வெளியிடப்பட்ட நேரம்: 14:31 (13/11/2017)

கடைசி தொடர்பு:14:31 (13/11/2017)

ஐ.டி வலையிலிருந்து தப்பிய சசிகலா ஆதரவாளர்கள் - தலைமறைவான முன்னாள் அமைச்சர் 

வருமான வரித்துறை சோதனை

வருமான வரித்துறை வலையிலிருந்து சசிகலா குடும்பத்துக்கு நெருக்கமான முன்னாள் அமைச்சர் மற்றும் இரண்டு எம்.எல்.ஏ-க்கள் தப்பியுள்ளனர். அதில், முன்னாள் அமைச்சர் ஒருவர் தலைமறைவாகிவிட்டதாகத் தகவல் வெளியாகியுள்ளது. 

வருமான வரித்துறையின் சோதனையால், சசிகலா மற்றும் அவரது குடும்பத்தினருக்கு சோதனைக்காலம் தொடங்கியுள்ளது. தமிழகம் முழுவதும் ஒரே நேரத்தில் சசிகலா குடும்பத்தினர் மற்றும் அவரது ஆதரவாளர்களின் வீடு, அலுவலகங்களில் வருமான வரித்துறையினர் சோதனைநடத்தி ஆவணங்கள், நகை, பணம் ஆகியவற்றைப் பறிமுதல்செய்துள்ளனர். தொடர்ந்து, சில இடங்களில் சோதனை நடந்துவருகிறது. சம்பந்தப்பட்டவர்களுக்கு சம்மன் வழங்கப்பட்டுள்ளன. இதனால் ஓட்டுமொத்த சசிகலா குடும்பத்தினர் மற்றும் அவரது ஆதரவாளர்கள் கலக்கத்தில் உள்ளனர். வருமான வரித்துறையினரின் விசாரணையில் இன்னும் திடுக்கிடும் தகவல்கள் வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

இந்தச் சூழ்நிலையில், தினகரனின் ஆதரவாளரான புகழேந்தி, சென்னை நுங்கம்பாக்கம் வருமான வரித்துறை அலுவலகத்தில் ஆஜரானார். அதிகாரிகள் கேட்ட கேள்விகளுக்கு, புகழேந்தி விளக்கம் அளித்துள்ளார். வருமான வரித்துறை அதிகாரிகளின் சந்தேக வளையத்தில் சசிகலா குடும்பத்தைச் சேர்ந்த சிலர் உள்ளனர். அவர்களிடம் துருவித் துருவி விசாரிக்க கேள்விகளுடன் அதிகாரிகள் தயாராக உள்ளனர். இதனால் சசிகலா குடும்பத்தினர் தங்களின் ஆடிட்டர், வழக்கறிஞர்களுடன் ஆலோசனை நடத்திவருகின்றனர்.

வருமான வரித்துறையினரின் சோதனையில், இன்னமும் சசிகலா குடும்பத்தினருடன் நெருக்கமானவர்களின் வீடுகளில் சோதனை நடத்தப்படவில்லை. இதற்கு சில காரணங்கள் இருப்பதாக உள்விவர வட்டாரங்கள் தெரிவித்தன. குறிப்பாக, சசிகலாவுக்கு நெருக்கமானவர்களில் சிலர், வருமான வரித்துறையினரின் துருப்புச் சீட்டுகளாக உள்ளனர். இதனால் அவர்களிடம் சோதனை நடத்தினால், முழுமையான தகவல்களைச் சேகரிக்க முடியாது என்று வருமான வரித்துறை கருதியுள்ளது. இதன் காரணமாகவே, முதல்கட்ட சோதனைப் பட்டியலில் அவர்களின் பெயர்கள் இடம்பெறவில்லை. அதில், சிலர் கொடுத்த தகவலின்பேரில்தான் தற்போதைய சோதனை நடத்தப்பட்டதாம்.

வருமான வரித்துறை சோதனை

இதுகுறித்து வருமான வரித்துறை வட்டாரங்கள் கூறுகையில், “பண மதிப்பிழப்பு அறிவிக்கப்பட்ட சமயத்தில், கணக்கில் காட்டப்படாத கோடிக்கணக்கான மதிப்புள்ள பழைய 1000, 500 ரூபாய் நோட்டுக்கள் குறுக்கு வழிகளில் மாற்றப்பட்டன. அவர்கள் பற்றிய விவரங்கள் ரகசியமாக சேகரிக்கப்பட்டன. மோசடியில் ஈடுபட்டவர்கள் தப்பித்துவிடாமலிருக்க, சீக்ரெட்டாகவே சோதனை நடத்தத் திட்டமிட்டோம். எங்களுக்குத் தேவையாக தகவல்கள் கிடைத்ததும் ஒரே நேரத்தில் சோதனை நடத்த முடிவுசெய்யப்பட்டது. இதற்கான ஏற்பாடுகளை வருமான வரித்துறை உயரதிகாரிகள் மேற்கொண்டனர். அதிரடியாக சசிகலா குடும்பத்தினர் மற்றும் அவரது ஆதரவாளர்கள், நெருக்கமானவர்கள் வீடுகள், அலுவலகங்கள், கல்லூரிகள் ஆகிய இடங்களில் சோதனை நடத்தப்பட்டது. இந்தச் சோதனையில், நாங்கள் எதிர்பார்த்ததைவிட ஆவணங்கள், பணம், நகைகள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன. இதுவே, தொடர்ச்சியாக சோதனை நடத்தவேண்டிய சூழ்நிலை ஏற்பட்டது. அதிகாரிகளும் சோர்வடையாமல் துரிதமாகச் செயல்பட்டு சோதனையை வெற்றிகரமாக நடத்தி முடித்துள்ளனர். இன்னும் குறிப்பிட்ட சில இடங்களில் சோதனை முடிவடையவில்லை. இதுவரை நடத்தப்பட்ட சோதனையில், எங்களுக்குக் கிடைத்த தகவலின்படி வருமானத்துக்கு அதிகமான சொத்துக்கள் வாங்கியிருப்பது ஆதாரத்துடன் கிடைத்துள்ளன.

சென்னையில், சசிகலாவுக்கு நெருக்கமான பெண் தொழிலதிபர் வீட்டில் சோதனை நடத்த அதிகாலை 6 மணிக்குச் சென்றோம். அப்போது, அந்தப் பெண்தொழிலதிபர் வீட்டில் இல்லை. அவரைத் தொடர்புகொண்டு விவரத்தைச் சொல்லியதோடு, உடனடியாக வீட்டுக்கு வரும்படி உத்தரவிட்டோம். அதன்படி அவரும் வீட்டுக்கு வந்தார். அதற்குள் அவரது வீடு, அலுவலகத்தை சல்லடைபோட்டு சோதனை நடத்தி, பல ஆவணங்களைப் பறிமுதல் செய்துவிட்டோம். அதன்பிறகு, அந்தப் பெண்தொழிலதிபரிடம் விசாரணை நடத்தினோம். அவரது வீட்டிலிருந்து கைப்பற்றப்பட்ட டைரியில், லட்சக்கணக்கான பணம் கைமாறியிருக்கும் தகவல் உள்ளது. சமீபத்தில், சசிகலா பரோலில்  வந்தபோது, பெண்தொழிலதிபரிடம் நீண்ட நேரம் பேசியுள்ளார். அவரிடம் பினாமி சொத்துக்கள்குறித்து ஆலோசனை நடத்தியுள்ளார். அப்போதுதான் சசிகலாவுக்கும் அந்தப் பெண்தொழிலதிபருக்கும் உள்ள நெருக்கம் எங்களுக்குத் தெரியவந்தது. அதன்பேரிலேயே அந்த பெண்தொழிலதிபர் வீடு, அலுவலகங்களில் சோதனை நடத்தப்பட்டது.

இதையடுத்து, பூக்கள்மீது அளவு கடந்த ஆர்வம்கொண்ட ஜெயலலிதாவுக்கு, அதுகுறித்த விவரங்களைத் தெரிவிக்க சசிகலாவால் அறிமுகப்படுத்தப்பட்ட பெண் ஒருவரின் வீடு, அலுவலகங்களில் சோதனை நடத்தப்பட்டுள்ளது. அவரது வீடு, அலுவலகத்திலிருந்து ஏராளமான ஆவணங்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன. இதனால், விசாரணைக்கு ஆஜராகும்படி அந்தப் பெண்ணுக்கு சம்மன் அனுப்பியுள்ளோம். அதுபோல, சசிகலா குடும்பத்தினர் மற்றும் அவருக்கு நெருக்கமானவர்கள், ஆதரவாளர்களுக்கும் சம்மன் அனுப்பப்பட்டுள்ளன" என்றனர்.

வருமான வரித்துறை சோதனை

பெயரைக் குறிப்பிட விரும்பாத வருமான வரித்துறை உயரதிகாரி ஒருவர், “சசிகலா குடும்பத்திலிருந்து அரசியலில் காலூன்றத் திட்டமிட்டவர்களைக் குறிவைத்தே இந்த ஆபரேஷன் நடத்தப்பட்டது. நாங்கள் எதிர்பார்த்தப்படி அவர்கள் சிக்கியுள்ளனர். சசிகலா குடும்பத்தினரின் வரவு-செலவுகளைப் பார்த்துவரும் சென்னை எம்.எல்.ஏ ஒருவரின் பெயரும் சோதனைப் பட்டியலிலிருந்தது. ஆனால், கடைசி நேரத்தில் அவரிடம் தற்போது சோதனை நடத்த வேண்டாம் என்ற வாய்மொழி உத்தரவால், அங்கு சோதனை நடத்தப்படவில்லை. ஆனால், அந்த எம்.எல்.ஏ-வின் வீடு, அலுவலகங்களில் விரைவில் சோதனை நடத்த வாய்ப்புள்ளது. தென்மாவட்டத்தைச் சேர்ந்த முன்னாள் அமைச்சர் ஒருவர், சசிகலாவுக்கு மிகவும் நெருக்கமானவர். அவரது வீடு, அலுவலகங்களில் சோதனை நடத்தப்படவில்லை. இருப்பினும், அந்த முன்னாள் அமைச்சர் தலைமறைவாக இருப்பதாக எங்களுக்குத் தகவல் கிடைத்துள்ளது. சசிகலா குடும்பத்தினருடன் நீண்ட காலமாக நட்பிலிருந்தவர்களின் பட்டியல் எங்களிடம் உள்ளது. அதன்படி சோதனை நடந்துவருகிறது. இதில் பலரது செல்போன், ஸ்விட்ச் ஆஃப் செய்யப்பட்டுள்ளன. இருப்பினும், அவர்களும் எங்களது சந்தேக வளைத்தில் உள்ளனர்" என்றார்.

சசிகலா குடும்பத்தினருக்கு நெருக்கமானவர்கள் கூறுகையில், "எங்களைப் பழிவாங்கும் படலமாகவே இந்த வருமான வரிச் சோதனை நடத்தப்பட்டுள்ளது.  குறிப்பாக, பண மதிப்பிழப்பு சமயத்தில் கணக்கில் காட்டப்படாத ரூபாய் மாற்றப்பட்டதாகச் சொல்லி ஓராண்டுக்குப் பிறகு சோதனையில் ஈடுபட்டுள்ளனர். ஆட்சியிலிருப்பவர்கள், அதிகாரத்தில் இருப்பவர்களின் வீடு, அலுவலகங்களில் நடத்தப்பட்ட வருமான வரிச் சோதனையின்போது கிடைத்த ஆவணங்கள் கிடப்பில் போடப்பட்டுள்ளன. அப்போது நடந்த சோதனையில் சிக்கியவர்கள் மீது எந்தவித நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை. வருமான வரித்துறை நியாயமாகச் செயல்பட்டால், அமைச்சர் விஜயபாஸ்கர் மீதுள்ள விசாரணையைத் துரிதப்படுத்த வேண்டும். மேலும், தொழிலதிபர் சேகர் ரெட்டி, முன்னாள் தலைமைச் செயலாளர் ராமமோகனராவ் ஆகியோர் வீடு, அலுவலகங்களில் கிடைத்த ஆவணங்கள், டைரி அடிப்படையில் சம்பந்தப்பட்டவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும்" என்றனர்.


டிரெண்டிங் @ விகடன்