வெளியிடப்பட்ட நேரம்: 17:15 (14/11/2017)

கடைசி தொடர்பு:17:15 (14/11/2017)

மதுரை அரசு மருத்துவமனைக்கு ஜப்பான் 300 கோடி உதவி

மதுரை அரசு ராஜாஜி மருத்துவமனையை நவீனமாக மேம்படுத்த ஜப்பான் 300 கோடி ரூபாய் நிதி அளிக்கவுள்ளது என்ற தகவலால் தென் மாவட்ட மக்கள் மிகுந்த மகிழ்ச்சியில் உள்ளார்கள். அவசர சிகிச்சைக்கும் நவீன அறுவைசிகிச்சைக்கும் தென்மாவட்ட எளிய மக்கள் சென்னைக்குச் செல்ல வேண்டிய நிலை முன்பிருந்தது. இன்று மதுரை அரசு ராஜாஜி மருத்துவமனையிலையே நவீன சிகிச்சைகள் அனைத்தும் வழங்கப்படுகிறது. தமிழகத்திலேயே அதிக மக்கள் வந்து செல்லும் மருத்துவமனைகளில் இரண்டாவது இடத்தில் இது உள்ளது. சென்னைக்கு அடுத்து உறுப்பு மாற்று அறுவைசிகிச்சையும் செய்யுமளவுக்கு வசதிகள் செய்யப்பட்டுள்ளன. 

மதுரை அரசு மருத்துவமனை


இது போதாது என்று தினமும் வந்து செல்லும் ஆயிரக்கணக்கான மக்களுக்கும் உள் நோயாளிகளுக்கும் கூடுதல் வசதிகளை ஏற்படுத்தி கொடுக்கும் வகையில் 150 கோடி ரூபாய் செலவில் மருத்துவக் கல்லூரி வளாகத்தில் மல்டி ஸ்பெஷாலிட்டி மருத்துவமனை கட்டப்பட்டு வருகிறது. இந்த நிலையில் மத்திய சுகாதாரத்துறை ஜப்பான் அரசின் 300 கோடி ரூபாய் நிதி உதவியுடன் ராஜாஜி மருத்துவமனையில் உள்ள பழைய கட்டடங்களை அகற்றிவிட்டு புதிய கட்டடங்களைக் கட்ட முடிவு செய்துள்ளது.

இதற்கான கட்டுமானப்பணி அடுத்த ஆண்டு தொடங்கும் என்று சொல்லப்படுகிறது. 25 அதி நவீன அறுவைசிகிச்சை அரங்குகளும் இன்னும் பல சோதனைக் கூடங்கள், நோயாளிகளுக்கு படுக்கை வசதியுடன் அறைகள் எனக் கட்டப்பட உள்ளனர். மதுரைக்கு எய்ம்ஸ் வருவது இழுத்தடிக்கப்பட்டு வரும் நிலையில், தென் மாவட்டத்தைச் சேர்ந்த வசதியற்ற மக்களுக்கு  நம்பி வரும்  அரசு ராஜாஜி மருத்துவமனை நவீனப்படுத்தப்படுவதை அறிந்து மக்கள் மகிழ்ச்சியடைந்துள்ளனர்.

நீங்க எப்படி பீல் பண்றீங்க