ஆளுநர் செயலுக்கு எதிர்க்கட்சிகள் எதிர்ப்பு: செயலில் தவறில்லை என அமைச்சர் கருத்து!

கோவைக்கு, இரண்டு நாள் பயணமாக வந்துள்ள தமிழக ஆளுநர் பன்வாரிலால் புரோஹித், அரசு அதிகாரிகள் மற்றும் அரசியல் கட்சிப் பிரமுகர்களுடன் ஆலோசனை நடத்தினார்.  இது, மாநில உரிமைகளைப் பறிக்கும் செயல் என எதிர்க்கட்சிகள் குற்றம்சாட்டிவருகின்றன.

கு.ராமகிருஷ்ணன்

 

குறிப்பாக, ஆலோசனை நடைபெற்ற ரேஸ்கோர்ஸில் உள்ள சுற்றுலா மாளிகையை, தந்தை பெரியார் திராவிடர் கழகத்தினர், அந்த அமைப்பின் பொதுச்செயலாளார் கு.ராமகிருஷ்ணன் தலைமையில் முற்றுகையிட்டனர். அப்போது, மாவட்ட அதிகாரிகளைச் சந்தித்து, தமிழக ஆளுநர் உத்தரவு வழங்குவது மாநில உரிமைகளைப் பறிக்கின்ற, நசுக்குகின்ற செயல் என அந்த அமைப்பினர் குற்றம் சாட்டினர். "ஆளுநரே திரும்பப் போ, திரும்பப் போ" என கோஷம் எழுப்பியபடியே, அவர்கள் தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டனர். இதையடுத்து, அவர்களை போலீஸார் கைதுசெய்தனர்.

அரசியல் கட்சிகளுடன் ஆளுநர் நடத்திய ஆலோசனைக் கூட்டத்தில், அமைச்சர் எஸ்.பி.வேலுமணி, மாநிலங்களவை எம்.பி., எஸ்.ஆர். பாலசுப்பிரமணியன், பா.ஜ.க மாநில பொதுச்செயலாளர் வானதி சீனிவாசன் கலந்துகொண்டனர்.

அமைச்சர் வேலுமணி

கூட்டத்துக்குப் பிறகு செய்தியாளர்களைச் சந்தித்த வேலுமணி, "காலையிலேயே ஆளுநரை சந்தித்துவிட்டேன். வேறு வேலை இருந்ததால் கூட்டத்தில் பங்கேற்கவில்லை. மாவட்ட அதிகாரிகளை ஆளுநர் சந்தித்துப் பேசியது, ஆரோக்கியமானதுதான். இதன்மூலம் மத்திய அரசின் திட்டங்கள் வேகமாக தமிழகத்துக்குக் கிடைக்கும். இதில் எந்தத் தவறும் இல்லை" என்றார்.

எஸ்.ஆர்.பி
 

மாநிலங்களவை உறுப்பினர் எஸ்.ஆர்.பாலசுப்பிரமணியம், "ஆளுநர் அதிகாரிகளைச் சந்திப்பது என்பது, மாநில உரிமைகளைப் பறிக்கும் செயல் இல்லை. முன்னர், மோகன்லால் சுக்காரியா ஆளுநராக இருந்தபோது, அதிகாரிகளை நேரடியாகச் சந்தித்திருக்கிறார். எனவே, இது புதிய நடவடிக்கை இல்லை. மாநில அரசின் நடவடிக்கையில் பா.ஜ.க தலையீடு இல்லை" என்றார்.

வானதி சீனிவாசன்


இதைத்தொடந்து பேசிய பா.ஜ.க-வின் வானதி சீனிவாசன்,  "ஆளுநர் மக்கள் திட்டங்களைப் பார்வையிடுவது என்பது நல்ல விஷயம்.  ஆளுநர் ஆய்வு எதுவும் செய்யவில்லை. கண்காணிக்கின்ற நடவடிக்கையும் செய்யவில்லை. அவர் அதிகாரிகளைச் சந்தித்ததில் தவறில்லை" என்றார்.

Do you like the story?

Please Appreciate the Author by clapping!