வெளியிடப்பட்ட நேரம்: 19:30 (13/11/2017)

கடைசி தொடர்பு:19:30 (13/11/2017)

'ஆவணங்கள் இருந்தும் வீடு இல்லை': குற்றம் சாட்டும் துப்புரவுப் பணியாளர்கள்

கோவை, வி.எச் சாலையில் உள்ள சி.எம்.சி காலனியில், மாநகராட்சியில் ஒப்பந்த அடிப்படையில் பணியாற்றும், துப்புரவுப் பணியாளர்கள் 50-க்கும் மேற்பட்ட குடும்பங்கள் வசித்து வருகின்றனர். இந்நிலையில், கடந்த நான்கு மாதங்களுக்கு முன்பு, இவர்களில் 350 குடும்பங்களுக்கு, வெள்ளலூர் பகுதியில், குடிசை மாற்று வாரியத்தின் சார்பில் வீடு ஒதுக்கப்பட்டுள்ளது.

coimbatore

இந்நிலையில், அதேப் பகுதியில் வசிக்கும், 200-க்கும் மேற்பட்ட குடும்பங்களுக்கு உரிய ஆவணங்கள் இருந்தும் வீடு ஒதுக்கப்படவில்லை என்று குற்றச்சாட்டு எழுந்துள்ளது. இதையடுத்து, பாதிக்கப்பட்டோர், தங்களுக்கு ஆவணங்களின் அடிப்படையில் வீடு ஒதுக்கித் தர வேண்டும் என்று வலியுறுத்தி, கோவை மாவட்ட ஆட்சியர் ஹரிஹரனிடம் மனு அளித்தனர்.

இது குறித்து அந்தப் பகுதியைச் சேர்ந்த மஞ்சு, "நாங்க 30 வருஷத்துக்கு மேல அந்தப் பகுதிலதான் குடியிருக்கோம். எங்களுக்கு அப்பறம் குடிவந்தவங்களுக்குக்கூட வீடு ஒதுக்கிட்டாங்க. ஆனா, எல்லா ஆவணங்கள் இருந்தும் எங்களுக்கு வீடு ஒதுக்கலை. கடந்த மாசம் 8-ம் தேதிக்குள்ள, இப்ப இருக்கற வீட்டைக் காலி பண்ணணும்னு அதிகாரிகள் சொல்றாங்க.

இத்தன வருஷமா இங்க இருந்துட்டு, இப்ப நாங்க போவோம். எனவே, அதிகாரிகங்க, எங்களுக்கு வீடு ஒதுக்கித் தரணும்" என்றார்.