இந்தி தெரியாவிட்டால் சுட்டுவிடுவார்களா? மீனவர்கள் மீதான தாக்குதலுக்கு ஜவாஹிருல்லா கண்டனம் | Jawahirullah Condemns Attack On tamilnadu Fishermen

வெளியிடப்பட்ட நேரம்: 17:00 (14/11/2017)

கடைசி தொடர்பு:17:00 (14/11/2017)

இந்தி தெரியாவிட்டால் சுட்டுவிடுவார்களா? மீனவர்கள் மீதான தாக்குதலுக்கு ஜவாஹிருல்லா கண்டனம்

தமிழக மீனவர்கள்மீது இந்தியக் கடலோரக் காவல்படை நடத்திய தாக்குதலுக்கு மனிதநேய மக்கள் கட்சித் தலைவர் ஜவாஹிருல்லா கண்டனம் தெரிவித்துள்ளார்.

ஜவாஹிருல்லா


ஜவாஹிருல்லா இன்று வெளியிட்ட அறிக்கையில், “இதுவரை இலங்கை போன்ற அயல்நாட்டுப் படையினரின் துப்பாக்கிச் சூட்டினாலும் தாக்குதல்களாலும் பாதிக்கப்பட்ட தமிழக மீனவர்கள்மீது தற்போது இந்தியக் கடலோரக் காவல்படையே துப்பாக்கிச் சூடு நடத்தியுள்ள சம்பவம் வன்மையாகக் கண்டிக்கத்தக்கது. இந்தியக் கடற்படையின் துப்பாக்கிச் சூட்டில் பிச்சை என்ற மீனவர் இடது முழங்கையில் குண்டு பாய்ந்து படுகாயமடைந்துள்ளார். ஜான்சன் என்ற மீனவரும் படுகாயமடைந்துள்ளார்.

தமிழில் பேசிய மீனவர்களை இந்தியில் பேசுமாறு கட்டாயப்படுத்தி, இந்தி மொழி தெரியாததாலும் தாக்கியுள்ளனர். இந்தியக் கடலோரக் காவல்படையினர். தமிழகத்தில் தமிழர் நலனைக் காக்க இயலாத ஒரு பலவீனமான ஆட்சி இருக்கின்றது என்ற துணிச்சலில் இந்தத் தாக்குதல் நடைபெற்றதோ என்று எண்ணத் தோன்றுகிறது. 

இந்தத் தாக்குதல் சம்பவத்தைக் கொலை முயற்சி வழக்காகப் பதிவு செய்வதற்கு உடனடியாகத் தமிழக அரசு உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும். அதேபோல் மீனவர்கள் தாக்கப்பட்ட சம்பவத்தில் தொடர்புடைய கடலோரக் காவல்படை அதிகாரிகள் மீது உரிய நடவடிக்கை எடுக்க மத்திய அரசை வலியுறுத்தவும் தாக்குதலில் காயமடைந்த மீனவர்களுக்கு உரிய சிகிச்சை அளித்து, அதற்கான நிவாரணத்தை மத்திய அரசிடமிருந்து பெற்றுத் தரவும் தமிழக அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என மனிதநேய மக்கள் கட்சி சார்பில் கேட்டுக்கொள்கிறேன்” என்று கூறியுள்ளார்.