காப்பீட்டுத் தொகை வழங்காவிட்டால் முதல்வர் முன்பு விஷம் குடிப்போம் - கொந்தளித்த விவசாயிகள்

‘‘அனைத்து மானாவாரி விவசாயிகளுக்கும் வரும் 20-ம் தேதிக்குள் பயிர்காப்பீட்டுத் தொகையை வழங்காவிட்டால் தூத்துக்குடியில் நடைபெறவுள்ள எம்.ஜி.ஆர் நூற்றாண்டு விழாவில் முதல்வர் முன்பு விஷம் குடிப்போம்’’ எனக் கோவில்பட்டியில் நடந்த திருவோடு ஏந்தி பிச்சையெடுக்கும் போராட்டத்தில் விவசாயிகள் தெரிவித்துள்ளனர்.

farmers protest in koviklpatti for demand crop insurance

கடந்த 2 ஆண்டுகளாக நிலுவையில் இருந்த பயிர்காப்பீட்டுத் தொகையில் 2015-16-ம் ஆண்டுக்கான தொகையை விவசாயிகளுக்கு வழங்கிட அரசு ஒப்புதல் அளித்துள்ளது. அதன்படி தூத்துக்குடி மாவட்டத்தில் விளாத்திகுளம், புதூர் ஆகிய யூனியன் பகுதிகளில் சின்ன வெங்காயம், வாழை, உளுந்து, பாசி பயிரிட்ட விவசாயிகளுக்கு மட்டும் வழங்கப்பட்டுள்ளதாகவும் மற்ற மானாவாரிப் பயிர்கள் பயிரிட்ட விவசாயிகளுக்கு காப்பீட்டுத் தொகை வராததால் விவசாயிகள் கடும் அதிர்ச்சியடைந்துள்ளனர். இந்நிலையில் மானாவாரி விவசாயப் பயிர்களுக்கும் காப்பீட்டுத் தொகையை வழங்கிட வலியுறுத்தி 300க்கும் மேற்பட்ட விவசாயிகள் கோவில்பட்டி கோட்டாச்சியர் அலுவலகத்தை முற்றுகையிட்டு திருவோடு ஏந்தி பிச்சையெடுக்கும் போராட்டத்தில் ஈடுபட்டனர். 

farmers protest in kovilpatti

போராட்டத்தில் பேசிய தமிழ் விவசாய சங்கத்தின் மாநிலத் தலைவர் நாராயணசாமி, ‘‘விவசாயிகள் நடத்திய பல போராட்டங்களால் தேசிய வேளாண்மைப் பயிர்க்காப்பீட்டுக்கழகம், மத்திய, மாநில அரசுகளின் பங்களிப்புடன் தூத்துக்குடி மாவட்டத்துக்கு கடந்த 2015-16-ம் ஆண்டுக்கு ரூ.41 கோடி பயிர்க்காப்பீட்டு இழப்பீடுத் தொகையை ஒதுக்கீடு செய்துள்ளது. கடந்த 11-ம் தேதி இழப்பீடு தொகை ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ள பட்டியலில் சின்ன வெங்காயம்,  மிளகாய், வாழைப் பயிரிட்ட விவசாயிகளுக்கும் உளுந்து, பாசி பயிரிட்ட சில கிராமங்களிலுள்ள விவசாயிகளுக்கு மட்டும்தான் காப்பீட்டுத் தொகை அறிவிக்கப்பட்டுள்ளது. சூரியகாந்தி, மக்காச்சோளம், கம்பு ஆகிய மற்ற மானாவாரிப் பயிர்களுக்கு அறிவிக்கப்படவில்லை.

தூத்துக்குடி மாவட்டத்தைப் பொறுத்தவரையில் கோவில்பட்டி, எட்டயபுரம், ஒட்டப்பிடாரம், கயத்தார் ஆகிய தாலுகாவுக்குட்பட்ட 6 பிர்காவுக்குப் பயிர்க்காப்பீட்டுத்தொகை வழங்கப்படவில்லை. இந்நிலையில் விடுபட்ட மானாவாரி விவசாயிகளுக்கு பயிர்க்காப்பீட்டுத் தொகை வழங்கிட வேண்டும். சமீபத்தில் வழங்கப்பட்டதாகக் கூறப்படும் ரூ.29 கோடி பயிர்க்காப்பீட்டுத் தொகையில் முறைகேடுகள் உள்ளது. இதன் உண்மை நிலவரத்தை அறிய சி.பி.ஐ விசாரணை நடத்திட வேண்டும். வேளாண்மைத்துறை, புள்ளியியல் துறையினரின் தவறான நடவடிக்கையினால்தான் விவசாயிகளுக்குப் பயிர்க்காப்பீட்டுத் தொகை கிடைக்கவில்லை. இதைக் கண்டித்தும் அனைத்து விவசாயிகளுக்கும் பயிர்க்காப்பீட்டுத் தொகை கிடைத்திட வலியுறுத்தியும் திருவோடு ஏந்தி முற்றுகைப் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளோம். வரும் 20-ம் தேதிக்குள் முறைகேடுகளைக் கலைந்து அனைத்து விவசாயிகளுக்கும் கப்பீட்டுத் தொகை வழங்கப்படவில்லை என்றால் வரும் 22-ம் தேதி தூத்துக்குடியில் நடைபெறவுள்ள எம்.ஜி.ஆர் நூற்றாண்டு விழாவில் முதல்வர் எடப்பாடி பழனிசாமி முன்னிலையில் விஷம் குடித்து தற்கொலை செய்யப்போகிறோம்’’ என்றார்.

Do you like the story?

Please Appreciate the Author by clapping!