாக இரண்டு வாரத்தில் பதில் அளிக்க தமிழக அரசுக்கு நோட்டீஸ் அனுப்ப உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.