அரசை விமர்சித்து கேலிச்சித்திரம் வரைந்த விவகாரம்: வழக்கை ரத்துசெய்யக் கோரி கார்ட்டூனிஸ்ட் பாலா மனு!

கார்டூனிஸ்ட் பாலா

பிரபல கார்ட்டூனிஸ்ட்  பாலா, சென்னை உயர் நீதிமன்ற மதுரை கிளையில் மனு ஒன்றைத் தாக்கல்செய்தார். அம்மனுவில், `நான் சென்னையில் வசித்துவருகிறேன். 23.10.17  அன்று நெல்லை மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாகத்தில் கந்துவட்டிக் கொடுமையால் இசக்கிமுத்து குடும்பத்தார் தீக்குளித்துப் பலியாகினர். இந்தச் சம்பவத்தைத் தொடர்ந்து, அக்டோபர் 24-ம் தேதி ஒரு கார்ட்டூன் வரைந்து என்னுடைய முகநூல் பக்கத்தில் வெளியிட்டேன். அதில், தமிழக முதல்வர், மாவட்ட ஆட்சியர், மாவட்ட காவல் துறை கண்காணிப்பாளர் ஆகியோர் அரை நிர்வாண கோலத்தில் நின்று, தீக்குளிப்பு சம்பவத்தைப் பார்ப்பதுபோல சித்திரித்திருந்தேன். இந்த நிலையில், நெல்லை மாவட்ட ஆட்சியர் அளித்த புகாரின் பேரில், என்மீது தகவல் தொழில்நுட்ப சட்டம் 2000-ன்படி வழக்குப்பதிவு செய்தனர். அதைத்தொடர்ந்து, நவம்பர் 5-ம் தேதி, சென்னைக்கு வந்த நெல்லை மாநகர குற்றப்பிரிவு ஆய்வாள,ர் என்னை இந்த வழக்கு தொடர்பாகக் கைதுசெய்தார். இந்த வழக்கின்படி, நான் எந்த குற்றச் செயலிலும் ஈடுபடவில்லை. என்னைக் கைதுசெய்தது இயற்கை நீதிக்கு முரணானது. ஆகவே, என்மீது காவல்துறையினர் பதிந்துள்ள வழக்கை ரத்துசெய்ய வேண்டும்' என பாலமுருகன் என்ற கார்ட்டூனிஸ்ட் பாலா, தனது மனுவில் கூறியிருந்தார். இந்த மனு, விரைவில் விசாரணைக்கு வர உள்ளது.

Do you like the story?

Please Appreciate the Author by clapping!