வெளியிடப்பட்ட நேரம்: 07:30 (15/11/2017)

கடைசி தொடர்பு:08:14 (15/11/2017)

திருச்சி காவல்துறை ஆணையர் அருண் மாற்றப்பட்டது இதனால்தானா?

தமிழகம் முழுவதும் 7 ஐ.பி.எஸ் அதிகாரிகள் மாற்றப்பட்டுள்ளனர்.  இதில், திருச்சி காவல் ஆணையர் அருண் மாற்றப்பட்டு, அந்த இடத்துக்கு கோவை மாநகர ஆணையராக இருந்த அமல்ராஜ்,  திருச்சி காவல் ஆணையராக நியமிக்கப்பட்டுள்ளார். இந்த மாற்றம்தான் திருச்சியில் தற்போதைய ஹாட் நியூஸ்.
 
திருச்சி காவல் ஆணையர் அருண்
திருச்சியில் கொடிக்கட்டிப் பறந்த லாட்டரி விற்பனைக்கு எதிராக நடவடிக்கை எடுத்த அருண், லாட்டரி விற்பனைக்கு மூளையாகச் செயல்பட்ட, லாட்டரி அதிபர் எஸ்.வி.ஆர். மனோகரன் மற்றும் அவரது கூட்டாளிகள் 20 பேரை கைதுசெய்தார்.  அடுத்து, அந்தக் கும்பலுக்குத் துணைபோனதாக 11 போலீஸாரை அதிரடி டிரான்ஸ்பர் செய்ய உத்தரவிட்டார்.
 
இதேபோல, 'போலீஸாரின் சொந்த வாகனங்களில், 'போலீஸ்' என ஸ்டிக்கர் ஒட்டிக்கொள்ளக்கூடாது' என்று உத்தரவிட்டார். மேலும், போலி வழக்கறிஞர் ஸ்டிக்கர் ஒட்டிய வாகனங்கள், அதிவேக வாகன ஓட்டிகள் என அதிரடி கிளப்பியவர். திருச்சியில் உள்ள குழந்தைகளின் நலனில் அக்கறைகொண்டு, திருச்சி மாநகரக் காவல்துறையும் திருப்பூரில் இயங்கிவரும் 'காமன் இந்தியா' எனும் தன்னார்வ அமைப்பு, திருச்சி அரிமா சங்கங்களான ராக் டவுன், பிரீமியர், அரிஸ்டோகிராட்  உள்ளிட்ட மூன்று சங்கங்கள் ,சென்னை அப்போலோ குழந்தைகள் மருத்துவமனையுடன் இணைந்து, குழந்தைகளுக்கான மாபெரும் இலவச இதய சிகிச்சை முகாம் நடத்தினார், இதில் பல குழந்தைகளின் இதயப் பிரச்னைகள் சரி செய்யப்பட்டது. மேலும், பணியில் இருந்த காவலர்கள் குடும்பங்களுக்கு போலீஸார் உதவியுடன் நிதியுதவி வழங்கியது உள்ளிட்டவற்றைச் செய்துவந்தார். ஜல்லிக்கட்டுப் போராட்டத்தின்போது திருச்சியின் ஆணையராக இருந்தபோதும், துணை ஆணையர் மயில்வாகனனுக்கு உரிய வழிகாட்டுதல் வழங்கி, ஜல்லிக்கட்டு போராட்டத்தைச் சிறப்புற கையாளவைத்தவர்.  
 
அருண், இப்படியான அதிரடிகளைச் செய்துவந்தநிலையில், நீட் தேர்வுக்கு எதிராக ஸ்டாலின், தினகரன் உள்ளிட்டோர் நடத்திய பொதுக்கூட்டங்களைத் தடுக்க அரசு முயன்றது. அதற்கு அருணை அனுப்பித் தடை செய்ய ஆட்சியாளர்கள் முயற்சித்தார்கள். ஆனாலும், பொதுக்கூட்டங்கள் நடந்துவிட்டது. இந்தக் கோபம் ஆட்சியாளர்களுக்கு இருந்துவந்தது. சமீபத்தில், திருச்சியில் நடந்த இரட்டைக் கொலை சம்பந்தமான வழக்கில் அதிரடியாகச் செயல்பட்டு குற்றவாளிகளைக் கைதுசெய்ய நடவடிக்கை எடுத்துவந்தார். அந்தக் கொலையால் தஞ்சாவூர், திருச்சி மாவட்டங்களில் இரு சமுதாயங்களுக்கிடையே மோதல் வலுத்துவந்த நிலையில், குற்றவாளிகளைக் குண்டர் சட்டத்தின் கீழ் சிறையில் அடைக்க உத்தரவிட்டார். அதில், குற்றவாளிகள் ஜாமீனில் வெளியே வந்திருந்தனர். அந்த வழக்கின் முக்கிய குற்றவாளிகள், போலீஸாரிடம் சிக்காமல் முன்ஜாமீனில் வந்ததில் கடுப்பான போலீஸார், காவல்நிலையத்துக்கு கையெழுத்திட வந்த குற்றவாளிகளை ஆயுதம் வைத்திருந்ததாகக் கைதுசெய்தனர். இந்தப் பிரச்னையில் குற்றவாளிகள்மீது காவல் ஆணையர் அருண், காழ்ப்புணர்ச்சியோடு நடவடிக்கை எடுத்ததாக நேதாஜி சுபாஸ் சேனை என்கிற அமைப்பு, கடந்த சில நாள்களுக்கு முன்பு திருச்சி மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தின் எதிரே போராட்டம் நடத்தியது. 
 
இப்படியான சூழலில் திருச்சி காவல்துறை ஆணையர் அருண் மாற்றம் செய்யப்பட்டுள்ளார். அந்த இடத்துக்கு வரும் அமல்ராஜ், ஏற்கெனவே திருச்சி மண்டல ஐ.ஜி-யாக இருந்த காரணத்தால், திருச்சியை முழுமையாகத் தெரிந்தவர். அதனால், அடுத்த அதிரடிகள் தொடரும் என்கிறார்கள் போலீஸார்.

நீங்க எப்படி பீல் பண்றீங்க