“ஓய்வுக்காலம் பாரம் அல்ல... வரம்..!” ‘எனக்கு 78 அவருக்கு 82” ஆதர்ச தம்பதி | ''Age is not a factor'' says meera rao

வெளியிடப்பட்ட நேரம்: 14:16 (13/11/2017)

கடைசி தொடர்பு:14:16 (13/11/2017)

“ஓய்வுக்காலம் பாரம் அல்ல... வரம்..!” ‘எனக்கு 78 அவருக்கு 82” ஆதர்ச தம்பதி

மீரா ராவ் - ஆதர்ச தம்பதி

78 வயது முதுமையில் பெரும்பாலானோர் பேரன், பேத்திகளைக் கொஞ்சிக்கொண்டிருப்பார்கள். துணையை இழந்த சிலர் தனியே வாழ்ந்துகொண்டிருப்பார்கள். ஆனால், யாருடைய உதவியையும் ஆறுதலையும் எதிர்பார்க்காமல், பலருக்கும் உற்சாக டானிக்காக இருக்கும் ஒரு தம்பதியைச் சந்திப்போமா! 

சென்னை, தி.நகரில் வசித்துவரும் 82 வயது ரங்கநாதன் ராவ் மற்றும் 78 வயது மீரா ராவ் இருவருக்குள்ளும் அன்னியோன்யம் கரிசனமும் அவ்வளவு அழகாக வெளிப்படுகிறது. முதலில் பேச ஆரம்பித்த மீரா ராவ், ''எங்களுக்குச் சொந்த ஊர் மங்களூர். ஆனால், என் சின்ன வயசிலேயே குடும்பத்தோடு சென்னையில் செட்டிலாகிட்டோம். எங்களோடது அரேஞ்சுடு மேரேஜ். இவர் எலெக்ட்ரிசிட்டி போர்டுல இருந்ததால், ஒவ்வொரு முறையும் புரமோஷன் கிடைச்சு ஊர் மாறிட்டே இருப்போம். ரிட்டயர்டு ஆகிறவரை தமிழ்நாடு முழுக்க டூரிஸ்ட் மாதிரி சுத்திட்டோம். அழகழகான ஊர். விதவிதமான மொழிகள்... அன்பான மக்கள் என பல பாகங்கள் எழுதற அளவுக்கு நிறைய அனுபவங்கள் கிடைச்சது. 

கல்யாணமான புதுசுல நாங்க குடியேறின ஊர், மதுரை (லோயர் கேம்ப்). என் கணவர் வேலைக்குப் போனதுக்கப்புறம் நேரத்தைக் கடத்துறது ரொம்பக் கஷ்டமா இருந்துச்சு. இப்படி வீட்டிலேயே கிடக்காமல் ஏதாவது கத்துக்கணும் மனசு சொல்லிட்டே இருந்ததுச்சு. மதுரையிலும் சொந்தங்கள் இல்லே. பொழுதுபோக்கா நான் பார்க்கும் டி.வி, புத்தகங்களே என் சொந்தங்கள். அதனால், பத்திரிக்கையில் வர்ற விஷயங்கள்மூலமே கைத்தொழில் கத்துக்க நினைச்சேன். அப்படி முதலில், நீடில் கிராப்ஃட் கத்துக்கிட்டேன். அது என்னோடு போகக்கூடாதுனு அக்கம்பக்கத்துல இருக்கவங்களுக்கும் இலவசமா கத்துக்கொடுத்தேன். அதுக்கான பொருள்களை சென்னைக்கு வரும்போதெல்லாம் வாங்கிட்டுப் போவேன். மனசுக்கு அவ்வளவு நிறைவா இருந்துச்சு. அதுக்கப்புறம் டிரான்ஸ்பர் ஆகிப் போகிற ஒவ்வொரு இடத்திலும் எனக்குத் தெரிஞ்ச கலையை சுத்தியிருக்கறவங்களுக்கு சொல்லிக்கொடுத்துட்டே இருந்தேன். நிறைய நண்பர்கள் கிடைச்சாங்க. ‘உன் பிஸி டைமில் என்னை மறந்துடாதே‘னு இவர் சொல்லிச் சிரிப்பார்.

மீரா ராவ் - ஆதர்ச தம்பதி

திருநெல்வேலி கோதையாரில் இருந்த சமயத்தில் ஒரு ஐடியா தோணுச்சு. லேடீஸ் தனியாகப் பேசிக்கவும் கைத்தொழில் சார்ந்த விஷயங்களை விவாதிக்கவும் தனியா ஓர் இடம் இருந்தால் நல்லா இருக்குமேனு யோசிச்சேன். நானே முன்நின்னு ஒரு ‘லேடீஸ் கிளப்‘பை ஆரம்பிச்சேன். அடிப்படையான சில விஷயங்களே தெரியாமல் அந்தப் பகுதி மக்கள் இருக்கிறது புரிஞ்சது. நாங்க தங்கியிருந்த வீடு ரொம்ப பெருசு. அதை வீட்டுக்கு வரும் பெண்கள் அதிசயமாப் பார்ப்பாங்க. ‘ஃபேன் இப்படித்தான் இருக்குமா? இதுலதான் காத்து வருமா? துணி துவைக்கவும் மெஷின் இருக்கா. கையில் பிடிச்சு சாப்பிடவும் சின்ன கரண்டி இருக்கா‘னு அவங்க கேட்கும் கேள்விகளைப் பார்க்கிறப்போ நமக்கும் அவங்களுக்கும் எவ்வளவு பெரிய இடைவெளி இருக்குனு புரிஞ்சது. இவங்களுக்கு ஏதாவது செய்யணும்னு முடிவெடுத்தேன். தினமும் ஃபுரூட்ஸ் சாலட் செய்து ஃப்ரிட்ஜ்லவெச்சு எல்லோருக்கும் கொடுப்பேன். இப்படிச் சின்னச் சின்ன சந்தோஷங்களோடு பல விஷயங்களைக் கத்துக்கொடுத்தேன். கணவரின் ஓய்வுக்குப் பிறகும், இந்த முதுமையிலும் அந்தப் பரபரப்பை விடமுடியலை. சும்மா உட்காரப் பிடிக்கலை'' என்று சிரிக்கிறார் மீரா ராவ். 

“இவங்க செய்யுற எந்த விஷயத்திலும் நான் தலையிடவே மாட்டேன். ஏன்னா, இவங்க என்ன செஞ்சாலும் அதுல நல்லது மட்டும்தான் இருக்கும்னு தெரியும். எனக்கு இவங்க சந்தோஷம்தான் முக்கியம்‘‘ என்று சில வரிகளோடு நிறுத்திவிட்டு, மனைவியைப் பார்க்கிறார் ரங்கநாதன். 

தொடரும் மீரா, ‘‘காலையில் ஐந்து மணிக்கு எழுந்திருச்சு ஒரு மணி நேரம் உடற்பயிற்சி, அப்புறம் நியூஸ் பேப்பர் ரீடிங், சமையல்னு வீட்டு வேலைகளை முடிச்சுட்டு, பொது விஷயத்துக்கு வந்துடுவேன். வாரத்தில் இரண்டு மூன்று நாளாவது வெளியில் பொது நிகழ்ச்சிகளுக்குப் போயிடுவேன். எந்த நொடியும் வீணாகக் கூடாதுனு நினைக்கிறேன். பெயின்ட்டிங், எம்ப்ராய்டரி எனச் சொல்லிக்கொடுத்துட்டே இருப்பேன். இது சம்பந்தமா சென்னையில் எங்கே நிகழ்ச்சி நடந்தாலும் அழைப்பிதழோ அல்லது போன்காலோ வந்துடும். அங்கே என் பங்களிப்பாக ஏதாவது ஒரு பெயின்ட்டிங் இருக்கும். 

மீரா ராவ் - ஆதர்ச தம்பதி

வயசாயிட்டாலே, 'நம்மை பிள்ளைகள், பேரன், பேத்திகள் கண்டுக்கறதில்லையே‘னு கவலைப்படாதீங்க. உங்களுக்குப் பிடிச்ச விஷயத்தை கையில் எடுத்து நாலு பேருக்கு சொல்லிக்கொடுங்க. உங்களை சுத்தி இருக்கிறவங்க எப்பவும் உங்களை உற்சாகமா வெச்சுப்பாங்க. பேரன், பேத்திகளோடு இருக்கும்போது அவங்களுக்கு அறிவூட்டும் செய்திகளையும், கதைகளையும் சொல்லிக்கொடுங்க. இன்னிக்கு நிறையக் குழந்தைகள் தாத்தா, பாட்டி பாசம் கிடைக்காமல் ஏங்கறாங்க'' என்றவர், வயதான காலத்தில் தனியாக இருப்பவர்கள் எடுத்துக்கொள்ள வேண்டிய பாதுகாப்பு நடவடிக்கைகள் பற்றியும் சொல்கிறார். 

‘உங்க ஏரியா போலீஸ் ஸ்டேஷன் நம்பரை எப்பவும் கையில் வெச்சுக்குங்க. அவசர உதவிக்குத் தேவைப்படும் போன் நம்பர்களையும் ஒரு டைரியில் நோட் பண்ணிவெச்சுக்கங்க. அக்கம்பக்கத்து வீடுகளில் அன்பா பழகி நல்ல உறவை வளர்த்துக்கங்க. தினமும் நியூஸ் பேப்பரையோ, டிவி நியூஸையோ படிக்க, பார்க்க மறந்துடாதீங்க. அப்டேட் எப்பவும் உங்களுக்கு உதவும்‘‘ என்ற மீரா, மூன்று வருடங்களுக்கு முன்புதான் கம்ப்யூட்டர் வகுப்புக்குப்போய் கம்ப்யூட்டர் இயக்க கற்றுக்கொண்டாராம். 

'‘என் உறவுக்காரங்க, கூடப்பிறந்தவங்க நிறைய பேர் வெளிநாடுகளில் இருக்காங்க. அவங்களோடு பேசவும், சாட் பண்ணவும் ஃபேஸ்புக் உதவுது. நான் செய்ய நினைக்கும் டிசைன்களை கூகுளிலும், யூடியூப்லேயும் பார்த்துக் கத்துக்க முடியுது. அதை மத்தவங்களுக்கு கத்துக்கொடுக்க முடியுது. எங்களுக்கு குழந்தைகள் இல்லையேனு என்னைக்குமே நினைச்சதில்லே. எனக்கு அவரும், அவருக்கு நானும்தான் குழந்தையா இருக்கோம்‘‘ என்கிறார் மீரா. 

குழந்தை மனம் மாறாமல் சிரிக்கிறார்கள் இந்த பேரிளம் தம்பதிகள்.

நீங்க எப்படி பீல் பண்றீங்க


டிரெண்டிங் @ விகடன்