இறந்தே பிறந்த சிங்கக்குட்டி! காரணம் சொல்லும் வண்டலூர் பூங்கா நிர்வாகம்

வண்டலூர் பூங்காவில் சிங்கம் ஒன்று தனது பிரசவத்தின்போது குட்டியை இறந்த நிலையில் பிரசவித்துள்ளது. இது தாய்சிங்கத்தைச் சோகத்தில் ஆழ்த்தியுள்ளது.

வண்டலூர் உயிரியல் பூங்கா

ஆசியாவின் மிகப்பெரிய உயிரியல் பூங்காவான வண்டலூர் பூங்காவில் சிங்கம், புலி, வெள்ளைப் புலி, சிறுத்தை உள்ளிட்ட அரிய வகை விலங்குகள் பராமரிக்கப்பட்டு வருகின்றன. அங்கேயே இனவிருத்தி செய்யும் விலங்குகளின் குட்டிகளும் பூங்காவில் பராமரிக்கப்பட்டு வருகின்றன. சிங்கக்குட்டிகளுக்கும் புலிக்குட்டிகளுக்கும் முன்னாள் முதல்வர் ஜெயலலிதா பெயர் வைத்து ரசிப்பார். எடப்பாடி பழனிசாமியும் தற்போது அதைத் தொடர்கிறார்.

வண்டலூர் உயிரியல் பூங்காவில் 15 சிங்கங்கள் உள்ளன. இவற்றில் மாலா என்ற 6 வயது பெண்சிங்கம் சிவா என்ற 9 வயது ஆண் சிங்கத்துடன் இணைந்து கருஉற்றது. இந்த நிலையில் நேற்று தனது முதல் குட்டியை மாலா ஈன்றது. பிரசவத்தின்போது அந்த சிங்கக்குட்டி இறந்தே பிறந்தது. இது குறித்து வண்டலூர் உயிரியல் பூங்கா சார்பில் பேசிய அதிகாரி ஒருவர், “பொதுவாக சிங்கங்கள் இரண்டு மூன்று குட்டிகள் பெற்றெடுக்கும். முதல் பிரசவத்தின்போது இந்தச் சிங்கம் ஒரே குட்டியை ஈன்றது. பிரசவத்தில் தலைதான் முதலில் வர வேண்டும். ஆனால், தலைகீழாகப் பிரசவம் நடந்தது. இதனால் தலை மாட்டிக்கொண்டு மூச்சு முட்டி வெளியே வர முடியாமல் இறந்துபோனது. சிங்கத்துக்குப் பாதிப்பு ஏற்படும் என்பதால் அப்போது மயக்க மருந்து கொடுக்கவில்லை. உடற்கூறு ஆய்வு செய்து, இறந்த குட்டியை எரித்துவிட்டோம்” என்கிறார்.

Do you like the story?

Please Appreciate the Author by clapping!