காய்ச்சலில் 29 வகை இருக்கின்றன; அனைத்துமே 'டெங்கு' அல்ல! அமைச்சர் செல்லூர்ராஜூ விளக்கம்


                                   காய்ச்சல் குறித்து விளக்கும் மந்திரி செல்லூர்ராஜூ

காய்ச்சலில் 29 வகை இருப்பதாகக் கண்டுபிடித்திருக்கிறார்கள். ஆனால், எந்தக் காய்ச்சல் என்றாலும், அது, 'டெங்கு' காய்ச்சல்தான் என்று சாதாரணமாகச் சொல்லி பீதியைக் கிளப்புகிறார்கள். ஆனால், அதில் உண்மை இல்லை என்கிறார் அமைச்சர் செல்லூர்ராஜூ. வெள்ளக்காடாக மாறிப்போயுள்ள சென்னை ஆர்.கே.நகர்த் தொகுதியில் அமைச்சர் செல்லூர்ராஜூ தொடர்ந்து சுற்றி வருகிறார். அவருடன் முன்னாள் அமைச்சர் மதுசூதனன், ஜெ.பேரவைச் செயலாளர் ஆர்.எஸ்.ராஜேஷ் மற்றும் கட்சியினர், மக்களைச் சந்தித்து ஆறுதல் கூறி வருகின்றனர். இன்றும் (நவம்பர்-14) ஆர்.கே.நகர்த்தொகுதி, நேதாஜிநகர் ஐந்தாவது தெருவில், வெள்ள நிவாரணப் பணிகளைப் பார்வையிட செல்லூர்ராஜூ வந்திருந்தார்.  

                                                         செல்லூர்ராஜூவும் செய்தியாளர்களும்

பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய செல்லூர்ராஜூ,  ’பொதுவாகவே பிளாஸ்டிக், டப்பா, கழிவுகளைக் கால்வாய்களில் போட்டு விடுகிறார்கள். இந்தப் பழக்கத்தை மக்கள் மாற்றிக்கொள்ள வேண்டும். அதுதான் இப்படி, அடைப்பு ஏற்படக் காரணமாகி விடுகிறது. அந்த அடைப்பால்தான் சிக்கலே. தண்ணீர் தேங்கியுள்ள இடங்களிலிருந்து நான்கு மோட்டார்களை வைத்து தண்ணீரை இறைத்துக் கொண்டிருக்கிறோம். அதிகாரிகள், அமைச்சர்கள் அனைவரும் தெருவில் இறங்கி கள நிலவரங்களை ஆய்வு செய்துகொண்டுதான்  இருக்கிறோம். ஒருபக்கம் இந்த எதிர்க்கட்சிகள், 'எந்த வேலையும் நடக்கவில்லை' என்று விடாமல் விமர்சனம் செய்தபடி பின்னால் வந்து கொண்டிருக்கிறார்கள். இன்னொரு பக்கம், இந்த மழை வந்துகொண்டிருக்கிறது. மழை மட்டும் கொஞ்சம் ஒத்துழைப்புக் கொடுத்தால், சீரமைப்புப் பணிகளை வேகமாக முடித்து விடுவோம். இதுவே தி.மு.க. ஆட்சியாக இருந்து, இப்படி விடாமல் மழை அடித்திருந்தால், அவர்கள் எங்களைப் போல வெளியே வந்து மக்களைப் பார்த்து இருப்பார்களா?


                                  ஆர்.கே.நகர்த்தொகுதியில்...

தமிழ்நாட்டில் எங்கு பார்த்தாலும், டெங்கு, டெங்கு என்கிறார்கள். டெங்கு இந்தியா முழுவதும்தான் இருக்கிறது. மொத்தம் 29 வகையான காய்ச்சல் இருப்பதாகக் கண்டுபிடித்திருக்கிறார்கள். எந்தக் காய்ச்சல் வந்தாலும் அதை டெங்கு என்று சொல்லி விடுகிறார்கள். சென்னையில் இவ்வளவு மழை பெய்தும் எந்த இடத்திலும் நோய்த்தொற்று இல்லை. அந்தளவுக்கு நாங்கள் வேலைபார்த்துக் கொண்டிருக்கிறோம்’ என்றார் செல்லூர்ராஜூ. தொகுதிமக்களோ, ’எதைச் செய்தாலும் ஆர்.கே.நகருக்கு இடைத் தேர்தல் வருவதற்குள் செய்து முடித்து விடுங்கள். அதுதான் நல்லது என்று கும்பிடுகின்றனர், பெரிதாய்.

 

Do you like the story?

Please Appreciate the Author by clapping!