கிரண்பேடி ஸ்டைலில் பன்வாரிலால் புரோகித்!- கோவையில் தொடங்கும் திடீர் ரிவ்யூ #VikatanExclusive

 

governor

அரசு அலுவலகங்களில் திடீரென நுழைந்து அரசு அதிகாரிகளுக்கு கிலி ஏற்படுத்துபவர் பாண்டிச்சேரி துணைநிலை ஆளுநர் கிரண்பேடி. ஆளுநர் எப்போது எந்த அலுவலகத்துக்குள் நுழைவார் எனப் புதுச்சேரி அரசு அதிகாரிகள் வயிற்றில் புளியைக் கரைத்துக்கொண்டு காத்திருப்பர். தனது அதிரடி ஆக்‌ஷனால் மாநில அரசுக்குக் குடைச்சல் கொடுக்கும் கிரண்பேடியின் ஸ்டைலை தற்போது தமிழக ஆளுநர் பன்வாரில் புரோகித்தும் தொடங்க உள்ளார்.

கோவை பாரதியார் பல்கலைக்கழகத்தின் பட்டமளிப்பு விழா நாளை நடைபெறுகிறது. இந்த விழாவின் சிறப்பு அழைப்பாளராக தமிழகத்தின் புதிய ஆளுநர் பன்வாரிலால் புரோகித் பங்கேற்க உள்ளார். தமிழக வழக்கப்படி இதுவரையில் இல்லாத ஒரு நிகழ்வாக தமிழக ஆளுநர் வரலாற்றிலேயே முதன்முறையாக ஒரு ஆளுநர் மாவட்ட அரசு அலுவலகங்களைப் பார்வையிட உள்ளார். நாளை மாலை 3.30 மணிக்கு மேல் கோவை மாவட்ட அரசு அலுவலகங்களை ஆளுநர் ஆய்வு செய்கிறார்.

ஆளுநரின் புதிய ஆய்வுத் திட்டத்தின் அடிப்படையில் கோவை மாவட்ட ஆட்சியர் மற்றும் மாநகராட்சி ஆணையர் ஆகியோர் 20 நிமிடம், மாவட்ட காவல்துறை ஆணையர் மற்றும் எஸ்.பி ஆகியோருக்கு 10 நிமிடம், மற்றும் இதர முக்கிய அரசு அதிகாரிகளுக்கு தலா 10 நிமிடங்கள் என நேரம் ஒதுக்கப்பட்டுள்ளது. இவர்கள் அனைவரும் தங்களுக்கு வழங்கப்பட்ட கால அவகாசத்துக்குள் அவரவர் துறையைப் பற்றி ஆளுநருக்கு விளக்க வேண்டும் என அறிவுறுத்தப்பட்டுள்ளது. இதுதவிர மாவட்டத்தின் முக்கிய அரசியல் பிரமுகர்களிடமும் மாவட்டப் பணிகள் குறித்து ஆளுநர் விரிவாகப் பேச உள்ளார்.

இந்த திடீர் சோதனை விசிட் குறித்து அரசு அதிகாரி ஒருவர் கூறுகையில், “தமிழக சட்டமன்றத்தில் மதிப்பீட்டுக் குழு உள்ளது. இந்தக் குழு ஒவ்வொரு மாவட்டத்திலும் அரசு சார்ந்த பணிகளை முழுவதுமாக ஆய்வு செய்வது வழக்கம். மேலும் இந்த ஆய்வுப் பணிகளை முடுக்கிவிடும் நோக்கில் அவ்வப்போது மாவட்ட ஆட்சியரும், அமைச்சர்களும் துறை ரீதியான சந்திப்புக் கூட்டங்கள், ஆய்வுப் பணிகள் என மேற்கொள்வர். ஆனால் இதுவரையில் இல்லாத ஒரு நிகழ்வாக தமிழக ஆளுநர் ஒருவர் முதன்முறையாக ஒரு மாவட்டத்தின் அரசுப் பணிகளை களத்தில் இறங்கி ஆய்வு செய்ய உள்ளார். ஆட்சியர், அமைச்சர் என அனைவரும் இருக்கும் போது ஆளுநரே இதில் நேரடியாகக் களம் இறங்க உள்ளது அதிகாரிகள் மத்தியில் ஒரு கலக்கத்தை ஏற்படுத்தியுள்ளது. இதனால் கோவை மாவட்டத்தின் முக்கிய அதிகாரிகள் அனைவரும் ஒரு வார காலமாக தூக்கமின்றி தவித்து வருகின்றனர்” என்றார்.

கடந்த அக்டோபர் மாதம் தமிழக ஆளுநராகப் பொறுப்பேற்ற பன்வாரிலால் இதுபோன்ற அதிரடி ஆய்வுகளில் இறங்குவது ஒன்றும் புதிதல்ல. அசாம் மாநில ஆளுநராக பன்வாரிலால் பதவி வகித்த போதே இதுபோன்ற திடீர் ஆய்வுகளால் அதிகாரிகளைக் கலங்க வைத்துவிடுவார். ஆனால் அதே ஸ்டைலில் தமிழகத்தில் ஆளுநர் களம் இறங்கியிருப்பது தான் தற்போது பெரும் பதற்றத்தை ஏற்படுத்தியுள்ளது. மேலும் ‘ஆளுநரின் இந்த திடீர் அறிவிப்பு மாநில சுய ஆட்சியில் தலையிடுவது போல் உள்ளது’ என்றும் அதிகாரிகள் கலக்கம் தெரிவித்து வருகின்றனர்.

தற்போது திடீரென ராஜ் பவனில் இருந்த வந்த இந்த உத்தரவால் ஆஸ்திரேலிய சுற்றுப்பயணம் மேற்கொண்டிருந்த அமைச்சர் வேலுமணி இந்தியா கிளம்புகிறார். நாளை மாலை ஐந்து மணி அளவில் அமைச்சர், உள்ளூர் அரசியல் பிரமுகர்கள், மாவட்டத்தில் உள்ள தொண்டு நிறுவன ஒருங்கிணைப்பாளர்கள் ஆகியோரை ஆளுநர் சந்திக்க உள்ளார்.

Do you like the story?

Please Appreciate the Author by clapping!