"தமிழக அரசை இனி 'மதுவரசு' என்றே அழையுங்கள்!" - பால் முகவர்கள் சங்கம் காட்டம்! | Milk agents association criticizes TN government

வெளியிடப்பட்ட நேரம்: 06:00 (15/11/2017)

கடைசி தொடர்பு:08:51 (15/11/2017)

"தமிழக அரசை இனி 'மதுவரசு' என்றே அழையுங்கள்!" - பால் முகவர்கள் சங்கம் காட்டம்!

"தமிழக அரசை இனி 'மதுவரசு' என்று மக்கள் அனைவரும் சேர்ந்து அழைப்போம். அப்போதாவது இந்த அரசுக்கு மக்கள்மீது கரிசனம் வருகிறதா என்று பார்ப்போம்!" என்று பால் முகவர்கள், தொழிலாளர்கள் நலச் சங்க மாநிலத் தலைவர் சு.ஆ.பொன்னுசாமி அதிரடியாக கருத்து தெரிவித்துள்ளார்.


இதுசம்பந்தமாக அவர், " `தமிழகத்தில் பூரண மதுவிலக்கு கொண்டுவந்து, டாஸ்மாக் கடைகள் இருக்கும் இடத்தில் பால் கடைகள் திறக்க வேண்டும்' என கடந்த தமிழக சட்டமன்ற தேர்தலில் எங்களது தமிழ்நாடு பால் முகவர்கள், தொழிலாளர்கள் நலச் சங்கம் சார்பில் கோரிக்கை வைக்கப்பட்டது. அதற்கு, அரசுத் தரப்பில் எந்த உத்தரவாதமும் தரப்படவில்லை. ஆனால், தற்போது சர்க்கரை விலையை இரண்டு மடங்கு உயர்த்தியதோடு மட்டும் நிற்காமல், இனி உளுத்தம் பருப்பு வழங்கப்பட மாட்டாது என்று அறிவித்திருக்கும் போக்கைப் பார்த்தால், தமிழகம் முழுக்க உள்ள ரேஷன் கடைகளை எல்லாம் இழுத்து மூடிவிட்டு, அந்த ரேஷன் கடைகள் இருந்த இடங்களில் எல்லாம் டாஸ்மாக் கடைகளைத் திறக்கும்போலிருக்கு தமிழக அரசு.

ஏழை, எளிய, நடுத்தர மக்கள் நலன்மீது துளியும் அக்கறையின்றி, மது விற்பனைமூலம் அரசை நடத்திவரும் அ.தி.மு.க தலைமையிலான நிர்வாகத்தை, 'தமிழக அரசு' என்று அழைப்பதைவிட, இனிமேல் தமிழகம் முழுக்க உள்ள மக்கள் அனைவரும் சேர்ந்து 'மதுவரசு' என்று அழைப்பதே சாலப் பொருத்தமாக இருக்கும். மக்களுக்கு அடிப்படைத் தேவைகளைப் பூர்த்திசெய்யாத அரசு, தமிழகம் முழுக்க உள்ள பல கோடி அன்றாடங்காய்ச்சிகளுக்கு வரப்பிரசாதமாக இருந்த ரேஷன் கடைகளுக்கு மூடுவிழா நடத்திவிட்டு, டாஸ்மாக்குகளை வீதிகள்தோறும் திறந்து, குடிமகன்களை மேலும் குடிமகன்களாக ஆக்கப் பார்க்கிறது. இந்த அரசை நடத்த, அப்பாவி குடிமகன்கள் தரும் டாஸ்மாக் லாபக் காசைக்கொண்டு திட்டங்களைச் செயல்படுத்தி, அதற்குக் காரணமான அப்பாவி ஆண்களை அல்ப ஆயுசில் மேலோகம் அனுப்ப நினைக்கும் இந்த அரசை, 'மதுவரசு' என்றே இனி வாயார அழைப்போம்!" என்றார் ஏக லந்தாய்!