மீனவர்கள் மீது துப்பாக்கிச் சூடு நடந்த கடல் பகுதியில் போலீஸார் ஆய்வு!

இந்திய கடலோர காவல்படையினர் மீனவர்கள் மீது துப்பாக்கிச் சூடு நடத்திய கடல் பகுதியில் கடலோர பாதுகாப்புக் குழும போலீஸார் ஆய்வு மேற்கொண்டனர்.

ராமேஸ்வரத்தில் இருந்து கடந்த திங்கள் கிழமை மீன்பிடிக்கச் சென்ற மீனவர்கள்மீது இந்திய கடலோர காவல்படையினர் துப்பாக்கிச் சூடு நடத்தினர். இந்தச் சம்பவத்தில் மீனவர்கள் பிச்சை, ஜான்சன் ஆகியோர் கைகளில் காயம் ஏற்பட்டது. மேலும், விசாரணை என மீனவர்களைப் பிடித்த கடலோர காவல்படையினர் அவர்களை இரும்புக் கம்பி கொண்டு தாக்கியுள்ளனர். இந்நிலையில், நேற்று காலை கரை திரும்பிய மீனவர்கள் சிகிச்சைக்காக ராமேஸ்வரம் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

கடலோர காவல்படையை கண்டித்து ராமேஸ்வரம் மீனவர்கள் வேலை நிறுத்தம் 
 

இந்திய கடலோர காவல்படையினரின் இந்த நடவடிக்கைக்கு எதிர்ப்பு தெரிவித்து ராமேஸ்வரம் மீனவர்கள் இன்று வேலைநிறுத்தம் செய்யவும், நாளை கண்டன ஆர்ப்பாட்டம் நடத்தவும் முடிவு செய்திருந்தனர். இதன்படி இன்று காலை மீன்பிடிக்கச் செல்ல வேண்டிய ராமேஸ்வரம் மீனவர்கள் கடலுக்குச் செல்லவில்லை. இதனால் ராமேஸ்வரம் மீன்பிடி துறைமுகத்தில் 800-க்கும் மேற்பட்ட விசைப்படகுகள் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளனர். சுமார் 20 ஆயிரத்துக்கும் மேற்பட்ட மீனவர்கள் இந்த வேலைநிறுத்தத்தில் பங்கேற்றுள்ள நிலையில், சுமார் 2 கோடி அளவுக்கான வர்த்தகம் பாதிக்கப்பட்டுள்ளது. நாளை ராமேஸ்வரம் பேருந்து நிலையத்தில் மீனவர்கள் கண்டன ஆர்ப்பாட்டம் நடத்துகின்றனர்.

இதனிடையே, மீனவர்கள்மீது துப்பாக்கிச் சூடு நடத்திய இந்திய கடலோர காவல்படையினர்மீது கொலை முயற்சி வழக்குப் பதிவு செய்துள்ள மண்டபம் கடலோர பாதுகாப்புக் குழும போலீஸார், இது தொடர்பான விசாரணையை தொடங்கியுள்ளனர். இன்று காலை ராமேஸ்வரம் துறைமுகத்தில் நிறுத்தப்பட்டுள்ள, தாக்குதலுக்கு உள்ளான விசைப்படகை துணைக் கண்காணிப்பாளர் ரவிச்சந்திரன் தலைமையிலான போலீஸார் ஆய்வு செய்ததுடன், துப்பாக்கிச் சூடு நடத்தப்பட்ட கடல் பகுதியிலும் ஆய்வு மேற்கொண்டனர். மேலும், காயமடைந்த மீனவர்களிடம் சம்பவம்குறித்து விசாரணை நடத்தினர்.

இந்நிலையில், ராமேஸ்வரம் அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்றுவரும் மீனவர்களை மாவட்ட தி.மு.க செயலாளர் சுப.த.திவாகரன் மற்றும் கட்சி நிர்வாகிகள் சந்தித்து ஆறுதல் கூறினர்.

Do you like the story?

Please Appreciate the Author by clapping!