Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

By clicking Allow you accept ours Privacy Policy and Terms

லட்சுமி.. 'சிக்கல்' எங்கே... 'தவறு' யாரிடம்? #VikatanExclusive

லட்சுமி - கடந்த வாரம் முழுக்க இணைய உலகை விவாத மேடையாக்கிய குறும்படம். அப்படி என்ன இருக்கிறது அந்தப் படத்தில்? சலிப்பான திருமண வாழ்க்கையைக் கொண்ட பெண்ணுக்கு ஒரு கலைஞனின் அறிமுகம் கிடைக்கிறது. அது ஒரே ஒருநாள் ஆயுள் கொண்ட உடல் சார்ந்த உறவாக பரிணாமிக்கிறது. மறுநாள் அவள் தன் பாதையை மாற்றிக்கொள்வதோடு முடிகிறது இந்தப் படம். தன்னைத் தூக்கி வளர்த்த பெண்ணின் மேல் காதல் கொள்ளும் சிறுவன், தன் தாயிற்கு திருமணம் தாண்டிய உறவு இருப்பதை அறிந்து, அவளை புரிந்துகொள்ள முயற்சிக்கும் இளைஞன் என ஏராளமான கதைகளை இதற்கு முன்னால் தமிழ் சமூகம் பார்த்திருக்கிறதுதான். ஆனாலும் இந்தப் படத்திற்கு ஏன் இவ்வளவு எதிர்ப்புகள்?  

லட்சுமி

லட்சுமி - ஸ்டீரியோடைப்புகளின் குவியல்!

அவ்வளவாக பேசப்படாத, பெண்ணின் திருமணம் தாண்டிய உறவை பேச இயக்குநர் முற்பட்டிருக்கிறார். ஆனால் அதையும் வழக்கமான க்ளிஷேக்களுள் அடைத்ததுதான் மிகப்பெரிய உறுத்தல். இந்த ஸ்டீரியோடைப் 'லட்சுமி' என்ற பெயரில் இருந்தே தொடங்குகிறது. அந்தப் பெயரை சொன்னவுடனே சேலை கட்டிய, நடுவகிடெடுத்து பொட்டு வைத்த, குனிந்த தலை நிமிராத பெண் உருவத்தை எத்தனை பேரால் உருவகப்படுத்த முடிகிறது? பெரும்பான்மையானவர்களால் இது முடியும். நம் பொதுபுத்தியில் பிரசவிக்கும் இந்தத் தோற்றத்திற்கு முட்டுக் கொடுக்க, 'பொண்ணுனா காலண்டர்ல இருக்கிற லட்சுமி, சரஸ்வதி மாதிரி பாந்தமா இருக்கணும்' போன்ற சொல்லாடல்களையும் உருவாக்கி வைத்திருக்கிறோம்.

அடுத்த ஸ்டீரியோடைப் கலைஞனோடு காதலில் விழுவது! இயக்குநரை சொல்லித் தவறில்லை. ஒரு சிற்பக் கலைஞனோடு, ஒரு கவிஞனோடு, ஒரு ஓவியனோடு, ஒரு எழுத்தாளனோடு, ஒரு நாடோடியோடு காதலில் விழுதலே சுவாரசியம் என எழுதப்பட்ட புகழ்பெற்ற கதைகள் ஏராளம் இருக்கின்றன. 'அவர்கள் ஒருநாளும் சலிப்பான வாழ்க்கையை வாழமாட்டார்கள். சின்னச் சின்ன விஷயங்களிலும் சுவாரஸ்யங்களை புகுத்தி வாழ்க்கையைக் கொண்டாடும் ராஜகுமாரர்கள் அவர்கள்' என்பதுதான் இந்தக் கதைகள் சொல்லும் நீதி. ஆனால், நிஜத்தில் காதலைப் பற்றி மாய்ந்து மாய்ந்து எழுதும் கவிஞனுக்கு தன் ஜோடியோடு காதல் புரிய நேரமே இருக்காது. அவர்களின் கற்பனை முழுக்க முழுக்க தங்கள் படைப்புகளோடு நின்றுவிடுபவைதான். 'அவரோட உலகமே வேற. குடும்பத்தைப் பத்தி அவருக்கு நினைப்பே இருந்ததில்ல. எனக்கு பிரிஞ்சுடலாம்னு கூட தோணியிருக்கு' - அறிவுஜீவிகள் சமூகம் கொண்டாடும் ஒரு பிரபல எழுத்தாளரின் மனைவி உதித்த இந்த வார்த்தைகள்தான் ஒரு சோறு பதம்.

அடுத்தது அந்த பஸ் ஸ்டாப் உரையாடல். இன்டெலக்ச்சுவலிஸம் ஆல்ஃபா ஆணுக்கான தகுதியாக மாறிவிட்டதுதான். உரையாடல்கள் அடுத்த கட்டத்திற்கு நகர உதவும்தான். ஆனால், முன்பின் தெரியாத, ஓவியம் பற்றி கொஞ்சமும் அறிந்திடாத பெண்ணிடம் போய் 'ஏஞ்சலோ தெரியுமா? பிக்காஸோகிட்ட பேசிருக்கியா?' என்றெல்லாம் கேட்டால், 'நான் நடந்தாவது வீட்டுக்குப் போயிடுறேன் சாமி' என கிளம்பிவிடுவார். எந்த உரையாடலுக்கும் ஒரு பொதுவான கனெக்டிங் பாயின்ட் முக்கியம். இந்தப் படத்தில் நடக்கும் உரையாடலில் செயற்கைத்தனமே மிஞ்சுகிறது.

அடுத்தது, பாரதியார் பாடல்கள். 'வீழ்வேனென்று நினைத்தாயோ' டிஷர்ட்கள், சின்னப் பாரதி, குட்டிப் பாரதி பட்டங்கள் என ஏற்கெனவே பாரதியார் படாதபாடு பட்டுக்கொண்டிருக்கிறார். பாரதியை மேற்கோள் காட்டி எதைச் சொன்னாலும் அது மேக்கிங்க்கை மேட்ச் செய்துவிடும் என இயக்குநரும் நினைத்திருப்பார் போல. ஆனால், பொதுவுடமை ஆக்கப்பட்ட படைப்பென்பதால் அதை பயன்படுத்த அவருக்கு உரிமை இருக்கிறது. 

அது ஏன் மிடில் க்ளாஸ் பெண்? பார்வையாளர்கள் அந்த வகுப்பை சார்ந்தவர்கள் என்ற வணிகநோக்கம் காரணமாக இருக்கலாம். ஆனால் சகல விளைவுகளையும் மறந்து ஒரே நாளில் புது உறவிற்கு தயாராவாள் என்பதை ஏற்றுக்கொள்ள முடியவில்லை. அதற்கான சாத்தியங்கள் இல்லை என்பதில்லை. அதைப் பற்றி யோசிப்பதற்கான வாய்ப்புகளை சமூகம் வழங்குவதில்லை என்பதுதான் உண்மை. அதேசமயம் அவள் எடுக்கும் முடிவிற்குக் காரணம் கணவன் இன்னொரு பெண்ணோடு தொடர்புவைத்திருப்பதுதான் என்ற கருத்துத் திணிப்பும் துருத்தலாகவே உள்ளது. ஆனால், இதற்கே தரம் குறைந்த விமர்சனங்கள். கணவன் நல்லவனாக இருந்து லட்சுமி இந்த முடிவு எடுத்திருந்தால் கேட்கவே வேண்டாம்!

ஒரு முதல்பட இயக்குநரின் படத்தில் எந்த அளவிற்கான முதிர்ச்சி இருக்குமோ, அதுதான் இந்தப் படத்திலும் இருக்கிறது. இந்த சின்னச் சின்ன ஸ்டீரியோடைப்புகள்தான் 'மோக முள்' படத்தை, 'அம்மா வந்தாள்' நாவலை பேசாமல் ஏற்றுக்கொண்ட மனத்தை இதில் ஒன்றச் செய்யாமல் அலைக்கழிக்கின்றன போல. 

குவியும் விமர்சனங்கள்:

ஒரு படைப்பு விவாதப் பொருளாக மாறும்போதுதான் அடுத்த கட்டத்திற்கு நகர்கிறது. மேற்சொன்ன ஸ்டீரியோடைப்புகளை எல்லாம் வைத்து விமர்சனம் செய்யும்போது விவாதம் ஆக்கப்பூர்வமாக அடுத்த கட்டத்திற்குச் செல்ல வாய்ப்பிருக்கிறது. ஆனால் ஒருசிலரைத் தவிர மற்றவர்களின் விமர்சனங்களில் வன்மமே தெறிக்கிறது. காரணம்? முற்போக்கு முகமூடி மாட்டிக்கொள்வது அவ்வளவு சுலபமல்ல. வரம்பை மீறிய இந்தமாதிரியான பிரதிகள் வரும்போது அதை ஆதரிப்பதாக காட்டிக்கொள்ள வேண்டும். ஆனால் 'ஆம்பளை எப்படினாலும் இருக்கலாம், பொண்ணு இப்படித்தான் இருக்கணும்' என்ற பழகிப்போன பழமைவாத எண்ணமும் உள்ளே கிடந்து அழுத்தும். ஈயம் பூசுனமாதிரியும் இருக்கணும், பூசாத மாதிரியும் இருக்கணும் நிலை இது. ஆக, விமர்சனத்தை வேறு வழிகளில் வைக்கிறார்கள். அதற்கு பாரதியாரும், கதிரின் அமெச்சூரான பாத்திரப் படைப்பும் சாக்குகளாக உதவுகின்றன. 

இயக்குநர் பாரதியை அசிங்கப்படுத்திவிட்டார் என்றால், 'ஆன்ட்டியை கரெக்ட் பண்ணணுமா? பாரதி பாட்டு பாடு' என மீம் போடுவது மட்டும் எந்தவகையில் வரும்? லட்சுமியாக நடித்த பெண்ணின் பழைய விளம்பரங்கள், படங்களை பயன்படுத்தி கமென்ட் தட்டுவது ஜென்டில்மேன்களின் வேலையா என்ன? உண்மையில் படத்தில் வந்ததைவிட நிஜத்தில் வந்த மீம்களில்தான் பாரதியாரும் பெண்களும் சிறுமைப்படுத்தப்பட்டிருக்கிறார்கள். 

இங்கே இரண்டே நிலைப்பாடுகள்தான். ஒன்று, வேர்களை யோசிக்காமல் கொச்சைப்படுத்துவது, இல்லையென்றால் தெய்வீக லட்சணம் கொடுத்து புனிதப்படுத்துவது. செக்ஸ் பல ஆண்டுகளாக இப்படி இரண்டு நிலைப்பாடுகளுக்குள் சிக்கித் தவிக்கும் சப்ஜெக்ட். 'அப்படி என்ன அரிப்பு உனக்கு?' என கேவலமாக கொச்சைப்படுத்துவதும் தவறுதான். 'இதுதான் மொத்த கலாச்சாரத்துக்கான அடிப்படை' என புனிதப்படுத்துவதும் தவறுதான்.  அதுவும் பசி, தூக்கம் போன்ற கட்டாய உடல்தேவை. பல திருமணங்கள் உடைவது இப்படியான தீர்க்கப்படாத தேவைகளால்தான் என்பதும் உண்மைதானே. எனவே செக்ஸை தேவையாக பார்க்கும் மனநிலை அவசியமான ஒன்றாக இருக்கிறது. ஆனால் நிஜம் அப்படித்தான் இருக்கிறதா?

செக்ஸைப் பற்றி பெண்கள் நினைப்பதே இங்கு பாவத்திற்குரிய செயல். அதைப் பற்றி தங்கள் தோழிகள் குழுவிற்குள் பேசிச் சிரிக்கலாம். ஆனால், வீட்டில் பேசமுடியாது. திருமணமே செய்திருந்தாலும் கணவனிடம் பேச முடியாது. 'எங்கே நாம் முதலில் அழைப்பு விடுத்தால் கணவன் சந்தேகப்படுவானோ?' என்ற தயக்கம் பெரும்பான்மை பெண்களுக்குள் இருக்கிறது. அந்தத் தயக்கம் உண்மைதான். கணவனுக்கென்று இல்லை. காதலர்களுக்கும் 'பெண்கள் முதலில் அழைப்பு' விடுப்பதென்பது பிடிப்பதில்லை. விளைவு, சந்தேகமும், பட்டப்பெயர்களும் பெண்களைத் துரத்தி வரும். ஆக, செக்ஸை உடல்தேவையாக, கொச்சைபடுத்தலும் புனிதப்படுத்தலுமில்லாத சாதாரண நிகழ்வாக பார்க்க வேண்டியது அவசியம். அதற்கான விவாதங்களுக்கு, இப்படியான படைப்புகள்.. அவற்றிலிருக்கும் குறைகளைத் தாண்டி... வழி வகுக்கும் என்பதை மறுப்பதற்கில்லை. ஆனால், நிஜத்திலேயே இதைக் கடுமையாக எதிர்கொள்ளும் ஆணின் ஈகோ படத்தில் மட்டும் பேச விட்டுவிடுமா என்ன? ஆணுக்குத் தேவை எல்லாம் 'கல்லானாலும் கணவன் புல்லானாலும் புருஷன்' ரகமே. 'மயக்கம் என்ன' படத்தின் யாமினி இன்னமும் ஆண்களுக்கு ஆதர்சமாய் இருப்பதன் காரணம் இதுதான்.

படத்தின் மேல் வைக்கப்படும் இன்னொரு பெரிய குற்றச்சாட்டு, இன்னமும் எத்தனை நாட்களுக்கு பாலியல் சுதந்திரத்தையே பெண்ணியமாக பேசுவீர்கள் என்பது! இந்தக் குரலில் இருக்கும் சலிப்பை, வெறுமையை, கோபத்தை புரிந்துகொள்ளவேண்டியது அவசியம்தான். ஆனால், பல யுகங்களாக பெண்ணை உடல்சார்ந்தே யோசித்து வந்திருக்கும் ஆண், தன்வரையில் கொடுக்கும் முதல் சுதந்திரமாக இதைத்தான் பார்க்கிறான். 'சுதந்திரம் தருகிறேன்' என்பதே ஆணாதிக்கம்தான் என்பதை உணராத அவனுக்கு இந்தக் குமிழ் உடைய நேரமாகும்தான். அதே சமயம் பாலியல் சுதந்திரம் பற்றி பேசாமலும் இருக்க முடியாதே! 'பெண்களுக்கு செக்ஸ் தேவையே இல்லை. அவர்கள் சாதிக்கப் பிறந்தவர்கள். அவர்களுக்கு உயர்ந்த லட்சியங்கள் இருக்கின்றன' என முன்பு சொன்ன புனிதப்படுத்துதலுக்கு இந்த வாதங்கள் வலு சேர்த்துவிடும் ஆபத்தும் இருக்கிறது. புனிதப்படுத்தப்பட்டால்... 'ஒரு பெண் இப்படியெல்லாம் செய்யலாமா?' எனத் திரும்பவும் முதல் கோட்டிலிருந்து தொடங்குவார்கள். எந்த பிம்பங்களுமில்லாத சக தோழராய் பெண்களை பார்ப்பதுதான் நியாயம். ஆக, சமூக விடுதலை, வேலை வாய்ப்புகள் ஆகியவற்றோடு பாலியல் சுதந்திரம் பற்றியும் பேச வேண்டியது அவசியம். அது தொடர்பான உரையாடல்களை உருவாக்கவாவது கதைகளும் படங்களும் வெளிவரவேண்டும். 

லட்சுமி பெண்களின் ஒட்டுமொத்த பிரதிநிதி என இயக்குநர் எங்கேயும் உருவகப்படுத்தவில்லை. அதேசமயம் இப்படியான கதைகளே நம்மைச் சுற்றி நடக்கவில்லை என உறுதியாக சொல்லமுடியுமா என்ன? பின் ஏன் இந்த பதற்றம்? திருமணம் தாண்டிய உறவுகள் நிஜத்தில் நிறையவே இருக்கின்றன. ஆனால், அதை எல்லாம் கண்டுகொள்ளாமல் கண்ணை மூடிக்கொண்டு 'எல்லாம் சரியாத்தான் இருக்கு!' என நமக்கு நாமே சமாதானப்படுத்திக்கொள்கிறோம். அது அப்படியில்லை என என்ற உண்மையை வேறொருவர் உடைக்கும்போது நேரும் பதற்றம் இது! இந்தக் கண்கட்டு விளையாட்டால் என்ன பயன்? நிதர்சனத்தை ஏற்றுக்கொண்டால் மட்டுமே இந்தப் பிரச்னைகளுக்குரிய வேர்களை கண்டறிந்து தீர்வுகள் காண முடியும். அதைக் கருத்தில் கொள்ளாமல் 'லட்சுமி' போன்ற கிளைகளை மட்டுமே வெட்டிக்கொண்டே இருப்பது நமக்கு நாமே செய்துகொள்ளும் துரோகம்.

இன்னமும் லட்சுமி மேல் கோபம் மிச்சம் இருக்கிறதா? சரி, எல்லாவற்றையும் விடுங்கள். கமல் நடித்தப் படங்களில் உங்களின் பேவரைட் எது? பாலு மகேந்திராவின் படங்களில்? அனேகம் பேர் 'சதிலீலாவதி' என்போம். அதன் கதை என்ன? மனைவி, குழந்தைகள் என சலிப்புதட்டும் வாழ்க்கைக்கு வடிகால் தேடும் ஒருவனுடைய கதை. அதைச் சிரிக்கச் சிரிக்க ஏற்றுக்கொண்ட நம்மால் இந்தப் படத்தை கொஞ்சம்கூட ஏற்றுக்கொள்ள முடியவில்லை என்றால் பிரச்னை லட்சுமி இல்லை.

 
 

உங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்

Advertisement
Advertisement
Advertisement
Advertisement

எடிட்டர் சாய்ஸ்

Advertisement
Advertisement

MUST READ

Advertisement