டாஸ்மாக் வழக்கில் தமிழக அரசுக்கு சென்னை உயர் நீதிமன்றம் குட்டு!

தமிழகத்தில் 1,700 மதுக்கடைகள் மீண்டும் திறக்கப்பட்டதை எதிர்த்து சென்னை உயர்நீதிமன்றத்தில் தொடரப்பட்ட வழக்கு விசாரணையின் போது, உயர்நீதிமன்ற தலைமை நீதிபதி இந்திரா பானர்ஜி தமிழக அரசுக்கு கண்டனம் தெரிவித்தார்.

சென்னை உயர் நீதிமன்றம்


உச்சநீதிமன்ற உத்தரவுக்குப் பிறகு தமிழகத்தில் மூடப்பட்ட 3,321 டாஸ்மாக் மதுக்கடைகளில் 1,700 கடைகளை மீண்டும் திறக்க முடிவு செய்யப்பட்டது. அதற்காக மாநகராட்சி, நகராட்சி, பேரூராட்சி பகுதிகள் வழியாகச் செல்லும் தேசிய மற்றும் மாநில நெடுஞ்சாலைகளை உள்ளாட்சி சாலைகளை மாற்றும் வகையில் தமிழக அரசு சுற்றறிக்கை ஒன்றை வெளியிட்டது. இதை எதிர்த்து கே.பாலு என்ற வழக்கறிஞர் சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார். இதையடுத்து அரசின் சுற்றறிக்கைக்கு சென்னை உயர் நீதிமன்றம் தடை விதித்தது. இடைப்பட்ட காலத்தில் திறக்கப்பட்ட மதுக்கடைகள் மூடப்பட்டன.

இதற்கிடையே, சண்டிகாரில் தேசிய நெடுஞ்சாலைகளை உள்ளாட்சி சாலைகளாக மாற்றி மதுக்கடைகளை திறக்க உச்ச நீதிமன்றம் அனுமதி வழங்கியது. அதேபோல் தமிழகத்திற்கும் அனுமதி தரவேண்டும் என்று உச்ச நீதிமன்றத்தில் தமிழக அரசு மனு மூலம் முறையிட்டது. இந்த வழக்கு விசாரணை நேற்று உச்சநீதிமன்றத்தில் நடைபெற்றது. அப்போது தமிழக அரசின் சார்பில் ஆஜராகி வாதாடிய வழக்கறிஞர் முகுல் ரோகத்கி, “சண்டிகாருக்கு வழங்கிய உத்தரவை உச்ச நீதிமன்றம் தெளிவுப்படுத்த வேண்டும். அது பற்றி சென்னை உயர் நீதிமன்றம் விளக்கம் கேட்கிறது. உச்ச நீதிமன்றம் அளிக்கும் உத்தரவை தமிழக அரசு வரும் 16ம் தேதி சென்னை உயர் நீதிமன்றத்தில் இதுசம்பந்தமாக நடைபெற்று வரும் வழக்கு விசாரணையின்போது தாக்கல் செய்யும் ” என்றார்.

இந்நிலையில், கே.பாலு தாக்கல் செய்த வழக்கின் மீதான விசாரணை சென்னை உயர் நீதிமன்றத்தில் நடைபெற்றது. அப்போது, சென்னை உயர் நீதிமன்றம் விளக்கம் கேட்டதாக உச்ச நீதிமன்றத்தில் தமிழக அரசு குறிப்பிட்டது தவறானது என்று தலைமை நீதிபதி இந்திரா பானர்ஜி கண்டனம் தெரிவித்தார். விளக்கம் கேட்க உச்ச நீதிமன்றத்திற்கு சென்று விட்டு அங்கே உயர் நீதிமன்றம் சொல்லாத ஒன்றை தெரிவிப்பது தவறானது ஆகும் என்றும் அவர் குறிப்பிட்டார்.

Do you like the story?

Please Appreciate the Author by clapping!