வெளியிடப்பட்ட நேரம்: 18:15 (14/11/2017)

கடைசி தொடர்பு:18:15 (14/11/2017)

'கழிப்பறை கட்டினால்தான் 100 நாள் வேலை' - கிராம மக்களை அதிரவைத்த அதிகாரி


 

''கழிப்பறை கட்டினால்தான் 100 நாள் வேலை. இல்லையென்றால் வேலை கட்'' என யூனியன் பி.டி.ஓ உத்தரவிட்டிருப்பது கிராம மக்களை அதிர்ச்சிக்குள்ளாக்கியிருக்கிறது.

சிவகங்கை மாவட்டம் காளையார்கோவில் ஒன்றியத்துக்குட்பட்ட கிராமம் கீழ முடிக்கரை. இங்குள்ள கிராம மக்கள் விவசாயத்தை நம்பியே வாழ்கிறார்கள். கடந்த சில வருடங்களாக விவசாயம் பொய்த்துப்போனதால் வேறு வழியின்றி கூலி வேலைக்குப் போய்வரும் மக்கள் 100 நாள் வேலைக்குச் சென்று வந்தார்கள். கழிப்பறை அவர்கள் வேலைக்கு வேட்டு வைத்தது.

இது குறித்து கிராம மக்கள் கூறுகையில், ''தூய்மை இந்தியா திட்டத்தில் கிராமப்புறங்களில் கழிப்பறைக் கட்டுவதற்கு ஒவ்வொரு யூனியன் மூலமாகப் பன்னிரண்டாயிரம் வழங்கப்படுகிறது. அந்தப் பணத்துக்குத் தரமான கழிப்பறை கட்ட முடியாது. நாங்கள் கூடுதலாகக் குறைந்தது 20,000 ரூபாயாவது போட வேண்டியது இருக்கிறது.

வறட்சியான நேரத்தில் அவ்வளவு பணம் போட்டுக் கட்டுவது சிரமமாக உள்ளது. எங்கள் குடும்பத்தை வழிநடத்துவதே பெரும்பாடாக இருக்கிறது. எங்கள் ஊரில் 10 பேர் மட்டுமே கழிப்பறை கட்டியிருக்கிறார்கள். அரசாங்கம் கொடுக்கும் பணத்தை வைத்து தரமில்லாத கழிப்பறை கட்ட நாங்கள் தயாராக இல்லை. எங்களுக்கு இன்னும் ஆறுமாத அவகாசம் கொடுங்கள். அதற்குள் கழிப்பறை கட்டி முடித்துவிடுகிறோம். அதற்காக எங்களின் வாழ்வாதாரமாக இருக்ககூடிய 100 நாள் வேலையை இல்லையென்று சொல்லாமல் எங்களுக்கு வேலை கொடுங்கள் என்று மாவட்ட ஆட்சியரிடம் மனுகொடுத்திருக்கிறோம்'' என்றார்கள்.
 

நீங்க எப்படி பீல் பண்றீங்க