”பியூர் சைன்ஸ் படிச்சா நர்ஸிங்கில் இடம் இல்லையாம்..!”- கலந்தாய்வில் கலங்கும் மாணவிகள்

நர்சிங் கலந்தாய்வு

டிப்ளோமோ நர்ஸிங் படிப்புகளுக்கான கலந்தாய்வில், பிற்படுத்தப்பட்டோர் பிரிவுக்கான இடங்கள் விதிமுறை மீறி பூர்த்தி செய்யப்பட்டுள்ளதாகக்கூறி மாணவிகளும் அவர்களின் பெற்றோர்களும் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

டிப்ளோமோ நர்ஸிங் படிப்புக்கான கலந்தாய்வு, கடந்த 9 ஆம் தேதி முதல் சென்னை ஓமந்தூரார் அரசினர் தோட்டத்தில் நடைபெற்று வருகிறது. இதில் கலந்துகொள்வதற்காகத் தமிழகத்தின் பல்வேறு பகுதிகளிலிருந்தும் மாணவிகள் வந்திருந்தனர். இந்த நிலையில், ''பிற்படுத்தப்பட்டோர் பிரிவுக்கான இடங்கள் நேற்றே முடிவடைந்துவிட்டன. அதனால் மாணவிகள் வீட்டுக்குச் செல்லலாம்'' என்று கலந்தாய்வு அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். ஆனால், மாணவிகளோ, "எந்த அடிப்படையில், நீங்கள் இடத்தைப் பூர்த்தி செய்தீர்கள்" என்று அதிகாரிகளிடம் விளக்கம் கேட்டுள்ளனர். இதையடுத்து, மாணவிகள் மற்றும் அவர்களது பெற்றோர்களை அழைத்துப் பேச்சுவார்த்தை நடத்தியுள்ளனர் அதிகாரிகள்.

இந்தப் பேச்சுவார்த்தையில் பங்கேற்ற மாணவிகள் மற்றும் பெற்றோர்கள் நம்மிடம் பேசுகையில், "நர்ஸிங் படிப்பில் சேருவதற்கு பியூர் நர்சிங் கலந்தாய்வுக்கு வந்த மாணவிசயின்ஸ் படித்திருக்க வேண்டும். ஆனால், தொழில்முறைப் படிப்பு படித்த (vocational group) மாணவிகளைக் கலந்தாய்வுக்கு அழைத்து இடம் கொடுத்துள்ளனர். இதுகுறித்து நாங்கள் அதிகாரிகளிடம் விளக்கம் கேட்டதற்கு 'அரசு எதைச் சொல்கிறதோ... அதைத்தான் நாங்கள் செய்ய முடியும். வேண்டுமானால் நீங்கள் நீதிமன்றத்தில் தடை உத்தரவு வாங்கிக்கொள்ளுங்கள்' என்று சொல்லிவிட்டார்கள். மேலும் 'இந்தக் கலந்தாய்வுக்குப் பத்தாம் வகுப்பு மதிப்பெண்ணே போதுமானது. அதன் அடிப்படையில்தான் மாணவிகளைத் தேர்ந்தெடுத்தோம். அதில் பிற்படுத்தப்பட்டோருக்கான இடங்கள் முடிவடைந்துவிட்டன' என்று அதிகாரிகள் கூறிவிட்டனர். 

பிற்படுத்தப்பட்டோர் பிரிவைச் சார்ந்த நாங்கள், 'நர்ஸிங் படிப்பில் சேரவேண்டும்' என்ற கனவில்தான் கஷ்டப்பட்டு படித்துமுடித்து கடந்த ஓராண்டாகக் காத்திருந்தோம். ஆனால், இப்போது பிற்படுத்தப்பட்டோருக்கான நர்ஸிங் இடங்கள் அனைத்தும் முடிவடைந்துவிட்டன என்கிறார்கள். விசாரித்ததில், பிற்படுத்தப்பட்டோருக்கான இடங்களில், வேறு பிரிவுகளைச் சேர்ந்த மாணவிகளைச் சேர்த்துள்ளார்கள். அதுவும் பியூர் சயின்ஸ் படிக்காத, தொழிற்முறைப் படிப்புகளை மட்டுமே படித்துள்ள மாணவிகளை எல்லாம் சேர்த்திருக்கிறார்கள். இது எந்தவகையில் சரியானது? பிற்படுத்தப்பட்டோராகப் பிறந்தது எங்கள் தவறா? அல்லது நர்ஸிங் படிப்புக்கு ஆசைப்பட்டதுதான் எங்கள் தவறா? இன்னமும் எங்கள் அப்பா - அம்மா கூலி வேலைதான் செய்துகொண்டிருக்கிறார்கள். உரிய தகுதியிருந்தும் எங்களுக்கு இடம் கொடுக்கவில்லை. 

கலந்தாய்வில் இடம் கிடைக்கும் என்று ஒரு வருடமாகக்  காத்திருந்தோம். எல்லாம் வீணாகிவிட்டது. நாங்கள் படிக்க நினைத்தது எங்களுக்குப் பிடித்த துறையில் சேருவதற்காகத்தான்... நீதிமன்றத்துக்கு அலைவதற்காக அல்ல.  தயவு செய்து திறமை உள்ள மாணவர்களுக்கு இடம் கொடுங்கள்" என்று கதறி அழுதனர் மாணவிகள். இதனால் மாணவிகளும் பெற்றோர்களும் கலந்தாய்வு நடைபெறும் வளாகத்துக்கு வெளியே ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். இதையடுத்து கலந்தாய்வு மையத்தில் காவல்துறையினர் குவிக்கப்பட்டு பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டது.

நர்சிங் கலந்தாய்வுக்கு வந்த மாணவிகள்

மாணவிகளின் புகார் குறித்து விவரம் கேட்பதற்காகக் கலந்தாய்வு அதிகாரிகளைச் சந்திக்க வேண்டும் என்று நாம் கேட்டபோது, ''கலந்தாய்வு நடைபெற்றுக்கொண்டிருப்பதால், இப்போது அதிகாரிகளைச் சந்திக்கமுடியாது'' என்று கூறி அனுமதிக்க மறுத்துவிட்டனர். கடந்த 9 ஆம் தேதி ஆரம்பித்த நர்ஸிங் படிப்பகளுக்கான கலந்தாய்வு இன்றுடன் நிறைவுபெறுகிறது என்பது குறிப்பிடத் தக்கது!

Do you like the story?

Please Appreciate the Author by clapping!