300 வயது வேப்பமரத்தைப் பொக்கிஷமாய் பாதுகாக்கும் கோயம்பாக்கம் கிராமம்! #VikatanExclusive

கும்கி படத்தில் "இந்த மரத்துக்கு 200 வருஷ வரலாறு இருக்கு. எங்க மூதாதையர் இங்கதான் வளர்ந்தாங்க. இடிவிழுந்து மரம் போனாலும், இந்த மரத்தைத்தான் தெய்வமா மதிச்சிக்கிட்டு வர்றோம்" என்கிற வசனத்துடன்தான் படம் தொடங்கும். அப்படி ஒரு மரத்தைப் பற்றிய கட்டுரைதான் இது.

வேப்ப மரம்

காஞ்சிபுரம் மாவட்டம், வாலஜாபாத் அருகிலுள்ள கோயம்பாக்கம் கிராமம். இக்கிராமத்தின் நுழைவாயிலில் இருக்கிறது அந்த ஒற்றை வேப்பமரம். அதிக அடர்த்தியாகவும் கம்பீரமாகவும் நிலைத்து நிற்கிறது. பக்கத்தில் பிள்ளையார் சிலை ஒன்று வைக்கப்பட்டுள்ளது. வேப்பமரத்தைச் சுற்றிலும் சிவப்பு நிற துணி சுற்றப்பட்டிருந்தது. வேப்ப மரத்துக்குப் பக்கத்தில் இருந்த மரங்களில் இருந்த விறகை எடுத்துக்கொண்டிருந்த இருவர், வேப்ப மரத்திலிருந்து விழுந்த விறகை மட்டும் ஏனோ எடுக்கவில்லை. அது நமக்கு ஆச்சர்யத்தைக் கொடுக்கவே அவ்வூரைச் சேர்ந்த வீரராகவன் என்ற விவசாயியிடம் பேசினோம். அவர் சொன்ன தகவல்கள் நமக்கு மேலும் ஆச்சர்யத்தை அளிப்பதாக இருந்தது.

"இந்த வேப்பமரத்தோட வயசு 300 வருஷத்துக்கும் மேல. எங்க முன்னோர்கள் இதுபத்தி எங்ககிட்ட நிறைய சொல்லியிருக்காங்க. கோயம்பாக்கம் கிராமம் பழங்காலத்துல சைவமும், வைணவமும் சேர்ந்ததா இருந்துச்சு. இந்த மரத்துக்குப் பக்கத்துல இருக்குற வைணவச் சக்கரம் கொண்ட நடுகல்லும், இடிஞ்சு போன சிவன் கோவிலும்தான் அதுக்கு சாட்சி. வேப்ப மரத்தை கிராம மக்கள் தெய்வமா கும்பிடுறாங்க. அதனாலதான், வேப்ப மரத்தோட குச்சியைக் கூட யாரும் எடுக்க மாட்டாங்க. மரத்தைச் சுத்தியும் நாலாப்பக்கமும் வாய்க்கால் எடுத்து, சிவப்புத் துணியைக் கட்டி வழிபடுறாங்க.

வேப்பமரம்

ஒரு காலத்துல வேப்ப மரத்தோட பெரிய கிளையில பால் வடிஞ்சதாம். அதைக் கிராம மக்களும், சுற்றுவட்டார மக்களும் எடுத்துக்கிட்டுப் போய் தீராத நோயெல்லாம் தீர்த்திருக்காங்க. இந்த மரத்துக்குப் பாதுகாப்பா மரத்தடியில விநாயகர் சிலையை வெச்சிருக்கோம். மாட்டுப்பொங்கல் அன்னைக்குப் பக்கத்துல இருக்குற வைணவச் சக்கரத்துக்கு பொங்கல் வச்சுட்டுத்தான் மாடுகளை அவுத்து விடுவோம். இது காலங்காலமா நடந்துகிட்டு வர்ற சம்பிரதாயம். இது எதுக்குன்னு யாரும் இதுவரைக்கும் சொல்லலை. ஆனா, அதுபோக்குல நடந்துக்கிட்டுருக்கு. ஊருக்குள்ள யாருக்கும் காய்ச்சல், தலைவலி, உடம்பு சரியில்லைனா இந்த மரத்தோட பட்டை, இலையைப் பறிச்சிக்கிட்டுப் போயி கஷாயம் வச்சிக் கொடுத்துடுவாங்க. உடம்பு உடனே சரியாகிடும். இதுதவிர, அதிக மன அழுத்தம் இருக்குறவங்க இந்த மரத்துக்கு அடியில வந்து உட்கார்ந்துட்டுப் போறது உண்டு. இது எல்லாமே சிலர் அறிவியல்னு சொல்வாங்க, சிலர் தெய்வ நம்பிக்கைனு சொல்வாங்க. இந்த மரம் பாதுகாப்பா இருக்குதுங்குற விஷயமே மனசுக்கு சந்தோஷத்தைக் கொடுக்குது" என்றவர், வைணவக் கல்லையும் பால் வடிந்ததாகச் சொல்லப்படும் இடத்தையும் சுற்றிக் காட்டினார். 

வேப்பமரம்

“வேப்ப மரத்துல சில வருஷத்துக்கு முன்னால பெருமழை பெய்ஞ்சப்போ ஒரு கிளை மட்டும் முறிஞ்சு விழுந்துடுச்சு. இடி தாக்கித்தான் அந்தக் கிளை விழுந்ததா சிலபேர் சொல்றாங்க. மரக்கிளை முறிஞ்சு விழுந்த நேரம் ஊரே சோகத்துல இருந்துச்சு. எங்க முன்னோர்கள் எல்லோரும் பார்த்த மரமாச்சே மரக்கிளை முறிஞ்சதைப் பத்தித்தான் அன்னைக்கு ஊரே பேசிக்கிட்டு இருந்துச்சு. இந்த மரத்துக்கிட்ட வரணும்னாலே ஆட்கள் சுத்தமா இருந்தா மட்டும்தான் வருவாங்க. அந்த அளவுக்கு எங்களுக்கு இந்த மரத்துமேல அதிகமான அக்கறை இருக்கு. பழைய மரத்தைப் பாதுகாக்குறோம்ங்குற சந்தோசத்துலயே இந்த ஊர் மக்கள் இதை வெளியில சொல்றதில்லை. வேப்ப மரத்துக்கு நடுவுல ஒரு பனைமரம் முளைச்சி வந்தது. அப்புறம் ஒரு கட்டத்துக்கு மேல பனை மரம் தாக்குப் பிடிக்க முடியாம கீழ விழுந்துடுச்சு. அறிவியலோ, தெய்வமோ மரம் பாதுகாப்பா இருந்தா அதுவே போதும்ங்க, எங்க ஊரும் நல்லா இருக்கும், எங்க மக்களும் நல்லா இருப்பாங்க" என்றபடி வயலை நோக்கிப் புறப்பட்டார், வீரராகவன். அவர் சொன்னதுபோலவே பலமாக வீசிய காற்றுக்குக் கம்பீரமாக நின்றிருந்தது அந்த வேப்பமரம்.

Do you like the story?

Please Appreciate the Author by clapping!