ஒருதலைக் காதலால் இளம்பெண் எரித்துக் கொலை! - சென்னையில் பயங்கரம்

ஒருதலைக் காதலால், சென்னையைச் சேர்ந்த இளம்பெண்ணை இளைஞர் ஒருவர் குடும்பத்துடன் எரித்துள்ளார்.

எரிப்பு

சென்னை வேளச்சேரியைச் சேர்ந்தவர் இந்துஜா. சென்னையிலேயே ஒரு தனியார் நிறுவனத்தில் பணியாற்றிவருகிறார். இந்துஜாவை காதலிப்பதாக அதே பகுதியைச் சேர்ந்த ஆகாஷ் என்பவர் நீண்ட நாள்களாகத் தொடர்ந்து தொந்தரவு செய்துவந்திருக்கிறார். ஆனால், ஆகாஷின் காதலை இந்துஜா ஏற்கவில்லை. இதன் காரணமாகக் கோபமடைந்த ஆகாஷ், இன்று இந்துஜா வீட்டின் அருகே அவர் தன் தாய் மற்றும் சகோதரியுடன் நின்று கொண்டிருக்கும்போது பெட்ரோல் ஊற்றி தீவைத்தார். அருகில் நின்றிருந்த இந்துஜாவின் தாய் மற்றும் சகோதரிக்கும் பெட்ரோல் ஊற்றி தீ வைத்தார்.

 ஆகாஷ் தலைமறைவாக, இந்துஜா, அவரது தாய் மற்றும் சகோதரியை அருகில் இருந்தவர்கள் உடனடியாக மருத்துவமனையில் சேர்த்தனர். மிகவும் கவலைக்கிடமான நிலையில் இருந்த இந்துஜா சிகிச்சை பலனின்றி இறந்தார். அவரது தாய் மற்றும் சகோதரி தீவிர சிகிச்சைப் பிரிவில் தற்போது சிகிச்சைபெற்றுவருகின்றனர்.

இதுகுறித்து இந்துஜாவின் உறவினர் ஒருவர் கூறுகையில், “இந்துஜாவும் ஆகாஷும் ஒரே பள்ளியில் படித்தவர்கள். அப்போதிருந்தே இந்துஜாவின் விருப்பத்துக்கு மீறி தொடர்ந்து ஆகாஷ் தன்னுடைய ஒருதலைக் காதலால் தொந்தரவு கொடுத்துக்கொண்டே இருந்தான். இந்துஜாவின் பெற்றோர் ஆகாஷைக் கண்டித்து அனுப்பினர்.  அதன் பின்னர்தான், ஆகாஷ் இந்தக் கொடுமையான காரியத்தைச் செய்துள்ளான். இந்துஜாவின் அம்மா 40 சதவிகித தீக்காயத்துடனும், அவரது சகோதரி 20 சதவிகித தீக்காயத்துடனும் சிகிச்சைபெற்று வருகின்றனர். இந்துஜாவின் அப்பா, கனடாவில் மென் பொறியாளராகப் பணியாற்றிவருகிறார். அவருக்கு தகவல் சொல்லியுள்ளோம்” என்றார்.

தற்போது, ஆகாஷ் போலீஸாரால் கைதுசெய்யப்பட்டுள்ளார்.

Do you like the story?

Please Appreciate the Author by clapping!