இலங்கைக் கடற்படை தளபதியான தமிழரின் பதவி பறிப்பு! வலுக்கும் எதிர்ப்புகள் | Tamil people protest against the suspension of Sri Lanka Navy Commander

வெளியிடப்பட்ட நேரம்: 14:24 (13/11/2017)

கடைசி தொடர்பு:14:24 (30/06/2018)

இலங்கைக் கடற்படை தளபதியான தமிழரின் பதவி பறிப்பு! வலுக்கும் எதிர்ப்புகள்

இலங்கைக் கடற்படையில்  தளபதியாக இலங்கையின் சிறுபான்மையினத்தைச் சேர்ந்த தமிழரான சின்னையாவை வெறும் இரண்டு மாதத்துக்கு மட்டும் பதவி வழங்கி, பின் அவரின் பதவியைப் பறித்த செயல் தமிழர்களுக்கு இழைக்கப்பட்ட துரோகம் என வடக்கு மாகாண எம்.பி சுரேஷ் பிரேமசந்திரன் தெரிவித்தார்.

கடந்த ஆகஸ்ட் 22-ம் தேதி இலங்கைக் கடற்படையின் 21-வது கடற்படைத் தளபதியாக தமிழரான டிராவிஸ் சின்னையாவை நியமித்தது இலங்கை அரசு. இலங்கை ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவால் கடற்படையின் 21-வது தளபதியாக ரியட் அட்மிரல் டிராவிஸ் சின்னையா நியமிக்கப்பட்டார்.

இலங்கை கடற்படை தளபதியாக நியமிக்கப்பட்ட தமிழர் சின்னையா


இலங்கையில் இடம்பெற்ற மூன்று தசாப்த கால யுத்தத்துக்குப் பின்னர் முதன்முறையாக இலங்கையின் முப்படைகளில் ஒன்றான கடற்படைக்குத் தமிழர் ஒருவரை தளபதியாக நியமிக்கப்பட்டது தமிழர்களிடையே  சிரிசேனாவின் மீது நம்பிக்கையையும் மகிழ்ச்சியையும் ஏற்படுத்தியது.

இந்த நம்பிக்கையும், மகிழ்ச்சியும் 2 மாதங்கள் கூட நீடிக்காத நிலையில் இலங்கைக் கடற்படைத் தளபதியாக இருந்த தமிழரான ரியட் அட்மிரல் டிராவிஸ் சின்னையாவை நீக்கிவிட்டு சிங்கள இனத்தைச் சேர்ந்தவரான ரியர் அட்மிரல் சிறிமெவன் ரணசிங்காவை  புதிய கடற்படை தளபதியாக ஜனாதிபதி சிறிசேனா நியமித்துள்ளார். மேலும், சிறிமெவன் ரணசிங்கா வைஸ் அட்மிரலாகவும் பதவி உயர்த்தப்பட்டுள்ளார்.

இலங்கை கடற்படையின் புதிய தளபதியாக நியமிக்கப்பட்ட சிறிமெவன் ரணசிங்கா


 இலங்கை ஜனாதிபதி சிறிசேனாவின் இந்த நடவடிக்கைக்கு தமிழர்களிடையே எதிர்ப்பு எழுந்துள்ளது.  இதுகுறித்து  இலங்கை செய்தியாளர்களிடம் பேசிய வடக்கு மாகாண எம்.பி சுரேஷ் பிரேமசந்திரன், ''இலங்கையில் வாழும் தமிழர்களுக்கு ஆதரவாக செயல்படுவதாக காட்டிக்கொண்ட ஜனாதிபதி மைத்திரி பால சிறிசேனா தமிழரான சின்னையாவை இலங்கைக் கடற்படையின் தளபதியாக நியமித்தார். அவர் நியமனம் செய்யப்பட்டு 2 மாதங்களுக்கு ஊடாகவே சின்னையாவை நீக்கிவிட்டு சிங்களரான ஒருவரை கடற்படை தளபதியாக நியமித்துள்ளனர். இதன் மூலம் தமிழர் ஒருவருக்கு கடற்படைத் தளபதி பணி வழங்கியது மிகப் பெரிய நாடகம் என தெரியவந்துள்ளது. இதன் மூலம் தமிழ் மக்களுக்கு இலங்கை அரசு மிகபெரிய துரோகம் செய்துவிட்டது'' என்றார். 

ஏற்கெனவே தமிழர்களின் அடையாளமாக திகழ்ந்தவரும், 21 ஆண்டுகள் அமைச்சர் பதவி வகித்தவருமான சவுமிய மூர்த்தி தொண்டமானின் சேவையைப் பாராட்டி இலங்கையில் பல்வேறு இடங்களுக்குச் சூட்டப்பட்டிருந்த அவரது பெயரை நீக்கிவிட்டு வேறு பெயர் வைத்துள்ளது. இந்த நிலையில், நியமிக்கப்பட்ட 2 மாதங்களில் தமிழர் ஒருவர் வகித்த கடற்படைத் தளபதி பதவியையும் பறித்திருக்கிறது சிங்கள இனவாத அரசு.