"மிரட்டி வாங்கிய கொடநாடு எஸ்டேட்டை சட்ட ரீதியாக மீட்பேன்!" - களமிறங்கிய முன்னாள் உரிமையாளர்

கொடநாடு எஸ்டேட்டை, சசிகலா குடும்பம் மிரட்டி வாங்கியதாகவும், அதை மீட்க சட்ட ரீதியாகப் போராடுவேன் என்றும், அதன் முன்னாள் உரிமையாளர் பீட்டர் கிரேக் ஜோன் கூறியுள்ளார்.

கொடநாடு எஸ்டேட்

மறைந்த முதல்வர் ஜெயலலிதாவுக்குச் சொந்தமாக, நீலகிரி மாவட்டம், கோத்தகிரி அருகே கொடநாடு எஸ்டேட் உள்ளது. இதன் அருகிலேயே சசிகலாவுக்குச் சொந்தமான கர்சன் எஸ்டேட்டும் உள்ளது. ஜெயலலிதா இருந்தபோதே, கொடநாடு எஸ்டேட் குறித்து பல்வேறு சர்ச்சைகள் வெடித்தன. குறிப்பாக, இங்கிலாந்தைச் சேர்ந்த கிரேக் ஜோன் என்பவருக்குச் சொந்தமான கொடநாடு எஸ்டேட்டை, சசிகலா குடும்பம் மிரட்டி வாங்கியதாக கூறப்பட்டு வந்தது.

இதனிடையே, சொத்துக் குவிப்பு வழக்கில், ஜெயலலிதாவின் சொத்துகள் பறிமுதல் செய்யப்படும் பட்டியலில் கொடநாடு எஸ்டேட் இடம்பெறவில்லை என்று கூறப்பட்டது. இதையடுத்து, கடந்த நான்கு மாதங்களுக்கு முன்பே கொடநாடு எஸ்டேட்டை மீட்க சட்ட ரீதியான நடவடிக்கை எடுப்பேன் என்று அதன் முன்னாள் உரிமையாளர் பீட்டர் கிரேக் ஜோன் (கிரேக் ஜோனின் மகன்) தெரிவித்திருந்தார். இந்நிலையில், சசிகலா மற்றும் அவர்கள் சம்பந்தப்பட்ட இடங்களில் நடத்தப்பட்ட ரெய்டில், கொடநாடு எஸ்டேட்டும் தப்பவில்லை.

இதுகுறித்து கூடலூரில் செய்தியாளர்களிடம் பேசிய பீட்டர் கிரேக் ஜோன், "கடந்த 1975-ம் ஆண்டு 33 லட்சம் ரூபாய்க்கு கொடநாடு எஸ்டேட்டை வாங்கினோம். இதையடுத்து, அதில் 50 ஏக்கரை, சில காரணங்களால் விற்றோம். ஆனாலும், 900 ஏக்கர் எஸ்டேட் கைவசம் இருந்தது. ஆனால், கடன் காரணமாக எஸ்டேட்டை விற்க முடிவு செய்தோம். இதையறிந்து, சசிகலா மற்றும் ராமசாமி உடையார் குடும்பத்தினர் எங்களை அணுகினர். ஆனால், எஸ்டேட்டை அவர்களுக்கு விற்க மனமில்லை என்று கூறினோம். இருந்தபோதும், எஸ்டேட்டை கொடுக்க வேண்டும் என்று அவர்கள் எங்களுக்கு மிரட்டல் விடுத்தனர். இதுதொடர்பாக போலீஸிலும் புகார் செய்தேன். ஆனால், நடவடிக்கை இல்லை.

பீட்டர் கிரேக் ஜே◌ான்

ஒருகட்டத்தில், சசிகலா தரப்பினர் அரசு அதிகாரிகளுடன் வந்து பேச்சுவார்த்தை நடத்தினார். இதைத்தொடர்ந்து எஸ்டேட்டை 9 கோடியே 50 லட்சத்துக்கு விற்பதாக தெரிவித்தோம். அதற்கு அவர்கள், 7 கோடியே 50 லட்சம் கொடுப்பதாகவும், மேலும், வங்கிக் கடனை அடைப்பதாகவும் கூறினர். இதன்காரணமாக எஸ்டேட்டை அவர்களிடம் விற்றோம். ஆனால், அவர்கள் சொன்னதில் பாதிப் பணத்தை மட்டுமே வழங்கினர். வங்கிக் கடனையும் அடைக்கவில்லை. பின்னர், நான் என் குடும்பத்துடன் கர்நாடக மாநிலம், கூர்க் பகுதிக்கு குடியேறிவிட்டேன். கடந்த 2008-ம் ஆண்டு எனது தந்தை இறந்துவிட்டார். இதையடுத்து, எஸ்டேட் தொடர்பாக, ஜெயலலிதாவைப் பார்க்க முயற்சி செய்தோம். ஆனால், பார்க்க முடியவில்லை. ஜெயலலிதாவின் மறைவுக்குப் பிறகு, எங்களுக்கு சாதகமான சூழல் நிலவுகிறது. தற்போது, வருமானவரித்துறையினரும் ரெய்டு நடத்திவருகின்றனர். இதை எங்களுக்கு சாதகமாக்கி, சட்ட ரீதியாக கொடநாடு எஸ்டேட்டை மீட்கப் போராடுவேன்" என்றார்.

Do you like the story?

Please Appreciate the Author by clapping!