தனியார் மகப்பேறு மருத்துவமனை அருகே பெரும் தீ விபத்து தவிர்ப்பு!

கோவை, தனியார் மகப்பேறு மருத்துவமனை அருகே, பெரும் தீ விபத்து தவிர்க்கப்பட்டுள்ளது.

fire

கோவை புலியகுளம் பகுதியைச் சேர்ந்தவர் கோவிந்தராஜ். இவருக்கு அதே பகுதியில் சொந்தமாக 6 வீடுகள் உள்ளன. 5 குடும்பங்கள் வாடகைக்கு குடியிருந்து வருகின்றனர். இந்த வீடுகள் ஒன்றில் வசிப்பவர் சுகுணா. இவருக்கு இரண்டு பெண் குழந்தைகள் உள்ளனர். இன்று வழக்கம்போல் வீட்டு சமையல் வேலைகளை முடித்துவிட்டு சுகுணாவும் அவர் கணவரும் பணிக்குப் புறப்பட்டனர். குழந்தைகள் இருவரும் பள்ளிக்குச் சென்றனர்.

fire

இந்நிலையில், மதியம் 1 மணியளவில் வீட்டிலிருந்து கரும்புகை கசியத்தொடங்கியது. தொடர்ந்து, வீட்டின் கூரையில் தீப்பிடித்து அருகில் உள்ள வீடுகளுக்கும் பரவியது. இதுதொடர்பாக, அக்கம்பக்கத்தினர் தீயணைப்புத் துறையினருக்குத் தகவல் அளித்தனர். இதையடுத்து தகவலின் பேரில், தீயணைப்பு நிலைய அலுவலர் அண்ணாதுரை தலைமையில், சம்பவ இடத்துக்கு இரண்டு தீயணைப்பு வாகனங்களில் வந்த 5-க்கும் மேற்பட்ட தீயணைப்பு வீரர்கள், தீயை அணைக்கும் முயற்சியில் ஈடுபட்டனர்.

சுமார் 20 நிமிட போராட்டத்துக்குப் பின்னர், தீ அணைக்கப்பட்டது. இந்த விபத்தில் வீட்டில் இருந்த பீரோ, மெத்தை மற்றும் சமையல் பாத்திரங்கள் முற்றிலுமாக எரிந்தன. முதல்கட்ட விசாரணையில், வீட்டில் இருந்த கேஸ் சிலிண்டரில் ஏற்பட்ட கசிவு காரணமாக விபத்து ஏற்பட்டிருக்கலாம் என்று சந்தேகிக்கப்படுகிறது.

தீ விபத்து ஏற்பட்ட குடியிருப்புப் பகுதியின் அருகே, தனியாருக்குச் சொந்தமான மகப்பேறு மருத்துவமனை இயங்கிவருகிறது. தீயணைப்பு வீரர்கள் சரியான நேரத்தில், தீயை அணைக்காமல் இருந்திருந்தால், அந்தத் தீ மருத்துவமனைக்கும் பரவி பெரும் விபத்து ஏற்பட்டிருக்கும். தீயணைப்பு வீரர்கள் சரியான நேரத்தில், தீயை அணைத்ததால் பெரும் விபத்து தவிர்க்கப்பட்டது.

Do you like the story?

Please Appreciate the Author by clapping!