மீனவர்கள் மீது துப்பாக்கிச் சூடு நடத்திய கடலோரக் காவல்படையினர்மீது கொலைமுயற்சி வழக்குப்பதிய வேல்முருகன் கோரிக்கை

ராமேஸ்வரம் மீனவர்கள் மீது துப்பாக்கிச் சூடு நடத்திய இந்திய கடலோரக் காவல்படையினர்மீது கொலை முயற்சி வழக்குப்பதிவு செய்ய வேண்டும் எனத் தமிழக வாழ்வுரிமைக் கட்சித் தலைவர் வேல்முருகன் தெரிவித்தார்.

ராமேஸ்வரத்திலிருந்து நேற்று மீன்பிடிக்கச் சென்ற மீனவர்கள்மீது இந்திய கடலோரக் காவல்படையினர் துப்பாக்கிச் சூடு நடத்தியதில் பிச்சை மற்றும் ஜான்சன் ஆகிய இரு மீனவர்கள் காயமடைந்தனர். காயமடைந்த மீனவர்கள் இருவரும் இன்று காலை கரை திரும்பிய நிலையில் சிகிச்சைக்காக ராமேஸ்வரம் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர். இந்நிலையில் இன்று ராமேஸ்வரம் வந்திருந்த தமிழக வாழ்வுரிமைக் கட்சி தலைவர் வேல்முருகன் மருத்துவமனைக்குச் சென்று அங்கு சிகிச்சை பெற்று வரும் மீனவர்கள் இருவருக்கும் ஆறுதல் தெரிவித்தார். மேலும், கடலில் நடந்த துப்பாக்கிச் சூடு மற்றும் தாக்குதல்கள் குறித்து மீனவர்களிடம் கேட்டறிந்தார்.

துப்பாக்கி சூட்டில் காயமடைந்த மீனவர்கள்; ஆறுதல் கூறிய வேல்முருகன்

இதன் பின் செய்தியாளர்களிடம் பேசிய வேல்முருகன், ''இதுவரை இலங்கைக் கடற்படையினரால் தாக்கப்பட்டு வந்த தமிழக மீனவர்களைச் சமீபகாலமாக இந்திய கடலோரக் காவல்படையினரும் தாக்குதல் நடத்திவரும் சம்பவங்கள் நடந்தேறி வருகின்றன. இதன் உச்சபட்சமாக நேற்று நம் மீனவர்கள்மீது நமது கடலோரக் காவல்படையினரே துப்பாக்கிச் சூடு நடத்தியிருப்பது கண்டிக்கத்தக்கதாகும். நமது மீனவர்கள்மீது துப்பாக்கிச் சூடு நடத்திய இந்திய கடலோரக் காவல்படையினர்மீது கொலை முயற்சி வழக்குப்பதிவு செய்ய வேண்டும். மேலும், இந்திய பாதுகாப்புத்துறை அமைச்சரான நிர்மலா சீதாராமன் மீனவர்கள் மீது நடந்த இந்தத் தாக்குதல் குறித்து விளக்கம் அளிக்க வேண்டும். இதன் மூலம் வரும் காலங்களில் இது போன்ற அத்துமீறல்கள் நடக்காதவாறு தடுக்க வேண்டும்'' என்றார். வேல்முருகனுடன் தமிழக வாழ்வுரிமைக் கட்சி நிர்வாகி செரோன்குமார் உள்ளிட்டோர் உடனிருந்தனர்.

Do you like the story?

Please Appreciate the Author by clapping!