வெளியிடப்பட்ட நேரம்: 15:28 (13/11/2017)

கடைசி தொடர்பு:15:28 (13/11/2017)

ஐ.டி ரெய்டைத் தொடர்ந்து திவாகரனுக்கு சம்மன்

வருமான வரித்துறையினரின் தொடர் ஐந்து நாள் சோதனையைத் தொடர்ந்து, இன்று திவாகரனுக்கு சம்மன் அனுப்பப்பட்டுள்ளது.

திவாகரன்

சசிகலா, தினகரன் உறவினர்கள் மற்றும் ஆதரவாளர்கள் வீடுகளிலும் அவர்களுக்குச் சொந்தமான நிறுவனங்களிலும், ஐந்தாம் நாளாக இன்றும் வருமான வரித்துறையினர் சோதனை நடத்திவருகின்றனர். சசிகலாவின் சகோதரர் திவாகரனின் வீடு மற்றும் அவருக்குச் சொந்தமான இடங்களில், கிட்டத்தட்ட 180 இடங்களுக்கும் மேல் நேற்று சோதனை நடந்தது. திவாகரன் வீடு மற்றும் அவருக்குச் சொந்தமான நிறுவனங்கள், அங்கு பணியாற்றும் மேலாளர், ஊழியர்களின் வீடுகள் என தமிழகத்தில் சென்னை, விழுப்புரம், திருச்சி, கோவை, தஞ்சை என மொத்தம் 105  இடங்களில் இந்தச் சோதனை நடத்தப்பட்டது. இது தவிர ஹைதராபாத், பெங்களூரு, டெல்லி ஆகிய  82 இடங்களில் நடைபெற்றது. மொத்தம் 187 இடங்களில் இந்தச் சோதனை நடைபெற்றது. ஐந்தாவது நாளாக இன்று சென்னை, நீலகிரி உள்ளிட்ட பகுதிகளில் தொடர் சோதனை நடைபெற்றுவருகிறது.

இந்நிலையில் இன்று, சென்னை தலைமை வருமான வரித்துறை அலுவலகத்தில் கர்நாடக அ.தி.மு.க அம்மா அணிச் செயலாளரும் தினகரன் ஆதரவாளருமான புகழேந்தி, சசிகலாவின் மருத்துவர் சிவக்குமார் ஆகியோர் விளக்கமளித்துவருகின்றனர். இந்த வேளையில் திவாகரனின் வீடு, கல்லூரி ஆகிய இடங்களில் நடந்த சோதனையைத் தொடர்ந்து, திவாகரனை விசாரணைக்கு நேரில் ஆஜராகுமாறு வருமான வரித்துறையினர் உத்தரவிட்டுள்ளனர்.