சூடுபிடிக்கும் குஜராத் தேர்தல்; வேட்புமனுத் தாக்கல் தொடக்கம்!

குஜராத்: தேர்தல் ஆணையம்

குஜராத் மாநிலத்தில் இரண்டு கட்டங்களாகச் சட்டசபைத் தேர்தல் நடைபெறவுள்ள நிலையில், முதல்கட்டத் தேர்தலுக்கான அறிவிக்கையைத் தேர்தல் ஆணையம் வெளியிட்டுள்ளது. இதன்மூலம் முதல்கட்ட வாக்குப்பதிவு நடைபெறவிருக்கும் 89 தொகுதிகளில் வேட்புமனுத்தாக்கல் தொடங்கியுள்ளது. மொத்தம் 182 தொகுதிகளைக் கொண்ட குஜராத் சட்டசபைக்கு டிசம்பர் 9 மற்றும் 14-ம் தேதிகளில் இரு கட்டங்களாகத் தேர்தல் நடைபெறும் என்று ஏற்கெனவே அறிவிக்கப்பட்டுள்ளது.

முதல்கட்டமாக 89 தொகுதிகளுக்கும் இரண்டாம் கட்டமாக 93 தொகுதிகளுக்கும் வாக்குப்பதிவு நடைபெறுகிறது. இமாச்சலப் பிரதேச மாநிலத்தில் சட்டசபைத் தேர்தல் ஏற்கெனவே முடிவடைந்துள்ளது. ஒரே கட்டமாக நடைபெற்ற அம்மாநிலத் தேர்தலில் 74 சதவிகித வாக்குகள் பதிவாகின. இந்த நிலையில், குஜராத் மாநில சட்டசபைக்கு நடைபெறும் தேர்தலில் பதிவாகும் வாக்குகளும் டிசம்பர் 18-ம் தேதி எண்ணப்பட்டு முடிவுகள் அறிவிக்கப்படும்.

இந்நிலையில், குஜராத் மாநிலத்தில் முதல்கட்டமாகத் தேர்தல் நடைபெறவுள்ள தொகுதிகளில் முறைப்படியான அறிவிக்கையைத் தேர்தல் ஆணையம் வெளியிட்டுள்ளது. அதன்படி இந்த 89 தொகுதிகளிலும் வரும் 21-ம் தேதிவரை வேட்பு மனுத்தாக்கல் செய்யலாம். நவம்பர் 22-ம் தேதி வேட்பு மனுக்கள் பரிசீலனை நடைபெறும். மனுக்களை 24-ம் தேதிக்குள் திரும்பப் பெற்றுக்கொள்ளலாம். டிசம்பர் 9-ம் தேதி வாக்குப்பதிவு நடைபெறும். 14-ம் தேதி இரண்டாம் கட்ட வாக்குப்பதிவும் நிறைவடைந்த பின், டிசம்பர் 18-ம் தேதி வாக்கு எண்ணிக்கை நடைபெறும். முதல்கட்டத் தேர்தலுக்கான மனுத்தாக்கல் தொடங்கியுள்ள நிலையில், குஜராத்தில் அரசியல் கட்சிகளின் பிரசாரம் தீவிரமடைந்துள்ளது.

Do you like the story?

Please Appreciate the Author by clapping!