வெளியிடப்பட்ட நேரம்: 16:10 (13/11/2017)

கடைசி தொடர்பு:16:10 (13/11/2017)

'கலெக்டரே பயிர்க் காப்பீட்டுத் தொகை வழங்குங்கள்'- மறியலில் ஈடுபட்ட 30 கிராம விவசாயிகள்

ராமநாதபுரத்தில் பயிர் காப்பீடு கோரி விவசாயிகள் சாலை மறியல்

ராமநாதபுரத்தில் முறையாக பயிர்க் காப்பீட்டுத் தொகையை வழங்கக் கோரி, தமிழக விவசாய சங்கத்தினர் மறியல் போராட்டம் நடத்தினர்.

ராமநாதபுரம் மாவட்டத்தில்,  ஒரு சில பகுதிகளைத் தவிர 90 சதவிகித விவசாய நிலங்கள் வானம்பார்த்த பூமிதான். இதனால், மழையை நம்பியே இப்பகுதி விவசாயிகள் வேளாண்மைப் பணிகளில் ஈடுபட்டுவருகின்றனர். கடந்த ஆண்டு, போதுமான மழை பெய்யவில்லை.  அதனால், ராமநாதபுரத்தின் நெற்களஞ்சியம் என அழைக்கப்படும் திருவாடானை பகுதிகளில்கூட முழுமையாக நெற்பயிர்கள் விளையவில்லை.

இந்நிலையில், விளையாத பயிர்களுக்கு மத்திய அரசு கொண்டுவந்த காப்பீட்டுத் திட்டத்தின்மூலம் ஓரளவாவது நஷ்டஈடு பெறலாம் என்ற நம்பிக்கையில், மாவட்டத்தில் உள்ள பெரும்பகுதி விவசாயிகள் தங்கள் நிலங்களை காப்பீடுசெய்திருந்தனர். ஆனால், காப்பீடு செய்த விவசாயிகளில்  தேர்போகி, கழுகூரணி, குயவன்குடி உள்ளிட்ட சுமார் 50 கிராமங்களைச் சேர்ந்த விவசாயிகளுக்கு காப்பீடு வழங்கப்படவில்லை.சதை வலியுறுத்தி, கடந்த மாதம் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தை  முற்றுகையிட்டுப் போராட்டம் நடத்தினர். மாவட்ட ஆட்சியர், அக்டோபர் மாத இறுதிக்குள் அனைத்து விவசாயிகளுக்கும் பயிர்க் காப்பீட்டுத் தொகையை வழங்க நடவடிக்கை எடுப்பதாக உறுதியளித்தார்.

 அதன் பின்னரும், விவசாயிகளுக்கு பயிர்க்  காப்பீட்டுத் தொகை வழங்கப்படவில்லை.  அதைக் கண்டித்தும் பயிர்க் காப்பீட்டுத் தொகையை கலெக்டர் உடனடியாக வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று வலியுறுத்தியும் ராமநாதபுரம் ஊராட்சி அலுவலகம் முன்பு தமிழக விவசாயிகள் சங்கத்தினர் மறியலில் ஈடுபட்டனர். விவசாய சங்கச் செயலாளர் கல்யாணசுந்தரம் தலைமையில் நடந்த இந்த மறியல் போராட்டத்துக்கு மாவட்ட தலைவர் முத்துராமு முன்னிலை வகித்தார்.  30 கிராமங்களைச் சேர்ந்த விவசாயிகள் இந்த மறியலில் ஈடுபட்டதால், அப்பகுதியில் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. இதையடுத்து, அங்கு வந்த போலீஸார் மறியலில் ஈடுபட்ட விவசாயிகளைக் கைதுசெய்தனர்.  அதன் பின் போக்குவரத்து துவங்கியது.