ஐந்தாவது நாளாக நடந்த வருமான வரித்துறை சோதனை நிறைவு!

சசிகலா உறவினர்கள், நண்பர்களின் வீடுகள், அலுவலகங்களில் கடந்த 9-ம் தேதி முதல் நடைபெற்று வந்த வருமான வரித்துறை சோதனை நிறைவுபெற்றது. 

 

சசிகலா குடும்பத்தினர், நண்பர்கள் எனத் தமிழகம், கர்நாடகா உள்ளிட்ட 4 மாநிலங்களில் 187-க்கும் மேற்பட்ட இடங்களில் ஒரே நேரத்தில் கடந்த 9-ம் தேதி காலை முதல் வருமான வரித்துறை அதிகாரிகள் சோதனை நடத்தினர். சென்னையைப் பொறுத்தவரை, ஜெயா டி.வி. அலுவலகம், அந்நிறுவனத்தின் தலைமை செயலதிகாரி விவேக்கின் வீடு மற்றும் ஜாஸ் சினிமாஸ் அலுவலகம் என பத்துக்கும் மேற்பட்ட இடங்களிலும், தஞ்சை, திருவாரூர், தேனி, கோவை, கொடநாடு எஸ்டேட் உள்ளிட்ட இடங்களிலும் ஒரேநேரத்தில் இந்தச் சோதனை நடத்தப்பட்டது. 

இந்தச் சோதனையில் கைப்பற்றப்பட்ட ஆவணங்கள்குறித்து இதுவரை எந்தத் தகவலையும் வருமான வரித்துறை அதிகாரிகள் தெரிவிக்கவில்லை. அதேநேரம், கணக்கில் வராத சொத்துகள் குறித்த ஆவணங்கள், தங்க நகைகள் உள்ளிட்டவை கைப்பற்றப்பட்டதாகச் செய்திகள் வெளியாகின. முதல் இரண்டு நாள்களில் ஒருசில இடங்களில் சோதனை முடித்துக்கொள்ளப்பட்டாலும், ஜெயா டி.வி அலுவலகம் உள்ளிட்ட இடங்களில் தொடர்ந்து ஐந்தாவது நாளாக இன்றும் சோதனை நடந்தது. இந்தநிலையில், தமிழகம் முழுவதும் நடைபெற்ற வருமான வரித்துறை சோதனை முழுமையாக நிறைவடைந்ததாக வருமான வரித்துறை வட்டாரங்கள் தெரிவித்துள்ளன. சோதனை நிறைவுபெற்றதைத் தொடர்ந்து கைப்பற்றப்பட்ட ஆவணங்களைச் சரிபார்க்கும் பணிகள் நடைபெற்று வருவதாகத் தெரிகிறது. விசாரணைக்கு ஆஜராகுமாறு வருமான வரித்துறை அளித்த சம்மனின் அடிப்படையில், கர்நாடக மாநில அ.தி.மு.க. அம்மா அணிச் செயலாளர்  புகழேந்தி மற்றும் ஜெயலலிதாவின் உதவியாளர் பூங்குன்றன் ஆகியோர் சென்னை நுங்கம்பாக்கத்தில் உள்ள வருமான வரித்துறை அலுவலகத்தில் ஆஜராகினர்.

Do you like the story?

Please Appreciate the Author by clapping!