வெளியிடப்பட்ட நேரம்: 09:46 (15/11/2017)

கடைசி தொடர்பு:14:21 (15/11/2017)

“இனி ரோட்டுல ஸ்டிக்கர் விக்கிற பசங்ககிட்ட பொருள் வாங்காதீங்க ப்ளீஸ்!” - ஏன்? #VikatanExclusive

ஸ்டிக்கர் விற்கும் பசங்களோடு ஷெரின்

“சென்னையில் கடற்கரையில் கால்கள் நனைக்கும்போதோ, பிரதானச் சாலையின் ஒரு சிக்னலில் நிற்கும்போதோ, ரயிலில் பயணிக்கும்போதோ சுண்டல், பாப்கார்ன், புக்ஸ், ஸ்டிக்கர்ஸ் என விற்கும் சின்னச் சின்னப் பசங்களைப் பார்த்திருப்பீங்க. படிக்கும் வயசில் குடும்பத்துக்காக கஷ்டப்படறாங்களேனு பாவப்பட்டு, எதையாவது வாங்கியிருக்கலாம். ப்ளீஸ்... இனிமேல் தயவுசெஞ்சு பரிதாபப்பட்டு எந்தப் பொருளையும் வாங்கிடாதீங்க” எனக் கோரிக்கையுடன் பேசுகிறார், சைல்டு செக்ஸுவல் அப்யூஸ் லீகல் அட்வைசர், ஷெரின். 

கடந்த ஆறு வருடங்களாக குழந்தைத் தொழிலாளர் முறைக்கு எதிராகவும், பாலியல் வன்புணர்வுக்கு ஆளான பெண் குழந்தைகளுக்காகவும் குரல் கொடுத்துவருபவர். சமீபத்தில், போரூரில் தஷ்வந்த் என்ற இளைஞரால் ஆறு வயதுக் குழந்தை ஹாசினி வன்புணர்வு செய்து எரிக்கப்பட்டதுக்கு எதிராக தன் குரலை உயர்த்தியவர். 

குழந்தைத் தொழிலாளர்

“பல குழந்தைகள் தன் உறவினராலேயோ, பக்கத்தில் உள்ளவர்களாலோ பாலியல் வன்முறைக்கு ஆளாகிட்டிருக்காங்க. தன் குழந்தை வாய் திறந்து சொன்னால்தான் அந்த விஷயமே பல அம்மாக்களுக்குத் தெரியவருது. அப்புறமாதான் பதறித் துடிக்கறாங்க. பயப்படறதாலேயோ, விஷயத்தை மூடிமறைக்கிறதாலேயோ, தப்புப் பண்ணினவனுக்குத் திரும்ப ஒரு வாய்ப்பை ஏற்படுத்திக்கொடுக்கிறோம். அதனால், நம்ம வீட்டுக் குழந்தைகளுக்கு ஒரு பிரச்னை வந்தால் அதைப் பொதுவெளிக்குக் கொண்டுவாங்க.

சென்னைக் கடற்கரையில் சுண்டல் விற்கும் ஒரு சிறுவனிடமோ, புத்தகம் விற்கும் ஒரு சிறுமியிடமோ அஞ்சு நிமிஷம் பேசிப் பாருங்க. எவ்வளவு வலிகளோடு இருக்காங்கன்னு தெரியும். புத்தகம் வாங்கும் சாக்கில் சிலர் கையைப் புடிச்சு இழுப்பாங்க. மடியில் உட்காரச் சொல்வாங்க. இதெல்லாம் எதுக்குன்னே தெரியாமல் சின்ன வயசிலேயே குடும்பச் சுமையைத் தலையில் ஏத்திட்டு வீட்டைவிட்டு வெளியே வராமலே முடங்கிடும் குழந்தைகள் அதிகம். நான் 2012-ம் வருஷம் மெடிக்கல் சோஷியாலஜி படிக்கறதுக்காக, லயோலா காலேஜில் சேர்ந்தேன். படிக்கும்போதே மெரினாவில் வியாபாரம் பண்ணும் பசங்களுக்குச் சாயந்திர நேரத்தில் விழிப்புஉணர்வு கிளாஸ் எடுப்பேன். அங்கே உள்ள பசங்க அவங்களுக்கு நடந்த கொடுமைகளைச் சொல்லும்போது இதயமே வெடிக்கிற மாதிரி இருக்கும். ஒரு பையனின் அப்பா குடிச்சு குடிச்சே இறந்துட்டாரு. அவன் அம்மா பாலியல் தொழிலுக்குப் போயிட்டாங்க. அதனால், பையன் பீச்ல பாப்கார்ன் விற்று அக்காவைப் படிக்கவெச்சிருக்கான். 

சுண்டல் விற்கும் சிறுவன்

இதுமாதிரி ஒவ்வொரு பசங்களுக்குப் பின்னாடியும் ஒரு கதை இருக்கு. வாரத்தில் அஞ்சு நாள் ஸ்கூலுக்குப் போயிட்டு மத்த ரெண்டு நாளில் வியாபாரம் பண்ற பசங்களும் இருக்காங்க. தினமும் ஸ்கூல்விட்டு வந்ததும் சுண்டல் குண்டானைத் தூக்கும் பசங்களும் இருக்காங்க. பெரும்பாலான பசங்களுக்கு வில்லிவாக்கத்துக்குப் பக்கத்துலதான் வீடு. நான் ஒருமுறை அவங்க பெத்தவங்களைச் சந்திச்சு பசங்களை ஸ்கூலுக்கு அனுப்புங்கனு சொன்னேன். ஒரு வீட்டு வாசல்ல மீன் கழுவிட்டிருந்த அம்மா, கோபத்தோடு அந்தத் தண்ணியை என் மூஞ்சில வீசினாங்க. இன்னொருத்தர் என் காதுல ஓர் அறை விட்டாங்க. அதிலிருந்து எனக்கு ஒரு பக்க காது சரியா கேட்கறதில்லே” என்று காதைத் தடவியபடியே அமைதியாகிறார் ஷெரின்.

பீச்சில் சிறுவர்கள்

''மறுபடியும் அந்தப் பகுதிக்குப் போனீங்களா?'' என்று கேட்டதும், “ஆமா, நிறைய முறை போனேன். திரும்பவும் அடிச்சாங்க, படியிலிருந்து தள்ளிவிட்டாங்க. நான் ஸ்டூடண்ட்டா அங்கே போய் அவேர்னஸ் கொடுக்கறதைப் பார்த்துட்டு என் புரொபசர் நட்சத்திரா என்கிற பெயரில் என்.ஜி.ஓ ஆரம்பிச்சார். திரும்பத் திரும்ப போய் அவங்களுக்கு அவேர்னஸ் கொடுத்தோம். அந்தப் பகுதியில் ஸ்கூலுக்குப் போயிட்டிருந்த 14 வயசுப் பொண்ணை, அதே பகுதியில் இருந்த ஒருத்தன் பாலியல் வன்முறை செய்ததில், ஐந்து மாசம் கர்ப்பமா இருந்தாள். அந்தப் பொண்ணை மீட்டு வழக்கு போட்டோம். ரெண்டு வருஷமா அந்த கேஸ் போயிட்டிருக்கு. இப்பவும் அந்தப் பொண்ணு ஸ்கூல் போய்ட்டிருக்கா. கேஸ் போட்ட மூணே மாசத்தில் தப்பு பண்ணினவன் பெயில்ல வந்துட்டான். ஸ்கூல் போகும்போதும் வரும்போதும் அவனைப் பார்த்து, மரண பயத்தில் நடுங்கறா அந்தப் பொண்ணு. அடிக்கடி காய்ச்சல் வந்துடும். இதுதான் தலையெழுத்து. இங்கே எந்த வழக்கையும் சீக்கிரத்தில் முடிக்கமாட்டாங்க. தப்பு பண்ணினவன் தைரியமா சுத்திட்டிருப்பான். அந்தப் பெண்ணின் பெத்தவங்களுக்கு நம்பிக்கையைக் கொடுத்திருக்கோம். நாங்களே கேஸை நடத்தறோம்னு சொல்லியிருக்கோம். அதிலிருந்து அந்த மக்கள் என்னை அவங்களில் ஒருத்தரா ஏத்துக்கிட்டாங்க. இப்போ அவங்கமூலம் நிறையக் குழந்தைகளை மீட்டுட்டு இருக்கோம்'' என்கிற ஹெரின் பல்வேறு மிரட்டல்களைச் சந்தித்துவருகிறார்.

ஓவியம் வரையும் சிறுவர்கள்

“தப்பு பண்ணினவன் 'உங்களுக்கு எவ்வளவு பணம் வேணுமோ வாங்கிக்கோங்க. கேஸ் எதுவும் இல்லாம அமைதியா போயிடுங்கன்னு பெத்தவங்களை மிரட்டும் சம்பவங்களும் நடக்கும். தப்புப் பண்ணினவன் வெளியில் சுத்தறதை இந்த சொசைட்டி கண்டுக்காது. ஆனா, பாதிக்கப்பட்ட பெண்ணைக் கேவலமாப் பார்க்கும். 'ஸ்கூலுக்குப் போனோமா வந்தோமான்னு இருக்கணும். எட்டு மணிக்கு மேல வெளியே போகக்கூடாது'னு திட்டும். இந்த நிலை மாறணும். அடுத்தது, பேரன்ட்ஸ் குழந்தைகளோடு நிறைய டைம் ஸ்பெண்ட் பண்ணணும். குற்றம் பண்றவனைப் பார்த்துப் பயப்படாமல், அவனுக்கான தண்டனையை வாங்கிக் கொடுத்துட்டாலே போதும்னு நினைக்கறேன். ஹாசினியை மறந்த மாதிரி பாதிக்கப்பட்ட மற்ற குழந்தைகளையும் மறந்துடக் கூடாது. இனி ஒரு குழந்தையும் வன்முறைக்குப் பலியாகக் கூடாதுனு உறுதி எடுப்போம். அவங்களுக்கு நல்ல சமூகத்தைப் பரிசாக அளிப்போம்'' என்கிறார் ஷெரின்.


டிரெண்டிங் @ விகடன்