கந்துவட்டி முதல் குழந்தைத் திருமணம் வரை... டி.எஸ்.பி-யின் வீதிப் பிரசாரம்

 

dsp

 

மதுரை மாவட்டம் மேலூர் பகுதி பல கிராமங்களை உள்ளடக்கிய பெரிய தொகுதி. அமைச்சர் கக்கன் எம்.எல்.ஏ-வாக இருந்த இந்தப் பகுதி மிகவும் செழிப்பாக இருந்தது . கிரானைட் முதலைகளால் கொஞ்சம் கொஞ்சமாக இயற்கை வளங்களும் புராதன சின்னங்களும் அழிக்கப்பட்ட பகுதியாக மாறியது. இங்கு உள்ள விவசாயப் பெருங்குடி மக்கள், விவசாயம் குறைந்த பின் கட்டட வேலை, டயர் கம்பெனியில் கூலி வேலை என்று வாழ்வாதாரத்தைத் தக்கவைத்து வருகின்றனர். ஆசிய அளவில் கொலு தயாரிப்பில் முன்னோடியாக விளங்கிய மேலூர், விவசாயம் அழிந்ததால் கொலு தயார் செய்வதில்கூட பின்னுக்குத் தள்ளப்பட்டுவருகிறது. இந்நிலையில், கிடைத்த வேலைகளைச் செய்துகொண்டு வாழ்க்கை நடத்திவரும் இவர்களுக்குக் கந்துவட்டி கடன் தொல்லை இருப்பதாகப் புகார் எழுந்துவருகிறது.

நெல்லையில் நடந்த கொடூரச் சம்பவத்தைத் தொடர்ந்து கந்துவட்டியை மேலூர் பகுதியில் ஒழிக்க வேண்டும் என மேலூர் டி.எஸ்.பி சக்கரவர்த்தி பொதுமக்களிடையே விழிப்பு உணர்வு பிரசாரம் செய்துவருகிறார். இன்று, கட்டடத் தொழிலாளர் வேலைக்குக் கூடும் இடங்களுக்கு அதிகாலை சென்று கந்துவட்டியைப் பற்றி பேசி டி.எஸ்.பி. சக்கரவர்த்தி விழிப்பு உணர்வு ஏற்படுத்தினார். அன்றாடம் கிடைக்கும் பணத்தை அரசு வங்கி மற்றும் அஞ்சல் அலுவலகத்தில் சென்று எப்படி சேமிக்க வேண்டும் என்றும், மதுவின் தீமைகள் பற்றியும் டி.எஸ்.பி. அவர்களுக்கு விளக்கினார். அதைத்தொடர்ந்து மேலூரில் உள்ள அரசு மற்றும் தனியார் பள்ளிகளுக்கு சுற்றுப் பயணம்போல் சென்று குழந்தைத் தொழிலாளர் முறை, குழந்தைத் திருமணம், பாலியல் தொல்லை குறித்து விழிப்பு உணர்வு ஏற்படுத்தினார். மேலும், பள்ளி மாணவர்கள் தங்களது பெற்றோர்கள் கந்துவட்டி வாங்காமல் தங்களது பணத்தையே எப்படி சேமித்து பயனுள்ளதாக மாற்றுவது குறித்து மாணவர்களுக்கு பல்வேறு ஐடியாக்களும் கொடுத்தார்.  

 

டி.எஸ்.பி சக்கரவர்த்தி  மேலூரில் பணிக்குச் சேர்ந்ததிலிருந்து, அந்தப் பகுதியில் போக்குவரத்து நெரிசலைக் கட்டுப்படுத்தினார். கடந்த தீபாவளியின்போது தொடர்ச்சியாக 4 நாள்கள் இரவில் தூக்கம் இல்லாமல் பாதுகாப்பு ஏற்பாடுகளைக் கவனித்த அவர், தற்போது கந்துவட்டிக்கு எதிராகக் களமிறங்கியுள்ளார். அவரது பணியை மேலூர் பகுதி சமூக ஆர்வலர்கள் பாராட்டிவருகின்றனர்.

Do you like the story?

Please Appreciate the Author by clapping!