'டாய்லெட்டை கழுவ வைக்கிறாங்க; தமிழ்ல பேசினா ஃபைன் போடுறாங்க'- கோவை மெட்ரிக் பள்ளிமீது மாணவி பகீர் புகார்

கோவையில் உள்ள ஶ்ரீ சக்தி மெட்ரிக் பள்ளியில், மாணவர்கள் தமிழில் பேசியதற்காக, மாணவர்களுக்கு அபராதம் விதிக்கப்படுவதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது.

school

கோவை மாவட்டம் செட்டிபாளையத்தில், ஶ்ரீ சக்தி மெட்ரிக்குலேஷன் பள்ளி உள்ளது. இந்தப் பள்ளியில், மகாலெட்சுமி என்ற மாணவி 9-ம் வகுப்பு படித்துவருகிறார். இவர், தான் பயின்றுவரும் பள்ளிமீது கோவை மாவட்ட ஆட்சியரிடம் அடுக்கடுக்காக புகார் அளித்துள்ளார்.

இதுகுறித்து மாணவி மகாலெட்சுமி கூறுகையில், "எங்க ஸ்கூல்ல உள்ள டாய்லெட்டை ஸ்டூடன்ட்ஸை வெச்சுதான் சுத்தம்செய்றாங்க. கடுமையான வெயில் நேரத்துலகூட கிரவுண்டுல கல் பொறுக்க விடுறாங்க. இதனால, சில மாணவிங்க மயக்கம்போட்டு விழுந்துட்டாங்க. ஆனா அப்பக்கூட, நீங்க நடிக்காதீங்கன்னு டீச்சர்ஸ் திட்டுறாங்க.

எங்க ஸ்கூல் பி.டி சார் கார்த்தி, பொண்ணுங்ககிட்ட தப்பா நடந்துக்கிறார். ஸ்கூல்ல நாங்க தமிழ்ல பேசினா, ஃபைன் போடுறாங்க. ஹச்…னு தும்மினாக்கூட ஃபைன் கேக்கறாங்க. 200 ரூபாய் முதல் 1,000 ரூபாய் வரை ஃபைன் வாங்குறாங்க. ஃபைன் கொடுக்காட்டி, ஸ்கூல் கிரவுண்டுல சுற்றி ஓட விடுறாங்க. கிளாஸுக்கு வெளியே நிக்க வைக்கிறாங்க.

டீச்சர்ஸ் எல்லாரும் மாணவர்களை முட்டாள் பசங்கன்னு திட்டுறாங்க. எங்க பெற்றோரை கூட்டிட்டுப் போனா, அவங்களையும் தரக்குறைவாகத் திட்டுறாங்க. முக்கியமா, எங்க ஸ்கூல் கரஸ்பாண்டன்ட், கெட்ட வார்த்தைலதான் திட்டுவாங்க. எங்க ஸ்கூல்ல, குடிக்கிற தண்ணிகூட தரமாயில்லை. வீட்ல இருந்து தண்ணி எடுத்துட்டுப் போனாகூட, அதைக் கீழே ஊத்திடுறாங்க. அதனால, ஸ்டூடன்ட்ஸ் எல்லாரும் ரொம்பக் கஷ்டப்படுறாங்க" என்றார்.

கோவை மாவட்ட ஆட்சியரைத் தொடர்ந்து, மாவட்ட கல்வித் துறையிடமும் அந்தப் பள்ளிமீது புகார் அளிக்கப்பட்டுள்ளது. குழந்தைகள் தினத்தன்று, மாணவி அளித்துள்ள இந்தப் புகார், கோவையில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

Do you like the story?

Please Appreciate the Author by clapping!