வெளியிடப்பட்ட நேரம்: 11:38 (15/11/2017)

கடைசி தொடர்பு:11:54 (15/11/2017)

'7 மணிக்கு இருந்தது, 9 மணிக்கு காணோம்'- ஆளுநரின் தூய்மை இந்தியா விசிட் பரபர

கோவையில், இன்று காலை ஆளுநர் பன்வாரிலார் புராேஹித் திடீரென தூய்மைப் பணியில் ஈடுபட்டார். அப்போது, பல இடங்களில் வைக்கப்பட்ட புதிய குப்பைத்தொட்டிகள், இரண்டு மணி நேரத்தில் காணாமல் போனதால், அந்த பகுதி மக்களும் வியாபாரிகளும் அதிர்ச்சியடைந்தனர்.

தமிழக ஆளுநராக மகாராஷ்டிராவைச் சேர்ந்த பன்வாரிலால் புரோஹித் அண்மையில் பொறுப்பேற்றுக்கொண்டார். இந்த நிலையில், புதுச்சேரி துணை நிலை ஆளுநரைப்போல நேற்று களத்தில் இறங்கினார் . கோவை சென்ற ஆளுநர், அமைச்சர்கள், கலெக்டர் மற்றும் அதிகாரிகளுடன் ஆய்வுக் கூட்டம் நடத்தினார். அப்போது, கோவையில் நடைபெற்றுவரும் பணிகள் மற்றும் இனி மேல் செய்ய உள்ள பணிகள்குறித்து அதிகாரிகளிடம் தனித் தனியாக ஆளுநர் கேட்டறிந்தார். மேலும் தூய்மை இந்தியா திட்டத்தில், மாவட்டத்தில் நிறைவேற்றப்பட்ட பணிகள்குறித்து  கேட்டறிந்தார்.

இந்தக் கூட்டத்தில் பங்கேற்ற பின் செய்தியாளர்களிடம் பேசிய உள்ளாட்சித்துறைை அமைச்சர் எஸ்.பி.வேலுமணி, அதிகாரிகளுடன் ஆளுநர் ஆலோசனை நடத்தியதில் எந்தவித தவறும் இல்லை. இது, ஆரோக்கியமான விஷயம்தான். நமக்கு நல்ல ஆளுநர் கிடைத்துள்ளார். இதுபோன்று ஆளுநர் ஆலோசனை நடத்துவது தவறு இல்லை. அது மாநில சுயாட்சி உரிமையை எந்தவிதத்திலும் பாதிக்காது" என்றார்.

ஆனால், ஆளுநரின் நடவடிக்கையை பா.ஜ.க பாராட்டியுள்ள அதே நேரத்தில், எதிர்க்கட்சிகள் கடுமையாக விமர்சித்துள்ளன. "ஆளுநரின் இந்தச் செயல், மாநிலத்தின் சுயாட்சியைப் பறிக்கும்" என்று குற்றம் சாட்டியுள்ளன. இதனிடையே, ஆளுநரின் வருகையையொட்டி, கோவையில் பல்வேறு ஏற்பாடுகள் தடபுடலாக செய்யப்பட்டன. கிட்டத்தட்ட, முதல்வர் மற்றும் பிரதமர் வருகைக்கு செய்யப்படும் ஏற்பாடுகள் போலவே, முன்னேற்பாடுகள் நடந்தன. சாலைகள் சீரமைக்கப்பட்டன. பல்வேறு பகுதிகளில், சுவர்களுக்கு வண்ணம் பூசப்பட்டது. அவர், ஆய்வுசெய்யும் பகுதிகள் நேற்றுமுதல் பளீச் தூய்மையில் பராமரிக்கப்பட்டன.

 காந்திபுரம் பேருந்துநிலையத்தில், இன்று காலை 7 மணிக்கு ஆளுநர் தூய்மைப் பணியில் ஈடுபட்டார். ஆளுநர் தூய்மை செய்த இடத்தில் மட்டும், பெயருக்கு சில குப்பைகள் போடப்பட்டது. மற்ற பகுதிகள், பளிச்சென்று சுத்தம் செய்யப்பட்டிருந்தது. பேருந்துநிலையம் மற்றும் அதைச் சுற்றியுள்ள நஞ்சப்பா சாலை, புதிய மேம்பாலத்தை ஒட்டிய பகுதிகளில், புதிதாக குப்பைத் தொட்டிகள் வைக்கப்பட்டன. ஆனால், இந்த நிகழ்ச்சி எல்லாம் முடிந்து, ஆளுநர் சென்ற சில மணி நேரத்திலேயே, அந்த குப்பைத் தொட்டிகள் மாயமாகின. பெயரளவுக்கு வைக்கப்பட்ட குப்பைத் தொட்டிகள், காலை 9 மணிக்கு அந்த இடத்திலிருந்து அகற்றப்பட்டன. குப்பைத் தொட்டி கிடைத்துவிட்ட சந்தோஷகத்தில் இருந்த அந்தப் பகுதி வியாபாரிகள் மற்றும் பொதுமக்கள், குப்பைத் தொட்டிகள் காணாமல் போனதைப் பார்த்து அதிர்ச்சியடைந்தனர்.

"தூய்மைப்பணியில் ஆளுநர் ஈடுபடுகிறார் என்ற காரணத்தாலேயே, அங்கு புதிய குப்பைத் தொட்டிகள் வைக்கப்பட்டன. இப்படி ஏன் அதிகாரிகள் நடந்துகொள்கிறார்கள்... இதுதான் தூய்மை இந்தியாவின் லட்சணமா?" என்று குமுறினார்கள் வியாபாரிகள்.