'வீட்டை காலி செய்யுங்கள்'- நோட்டீஸ் அனுப்பிய விஏஓ-க்கு எதிராக கொந்தளித்த மக்கள்

ஈரோடு மாவட்டம் நசியனூர் அருகே ஊனத்திப்புதூரில் உள்ள 29 வீடுகளை காலி செய்யச்சொல்லி கிராம நிர்வாகி அதிகாரி நோட்டீஸ் அளித்துள்ளார். அதையடுத்து 29 குடும்பத்தினரும் குடும்பதோடு ஈரோடு தாசில்தார் அலுவலகத்தில் உள்ளிருப்புப் போராட்டத்தில் ஈடுபட்டார்கள்.

உள்ளிருப்புப் போராட்டத்தில் ஈடுபட்டிருந்த லலிதா, '' நான் அனைத்திந்திய ஜனநாயக மாதர் சங்கத்தின் மாவட்டத் தலைவியாக இருக்கிறேன். நாங்கள் ஈரோடு மாவட்டம் நசியனூர் அருகே உள்ள கூரப்பாளையம் கிராமம், ஊனாத்திபுதூரில் பகுதியில் குடியிருக்கிறோம். எங்க ஊரில் மொத்தம் 29 வீடுகள் இருக்கின்றன. தற்போது அந்த 29 வீடுகளும் நீர்நிலை புறம்போக்கில் இருப்பதாகச் சொல்லி வீடுகளை காலி செய்ய வேண்டும் என கிராம நிர்வாக அதிகாரி நோட்டீஸ் கொடுத்துவிட்டுச் சென்றிருக்கிறார்.

நாங்கள் இந்தப் பகுதியில் கால காலமாக வாழ்ந்துகொண்டிருக்கிறோம். எங்களுடைய 29 வீடுகளும்  மேட்டுப் பகுதியில் உள்ள பாறைமீது கட்டப்பட்டுள்ளன. எங்க வீட்டிற்கும் 100 மீட்டருக்குத் தூரத்தில் ஓடை இருக்கிறது. அந்த ஓடையால் எங்களுக்கு எந்தக் காலத்திலும் பாதிப்பு ஏற்பட்டதில்லை. இப்படி இருக்கும் பட்சத்தில் எப்படி நீர்நிலை புறம்போக்கு என்று பதிவு செய்திருக்கிறார்கள் எனத் தெரியவில்லை. எங்களுக்கு 1975ல் கொடுத்த நத்தம் புறம்போக்குப் பட்டா இருக்கிறது. எங்க வீடுகளுக்கு வீட்டு வரி, மின்சார இணைப்பு, குடிநீர் இணைப்பு என அனைத்தும் பெற்றிருக்கிறோம். நாங்கள் அனைவரும் ஏழை தலித் சமுதாயத்தைச் சேர்ந்தவர்கள். தினக்கூலி செய்து சாப்பிடக் கூடியவர்கள். குழந்தைகள் பள்ளிக்கூடம் படித்துக்கொண்டிருக்கிறார்கள்.

எங்களை திடீரென காலி செய்யச் சொன்னால் எங்களால் எங்கு செல்ல முடியும். தலித் சமுதாயத்தைச் சேர்ந்த எங்களுக்கு யாரும் வீடு தர மாட்டார்கள். உண்மையில் நாங்கள் குடியிருக்கும் பகுதி நீர்நிலை பகுதி அல்ல. மாவட்ட கலெக்டர் எங்க பகுதியை ஆய்வு செய்ய வேண்டும். அதன் பிறகும் எங்களை காலி செய்யச் சொன்னால் சட்டப்படி முதலில் எங்களுக்கான இருப்பிடத்தை வேறு இடத்தில் உறுதி செய்த பிறகே வீடுகளை காலி செய்யச் சொல்ல வேண்டும். எங்களுக்கான எந்த ஒரு வசதியும் செய்து கொடுக்காமல் காலி செய்யச் சொன்னால் தொடர் போராட்டம் செய்வதோடு. எங்கள் உயிரைக் கொடுத்தாவது இதைத் தடுத்து நிறுத்துவோம்'' என்றார்.

Do you like the story?

Please Appreciate the Author by clapping!