அமைச்சரைத் தவிர்த்துவிட்டு அதிகாரிகளிடம் ரிவ்யூ: அதிரடி காட்டிய ஆளுநர்!

தமிழக ஆளுநர் பன்வாரிலால் புரோஹித், கோவை மாவட்டத்தில் உள்ள முக்கிய அதிகாரிகளுடன் இன்று நேரடியாக ஆலோசனை மேற்கொண்டார். உள்ளூர் அமைச்சர் வேலுமணி உள்ளிட்ட அமைச்சர்களைத் தவித்துவிட்டு, ஆளுநர் நேரடியாக அதிகாரிகளுடன் ஆலோசனை நடத்தியது அரசியல் வட்டாரத்தில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.


இரண்டு நாள் பயணமாக தமிழக ஆளுநர் பன்வாரிலால் புரோஹித், இன்று காலை கோவை வந்தார். பாரதியார் பல்கலைக்கழக பட்டமளிப்பு விழாவில் கலந்து கொண்ட அவர், இன்று பிற்பகல் ரேஸ்கோர்ஸ் சாலையில் உள்ள சுற்றுலா மாளிகையில் கோவை மாவட்ட அதிகாரிகளுடன் ஆலோசனை மேற்கொண்டார். மாவட்ட ஆட்சியர் ஹரிஹரன், மாநகரக் காவல் ஆணையர் அமல்ராஜ் , மாநகராட்சி ஆணையர் விஜயகார்த்திகேயன் உள்ளிட்ட 12 முக்கிய அதிகாரிகள் முக்கியக் கோப்புகளுடன் கலந்து கொண்டனர்.  கோவையில் நடைபெற்ற திட்டங்கள், செயல்படுத்தப்படும் திட்டங்கள், நடைபெற உள்ள திட்டங்கள் என அனைத்துத் திட்டங்கள் குறித்தும் அதிகாரிகளிடம் ஆளுநர் கேட்டறிந்தார். முக்கியக் கோப்புகளுடன் கலந்துகொண்ட அதிகாரிகள் ஆளுநரின் கேள்விகளுக்கு விளக்கமளித்தனர்.

சர்க்யுட் ஹவுஸ்
 

வழக்கமாக இதுபோன்ற கூட்டங்களுக்கு உள்ளூர் அமைச்சர்கள் அழைக்கப்படும் நிலையில், தமிழக ஆளுநர் அதிகாரிகளுடன் நடத்திய கூட்டத்திற்கு ஊரக வளர்ச்சித்துறை அமைச்சர் வேலுமணிக்கு அழைப்பு விடுக்கவில்லை. இதேபோன்று உயர் கல்வித்துறை அமைச்சர் அன்பழகன், கோவையில் இருந்தாலும், அவரும் இந்தக் கூட்டத்துக்கு அழைக்கப்படவில்லை. தமிழக ஆளுநர்கள் இதுவரை, இதுபோன்ற கூட்டங்களை நடத்தாத நிலையில், இதை எப்படி எதிர்கொள்வது என்று புரியவில்லை என அதிகாரிகள் மட்டத்தில் பேசப்படுகிறது.

"தமிழக ஆளுநரின் இதுபோன்ற நடவடிக்கை மாநில உரிமைகளைப் பறிக்கும் செயலாக இருக்கிது" என அரசியல் கட்சியினரிடையே பேச்சு எழுந்துள்ளது. இதுகுறித்து ஆளுநர் வட்டாரத்தில் விசாரித்தபோது, ’அதிகாரிகள், அரசியல் கட்சிகள் என இரு தரப்பினரிடனும் தனித்தனியாக ஆலோசனை நடத்த திட்டமிடப்பட்டது. அதன்படிதான், அதிகாரிகளுடனான கூட்டத்தில், அமைச்சர் உள்ளிட்ட யாருக்கும் அழைப்பு விடுக்கப்படவில்லை’ என்றனர்.

வேலுமணி

அதிகாரிகளுடனான கூட்டத்திற்குப் பிறகு அமைச்சர் வேலுமணி, பா.ஜ.க மாநிலப் பொதுச்செயலாளர் வானதி சீனிவாசன், முன்னாள் அமைச்சர் எஸ்.ஆர் பாலசுப்பிரமணியம் உள்ளிட்ட அரசியல் கட்சித் தலைவர்களுடன் ஆலோசனையில் ஈடுபட உள்ளார். அதேபோல, சிறுதுளி உள்ளிட்ட அமைப்புகளுடனும் ஆளுநர் ஆலோசனையில் ஈடுபட உள்ளார். தமிழக அரசியல் வரலாற்றில் இதுவரை இல்லாத வகையில் மாவட்ட அளவிலான அதிகாரிகளுடன் தமிழக ஆளுநர் நேரடியாக ஆலோசனை நடத்தி இருப்பதும் அரசியல்வட்டாரத்தில் பரபரப்பை ஏற்படுத்தியிருக்கிறது.

 

Do you like the story?

Please Appreciate the Author by clapping!