உற்பத்தியை நிறுத்துவதைத் தவிர வேறு வழியில்லை - கொந்தளிக்கும் தீப்பெட்டி உற்பத்தியாளர்கள் | 'We don't have any other way!' - says Matchbox manufacturers

வெளியிடப்பட்ட நேரம்: 17:20 (13/11/2017)

கடைசி தொடர்பு:17:20 (13/11/2017)

உற்பத்தியை நிறுத்துவதைத் தவிர வேறு வழியில்லை - கொந்தளிக்கும் தீப்பெட்டி உற்பத்தியாளர்கள்

match works

தீப்பெட்டிக்கு விதிக்கப்பட்டுள்ள 18 சதவிகித ஜி.எஸ்.டி வரிக் குறைப்பு  அறிவிப்பை எதிர்பார்த்தது தங்களுக்கு ஏமாற்றம் அளித்தாலும் இத்தொழிலைத் தொடர்ந்து நடத்த இயலாத சூழ்நிலை நிலவி வருவதால் தமிழகம் முழுவதுமுள்ள தீப்பெட்டி ஆலைகளை மூடி, ஆலையின் சாவிகளை மாவட்ட ஆட்சித் தலைவர்களிடம் கொடுக்க முடிவு செய்துள்ளதாகக் கோவில்பட்டியில் சிறு தீப்பெட்டி உற்பத்தியாளர்கள் சங்கச் செயலாளர் சேதுரத்தினம் தெரிவித்துள்ளார்.

இந்தியாவில் உற்பத்தி செய்யப்படும் தீப்பெட்டிகளில் 87 சதவிகிதம் தமிழகத்தில்தான் தயாரிக்கப்படுகிறது. அதிலும் தூத்துக்குடி, நெல்லை, விருதுநகர், வேலூர் மற்றும் தருமபுரி மாவட்டங்களில் தீப்பெட்டித் தொழில் நடைபெற்று வந்தாலும், தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டி முக்கிய இடம் வகிக்கிறது. இத் தீப்பெட்டித் தொழிலை நம்பி நேரிடையாகச் சுமார் 5 லட்சும் பேரும் மறைமுகமாக 2 லட்சம் பேரும் ஈடுப்பட்டு வருகின்றனர். தீப்பெட்டி தொழிலைச் சார்ந்து குச்சி தயாரித்தல், மெழுகுபொருள்கள், அட்டை தயாரித்தல் எனச் சார்பு தொழிலும் சுமார் 1 லட்சத்துக்கும் மேற்பட்டவர்கள் உள்ளனர். தமிழகம் முழுவதும் 2,782 தீப்பெட்டி ஆலைகள் இயங்கி வருகின்றன. தற்போது தீப்பெட்டி தொழில் முடங்கிவிட்டது.

 sethu rathinamஇது குறித்து பேசிய சேதுரத்தினம், ‘‘கடந்த 2 ஆண்டுகளுக்கு முன்பு சிறுதொழில் பட்டியலிலிருந்து தீப்பெட்டித் தொழில் நீக்கப்பட்டது. இதனால் சரிவுக்குச் சென்ற இத் தொழிலைப் பாதுகாக்கத் தீப்பெட்டி உற்பத்தியாளர்கள் போராடி வந்த நிலையில் 18 சதவிகித ஜி.எஸ்.டி வரி விதிக்கப்பட்டதால் இத்தொழில் முற்றிலுமாக முடங்கும் அபாயம் ஏற்பட்டுள்ளது. வரியைக் குறைக்க வலியுறுத்தி தீப்பெட்டி உற்பத்தியாளர்கள் வேலைநிறுத்தப் போராட்டத்தில் ஈடுபட்டனர். தீப்பெட்டிக்கு ஜி.எஸ்.டி வரியைக் குறைக்க மத்தியரசிடம் வலியுறுத்தி நடவடிக்கை எடுக்கப்படும் என்று அமைச்சர்கள் உறுதியளித்தால் போராட்டத்தைக் கைவிட்டனர். 

இந்நிலையில் கடந்த சனிக்கிழமை கௌகாத்தியில் நடந்த ஜீ.எஸ்.டி கூட்டத்தில் பல பொருள்களின் ஜி.எஸ்.டி வரி குறைக்கப்பட்ட நிலையில் தீப்பெட்டிக்கு குறைக்கப்படாததால் தீப்பெட்டி உற்பத்தியாளர்கள் ஏமாற்றம் அடைந்தனர். பட்டாசு உற்பத்திக்கு விதிக்கப்பட்ட 28 சதவிகித ஜி.எஸ்.டி வரியை 18 சதவிகிதமாகக் குறைக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. எங்களின் கோரிக்கைகளை அமைச்சர்களிடம் தெரிவித்தும், எவ்வித பலனும் ஏற்படவில்லை. ஏற்கெனவே நலிவுடைந்துள்ள நிலையில் தற்போது  ஜி.எஸ்.டி வரியால் முற்றிலும் முடங்கிப் போய்யுள்ளது. அடுத்த மாதம் மத்திய, மாநில நிதியமைச்சர்கள் பங்குபெறும் ஜி.எஸ்.டி குறித்த கூட்டத்தில் தீப்பெட்டிக்கு விதிக்கப்பட்ட ஜி.எஸ்.டி வரியில் சலுகை ஏற்படுத்த நடவடிக்கை எடுக்காவிட்டால்,  தீப்பெட்டி ஆலைகளை மூடி அந்தந்த மாவட்ட ஆட்சித் தலைவரிடம் ஆலையின் சாவியைக் கொடுக்க முடிவு எடுத்துள்ளோம்’’ என்றார்.

 

நீங்க எப்படி பீல் பண்றீங்க