வெளியிடப்பட்ட நேரம்: 10:31 (14/11/2017)

கடைசி தொடர்பு:11:17 (14/11/2017)

ஏரிகளின் பலிபீடமா கிணறுகள்..? ‘அறம்’ சுட்டிக் காட்டும் பிரச்னை #VikatanExclusive

ஆழ்துளைக் கிணறு என்பதைத்தாண்டி அறம் திரைப்படம் முன்வைக்கிற இன்னொரு முக்கியமான பிரச்னை “தண்ணீர்”. “தாகம் எடுக்காத மாதிரி ஓர் ஊசியைப் போடச் சொல்லு”, “தண்ணி கேன் எப்போது வந்ததோ அப்போதே தண்ணீர் பஞ்சம் ஆரம்பித்துவிட்டது” என்பது போன்ற தண்ணீர் சார்ந்த வசனங்கள் ஒவ்வொன்றும் உண்மை. ஒரு வேளை இந்த வருடப் பருவ மழை பொய்த்திருந்தால் இதே வசனத்தை சென்னைவாசிகள் அனைவருமே சொல்லவேண்டி வந்திருக்கும். காலை 5 மணிக்கு பல்லாவரம் - நன்மங்கலம் சாலைகளில் ஐந்து நிமிடங்களுக்கு ஒரு லாரி சாலையின் இரு புறமும் பயணித்துக்கொண்டிருக்கிறது. மூன்று கிலோ மீட்டருக்கு ஒரு “கேன் தண்ணீர்” தயாரிக்கும் நிறுவனங்கள் அங்குண்டு. ஒவ்வொரு நிறுவன வாசலிலும் குறைந்தது மூன்று லாரிகள் நின்று கொண்டிருக்கின்றன. எல்லா லாரிகளும் தண்ணீர் கொண்டு செல்லும் டேங்கர் லாரிகள். எங்கிருந்து தண்ணீர் எடுக்கிறார்கள். எங்கே போகின்றன இந்த லாரிகள்?

ஏரி

காலை 5 மணியிலிருந்து 8 மணிக்குள் கிட்டத்தட்ட 200 லாரிகள் ஏரியை ஒட்டியிருக்கிற கிணறுகளிலிருந்தும் ஏரியிலிருந்தும் தண்ணீரை எடுக்கிறார்கள். ஒரு மீட்டருக்கு இரண்டு லாரிகள் என ஆங்காங்கே நின்று கொண்டிருக்கின்றன. ஒரு லாரிக்குக் குறைந்தபட்சம் 2,000 லிட்டர் கொள்ளளவு என்றால் 2,000X200 லாரிகள், தினமும் 4,00,000 லிட்டர் தண்ணீரை விற்பனைக்கு எடுத்துக்கொண்டிருக்கிறார்கள். இங்கு எடுக்கப்படுகின்ற தண்ணீர் சென்னையின் பல பகுதிகளுக்கு விற்பனைக்குச் செல்கின்றன. புறநகர் பகுதிகளான பள்ளிக்கரணை, நன்மங்கலம், கோவிலம்பாக்கம், ஒட்டியம்பாக்கம், நெமிலிச்சேரி உள்ளிட்ட பல பகுதிகளில் நிலத்தடி நீர் சுவையாக உள்ளது.

இதனால் விவசாயக் கிணறு உரிமையாளர்கள் தண்ணீரைத் தனியாருக்குப் பல ஆண்டுகளாக விற்பனை செய்து வருகின்றனர். இவர்கள் ஒரு லாரி தண்ணீர் 500 ரூபாய் முதல் 800 ரூபாய்க்கு விற்கின்றனர். இதை வாங்கும் டேங்கர் லாரி உரிமையாளர்கள், சென்னையில் உள்ள அடுக்குமாடி குடியிருப்புகள், வீடுகள், நிறுவனங்களுக்கு ரூ.2,000 முதல் ரூ.4,000-க்கு விற்பனை செய்கின்றனர். தினமும் 200-க்கும் மேற்பட்ட லாரிகள் இயங்கி வருகின்றன. அரசு அதிகாரிகளின் அலட்சியத்தால் ஏரிகளிலிருந்து தண்ணீர் எடுத்து வருகிறார்கள். கோவிலம்பாக்கம் நன்மங்கலம் பகுதிகளுக்கு அருகே உள்ள இடங்களில் தனியார் நிறுவனங்கள் ஏரித் தண்ணீரை மின் மோட்டார்கள் மூலம் எடுத்து வருகின்றன.

பல்லாவரத்தை ஒட்டியுள்ள நெமிலிச்சேரி, நன்மங்கலம், செம்பாக்கம், மாருதி நகர், சரஸ்வதிபுரம், திருமலை நகர் உள்ளிட்ட பகுதிகளில் உள்ள விவசாயக் கிணறுகளிலிருந்து 'டேங்கர்' லாரிகள் மூலம் தண்ணீரை எடுத்து விற்பனை செய்கின்றனர். அந்தக் கிணறுகளில் தொடர்ந்து தண்ணீர் எடுப்பதால், நீர்மட்டம் குறைந்து, அப்பகுதிகளிலும் தண்ணீர் பற்றாக்குறை ஏற்பட வாய்ப்புள்ளது. நன்மங்கலம் சுற்றி இருக்கிற பகுதிகளின் முக்கிய நீர் ஆதாரமாக இருப்பது நன்மங்கலம் ஏரி. அதன் நீரும் ரகசியமாக திருடப்படுகிறது. இதனால், அப்பகுதிகளைச் சேர்ந்த பொதுமக்கள் மற்றும் நலச்சங்கத்தினர், கிணறுகளிலிருந்து தண்ணீர் எடுக்க, டேங்கர் லாரிகளுக்கு எதிர்ப்புத் தெரிவித்து வருகின்றனர்.

கிணறு

2011 ஆண்டு முதல் 2016 வரை நன்மங்கலம் ஊராட்சித் தலைவராக இருந்தவர் திருமதி செல்வராணி சுந்தர். கிணறு மற்றும் ஏரி நீர் குறித்து அவரிடம் பேசியதில், “நான் பதவியில் இருந்தவரை இந்தப் பகுதிகளில் ஏரி நீர் மற்றும் கிணற்று நீர் எந்த வகையிலும் விற்பனைக்குப் பயன்படுத்தாமல் இருந்தது. தனியார் நிறுவனங்கள் கிணறுகளிலிருந்து தண்ணீர் எடுப்பதற்கு அனுமதி கொடுக்கவில்லை. ஆனால், இப்போது நடப்பதற்கு முழுக்க அரசு அதிகாரிகள்தான் காரணம். பலமுறை தாசில்தாரிடம் சொல்லியிருக்கிறோம். ஆனால் எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை. நன்மங்கலம் ஊராட்சியில் 2015 - 2016 ல் தாய்த் திட்டத்தில் 15 லட்சம் செலவில் ஊராட்சிக்காக ஒரு கிணறு மட்டும் கட்டியிருக்கிறோம். அதைத் தவிர்த்து எந்தக் கிணற்றுக்கும் நாங்கள் அனுமதி கொடுக்கவில்லை. இப்போது ஏரிகளை ஒட்டியப் பகுதிகளில் செயல்படும் கிணறுகளைக் கட்டுப்படுத்த அரசு அதிகாரிகள் திணறி வருகின்றனர்” என்றார்.

லாரி

நன்மங்கலம் பகுதிகளில் செயல்படும் தண்ணீர் விநியோகம் செய்யும் நிறுவனங்கள் 25 லிட்டர் கொண்ட ஒரு கேனுக்கு மூன்று விலை நிர்ணயித்திருக்கிறார்கள். நிறுவனம் ஒன்று நேரடியாக 100 கேன்களுக்கு மேலாகக் கொள்முதல் செய்தால் ஒரு கேனின் விலை 10. மக்கள் நேரடியாகச் சென்று தண்ணீர் நிறுவனத்திடம் ஒரு கேன் வாங்கும் போது விலை 15. நேரடியாக வீடுகளுக்குச் சென்று “டோர் டெலிவரி” செய்ய விலை 35. இன்னும் சிலர் வீடுகளுக்கு 20 ரூபாய்க்கு ஒரு கேன் என விற்பனை செய்துக்கொண்டிருக்கிறார்கள். அவை தரமானவை அல்ல என்கின்றனர் அப்பகுதி மக்கள். சுற்றுப்பகுதிகளில் செயல்படும் எந்தக் கிணறுக்கும் அனுமதி இல்லை என்பதுதான் முக்கியமானது.  நன்மங்கலம், கோவிலம்பாக்கம், பல்லாவரம் பகுதிகள் ஏரிக்குப் பக்கத்தில் இருப்பதால் அதனை ஒட்டிய பகுதிகளில் விவசாய நிலம் வைத்திருப்போர் கிணறு அமைத்து தண்ணீரை விற்பனை செய்து வருகிறார்கள்.

சிலர் ஏரிப்பகுதிகளில் லாரிகளை நிறுத்தி மின்சார மோட்டார்கள் மூலம் நேரடியாகவே ஏரிகளிலிருந்து தண்ணீரை எடுத்து வருகிறார்கள். மழை பொழிகின்ற நாள்களில் தண்ணீர் லாரிகள் பலவும் ஏரிகளை ஒட்டியப்பகுதிகளிலிருந்து தண்ணீர் எடுப்பது இப்போதும் நடந்து வருகிறது. மழை நேரங்களில் பெரிதாக யாரும் கவனிக்கமாட்டார்கள் என்பதால் மழை பொழிகின்ற நாள்களையும் பயன்படுத்திக்கொள்கிறார்கள். சில ஆண்டுகளுக்கு முன்பு நன்மங்கலம் ஏரியில் நடுவே கிணறு தோண்டி திருட்டுத்தனமாகத் தண்ணீர் எடுத்து விற்பனை செய்வதைப் பொதுப்பணித்துறை அதிகாரிகள் கண்டுபிடித்தனர். இதையடுத்து அங்கிருந்த மோட்டார் அறை அகற்றப்பட்டது. ஆனால் சரியான நிர்வாகம் இல்லாதது, ஊராட்சிக்குத் தலைவர் இல்லாதது போன்ற காரணங்கள் எல்லாம் புதிய கிணறுகள் உருவாக முக்கியக் காரணமாக இருக்கின்றன.

கிணறுகள் மூலமாகக் கொண்டுபோகின்ற தண்ணீர் ஏரியில் இருக்கிற நிலத்தடி நீர் என்பது மக்கள், அதிகாரிகள் என எல்லோருக்கும் தெரிந்தே இருக்கிறது. நீர் சார்ந்து அங்கே  நிகழ்கிற எல்லாவற்றையும் கவனித்துச் சொல்லவேண்டுமானால் ஏரிகளின் தூக்கு மேடையாக மாறிக்கொண்டிருக்கின்றன அங்கிருக்கிற கிணறுகள் எனலாம்.


டிரெண்டிங் @ விகடன்