வெளியிடப்பட்ட நேரம்: 19:15 (13/11/2017)

கடைசி தொடர்பு:12:42 (14/11/2017)

மிரட்டும் போலீஸ்... 3 பிள்ளைகளுடன் கலெக்டர் அலுவலகத்தில் தீக்குளிக்க வந்த பெண்ணால் பரபரப்பு!

சேலம் கலெக்டர் அலுவலகத்துக்கு மண்ணெண்ணெய்யுடன் 3 குழந்தைகளோடு வந்த பெண்ணை போலீஸார் பிடித்தனர். ''தலித் சமுதாயத்தைச் சேர்ந்த எங்களை காடு உழவு செய்ய முடியாமல் பிரச்னை செய்கிறார்கள். போலீஸார் அவர்களிடம் ஒரு லட்சம் வாங்கிக் கொண்டு எங்களைக் காட்டைவிட்டு வெளியேறச் சொல்கிறார்கள்'' என்று கதறி அழுதார் கலைச்செல்வி.

அந்தப் பெண்ணிடம் பேசியபோது,  ''எங்க வீட்டுக்காரர் பெயர் இளையராஜா. எங்களுக்கு சர்மிளா, அரவிந்த், சாரதி என்ற 3 குழந்தைகள். ரெண்டு குழந்தைகள் கவர்மென்ட் ஸ்கூலுக்குப் போகிறார்கள். ஒரு குழந்தை வீட்டில் இருக்கிறது. நாங்க ஆத்தூர் கெங்கவல்லி அருகே உள்ள வேப்பம்பூண்டி கிராமத்தில் குடியிருக்கிறோம். நாங்க தலித் சமுதாயத்தைச் சேர்ந்தவர்கள். 9 வருடத்துக்கு முன்பு சித்தமலை உடையாரிடம் இருந்து 2 ஏக்கர் மேட்டுக் காட்டை 5.5 லட்சத்துக்கு வாங்கினோம். அந்தக் காட்டில் கடந்த 9 ஆண்டுகளாக விவசாயம் செய்துகொண்டிருக்கிறோம். தற்போது சித்தமலை உடையாரின் தம்பி பொன்னுசாமி என்பவர் இது எங்களுடைய காடு, காட்டை எனக்கு திருப்பிக் கொடு என்று பிரச்னை செய்கிறார்.  

கடந்த ஒரு வாரமாக எங்களை அடியாட்களை வைத்து அடிக்கிறார். நாங்க வீராணம் காவல்துறையில் புகார் கொடுத்தோம். பொன்னுசாமி வீராணம் காவல்துறைக்கு ஒரு லட்சம் லஞ்சம் கொடுத்துள்ளார். அதையடுத்து வீராணம் போலீஸார் எங்களைக் காட்டைவிட்டு வெளியேறச் சொல்லி மிரட்டுகிறார்கள். அதனால் குழந்தைகளோடு தற்கொலை செய்துகொண்டு சாவதற்காக மண்ணெண்ணெய்யோடு சேலம் கலெக்டர் அலுவலகத்துக்கு வந்தோம். போலீஸார் தடுத்து நிறுத்திவிட்டார்கள். நாங்க முறையாகப் பணம் கொடுத்து வாங்கிய காட்டை எங்களிடம் திரும்பித் தர வேண்டும். அவர்கள் எங்களிடம் எந்தப் பிரச்னைக்கும் வரக்கூடாது. இல்லையென்றால் நாங்கள் குடும்பத்தோடு தற்கொலை செய்துகொள்வோம்'' என்றார்.