ஒரு நாள் மழைக்கே தாங்காத பள்ளிக் கட்டடம்! - இரவில் இடிந்ததால் அசம்பாவிதம் தவிர்ப்பு

ராமேஸ்வரத்தில் பெய்த ஒரு நாள் மழைக்கே தாங்காமல் அரசுப் பள்ளிக் கட்டடத்தின் முகப்பு இடிந்து விழுந்ததால் மாணவர்களும் பெற்றோர்களும் அதிர்ச்சியடைந்துள்ளனர்.

வடகிழக்குப் பருவமழை துவங்கி 10 நாள்களுக்கு மேலாகிவிட்ட நிலையில், ராமேஸ்வரம் பகுதியில் அவ்வப்போது குறைந்த அளவிலேயே மழை பெய்து வந்தது. இந்நிலையில், நேற்று இரவில்தான் முழுமையாக நல்ல மழை பெய்தது. நேற்று இரவு மட்டும் 60.4 மி.மீ அளவுக்கு மழை கொட்டியது. இதனால் சாலைகளில் மழை நீர் பெருக்கு எடுத்து ஓடியதுடன் தாழ்வான பகுதிகளிலும் பழைய கட்டடங்களின் மேல் பகுதியிலும் தண்ணீர் குளம்போல் தேங்கியது. இந்நிலையில் ராமேஸ்வரம் அருகே உள்ள சம்பை கிராமத்தில் உள்ள பள்ளிக் கட்டடம் ஒன்றின் முகப்புப் பகுதி நேற்று இரவு பெய்த மழையால் சேதமடைந்து இடிந்து விழுந்தது.

ராமேஸ்வரத்தில் நேற்று பெய்த மழையில் இடிந்த பள்ளி கட்டிடம்.

இந்தக் கிராமத்தில் உள்ள மண்டபம் ஊராட்சி ஒன்றிய துவக்கப்பள்ளியில், 60-க்கும் மேற்பட குழந்தைகள் படித்து வருகின்றனர். பள்ளி கட்டடம் கட்டப்பட்டு பல ஆண்டுகளாகிவிட்ட நிலையில், அதன் மேல்பகுதி சேதமடைந்து இருந்துள்ளது. ஏற்கெனவே சேதமடைந்திருந்த கட்டடத்தின் முகப்புப் பகுதி சன்ஷேடு திடீரென இடிந்து விழுந்தது. இரவு நேரத்தில் இடிந்துவிழுந்ததால் பள்ளிக் குழந்தைகளுக்கோ அங்கு பணியாற்றும் ஆசிரியர்களுக்கோ எவ்வித பாதிப்பும் ஏற்படவில்லை. ஒரு நாள் பெய்த மழைக்கே தாங்காத இந்தப் பள்ளிக் கட்டடத்தில் பயில இனி எஞ்சியுள்ள மழைக்காலத்தில் எப்படி பிள்ளைகளை அனுப்புவது என்ற அச்சம் பெற்றோரிடையே எழுந்துள்ளது. எனவே சேதமடைந்த பள்ளிக் கட்டடத்தை உடனடியாக சீரமைத்து பள்ளிக் குழந்தைகளைப் பாதுகாக்க வேண்டும் என சம்பை கிராம மக்கள் அரசுக்கு கோரிக்கை விடுத்துள்ளனர்.

Do you like the story?

Please Appreciate the Author by clapping!