ஆளுநரின் ஆய்வுக்கு எதிராக மு.க.ஸ்டாலின் , டி.டி.வி.தினகரன் போர்க்கொடி!

banwarilal

'தமிழக அரசு நிர்வாகத்தை ஆய்வுசெய்வதை ஆளுநர் பன்வாரிலால் புரோஹித் உடனடியாகக் கைவிட வேண்டும்' என்று எதிர்க்கட்சித் தலைவர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார். 


தமிழக ஆளுநர் பன்வாரிலால் புரோஹித், இரண்டு நாள் பயணமாக கோயம்புத்தூர் சென்றுள்ளார். அங்கு, அரசு அதிகாரிகளுடன் ஆலோசனையில் ஈடுபட்டார். இன்று 'தூய்மை இந்தியா' திட்டம் குறித்தும் ஆய்வுசெய்தார். இதற்கு, அரசியல் கட்சித் தலைவர்கள் கடுமையான எதிர்ப்புத் தெரிவித்தனர். இதுகுறித்து அறிக்கை வெளியிட்ட எதிர்க்கட்சித் தலைவர் மு.க.ஸ்டாலின், 'ஆளுநர் பன்வாரிலாலின் ஆய்வு நடவடிக்கை சீரான நிர்வாகத்தைச் சிதைப்பதாக உள்ளது. நிர்வாகத்தைச் சீர்படுத்த விரும்பினால், முதலமைச்சர் பழனிசாமி தலைமையிலான அரசை பெரும்பான்மையை நிரூபிக்க, ஆளுநர் உத்தரவிட வேண்டும்.

மாநில நிர்வாகத்தில் தலையிட புதுச்சேரி ஆளுநருக்கு உள்ள குறைந்தபட்ச அதிகாரம்கூட, தமிழக ஆளுநருக்கு கிடையாது. ஆளுநரின் இத்தகைய ஆய்வு, மத்திய-மாநில அரசுகளின் உறவுகளுக்கோ, சீரான நிர்வாகத்துக்கோ துளியும் உதவாது. ஆளுநர் இதுபோன்ற ஆய்வுகளை உடனடியாக நிறுத்த வேண்டும்' என்று குறிப்பிட்டுள்ளார்.

இந்நிலையில், ஆளுநரின் ஆய்வுகுறித்து தெரிவித்துள்ள டி.டி.வி.தினகரன், 'ஆளுநரின் ஆய்வு, மாநில அரசின் நிர்வாகத்தில் தலையிடுவதுபோல உள்ளது. புதுச்சேரி, டெல்லியில் ஆளுநர்களின் தலையீட்டால் அம்மாநில நிர்வாகம் ஸ்தம்பித்தது போன்ற நிலை தமிழகத்துக்கும் வரலாம். ஜெயலலிதா இருந்திருந்தால், இத்தகைய ஆய்வுக்கு அனுமதித்திருக்க மாட்டார்' என்று குறிப்பிட்டுள்ளார். 

Do you like the story?

Please Appreciate the Author by clapping!