வெளியிடப்பட்ட நேரம்: 17:45 (13/11/2017)

கடைசி தொடர்பு:17:45 (13/11/2017)

ஐந்து பேர் தீக்குளிக்க முயற்சி! நாகர்கோவில் கலெக்டர் அலுவலகத்தில் பரபரப்பு

கன்னியாகுமரி மாவட்ட சி.பி.எம். எல் கட்சியின் மாவட்ட செயளாலர் பால்ராஜ் தலைமையில் நான்குபேர் தங்களது தனிப்பட்ட கோரிக்கைகளை நிறைவேற்ற வலியுறுத்தி கன்னியாகுமரி மாவட்டம் நாகர்கோவிலில் உள்ள மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் தலையில் மண்ணெண்ணெயை ஊற்றி தீக்குளிப்புப் போராட்டத்தில் ஈடுபட முயன்ற 5 பேரை போலீஸார் கைது செய்தனர்.

நெல்லை மாவட்ட  கலெக்டர் அலுவலகத்தில் கடந்த சில தினங்களுக்கு முன்பு கந்து வட்டிக் கொடுமையால் ஒரு குடும்பம் தீக்குளித்து இறந்த சம்பவத்துக்குப் பின் தமிழகத்தில் உள்ள அனைத்து மாவட்ட கலெக்டர் அலுவலகத்திலும் போலீஸ் பாதுகாப்புப் போடப்பட்டுள்ளது.

அதன்படி கன்னியாகுமரி மாவட்டம் நாகர்கோவிலில் உள்ள மாவட்டக் கலெக்டர் அலுவலகத்திலும் கடந்த சில தினங்களாகப் போலீஸாரின் பாதுகாப்பு அதிகப்படுத்தப்பட்டிருந்தது. இந்நிலையில் மாவட்டத்தில் உள்ள காவல் நிலையங்களில் பொதுமக்களுக்கு அநீதி இழைக்கப்படுவதாகக் கூறியும் மற்றும் பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தியும் தனி ஒருவர் குமரி மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாகத்தில் தீக்குளிப்புப் போராட்டம் நடத்தப்போவதாகப் போலீஸாருக்குத் தகவல் வந்ததைத் தொடர்ந்து, இன்று மாவட்டக் கலெக்டர் அலுவலகத்தில் அதிகமான போலீஸார் பாதுகாப்புப் பணியில் ஈடுபடுத்தப்பட்டு இருந்தனர். தீயணைப்பு துறையினரும் தயார் நிலையில் நிறுத்தபோட்டிருந்தனர், கலெக்டர் அலுவலகத்துக்கு வரும் அரசு அதிகாரிகள் மற்றும் பொதுமக்கள் தீவிர சோதனைக்குப் பின்னரே அனுமதிக்கப்பட்டனர்.

இந்நிலையில் தீக்குளிப்புப் போராட்டம் நடத்துவதாக அறிவித்து இருந்த ஆவுடை கண்ணன் என்பவர் கலெக்டர் அலுவலகத்தின் வெளியே சாலையில் நின்றவாறு தலையில் மண்ணெண்ணையை விட்டு தீக்குளிக்க முயன்றார், இதனால் பெரும் பரபரப்பு ஏற்பட்டது, உடனடியாக அவரிடம் இருந்து மண்ணெண்ணையைப் பிடுங்கி அவரை மீட்டு போலீஸார், மற்றும் தீயணைப்பு துறையினர் அவரை சிகிச்சைக்காக மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் அவருடன் வந்த சி.பி.ஐ.எம்.எல் கட்சியின் மாவட்ட செயலாளர் பால்ராஜ், மற்றும் இரண்டு பெண்கள் உட்பட ஐந்து பேரைக் காவல்துறையினர் கைது செய்தனர், தொடர்ந்து ஆட்சியர் அலுவலகத்தில் காவல்துறையினர் குவிக்கப்பட்டு உள்ளனர்.

நீங்க எப்படி பீல் பண்றீங்க